காவிரி மேம்பாட்டு ஆணையம் அமைப்பது சாத்தியமில்லை என்ற அமைச்சரின் நிதின் கட்காரி பேச்சுக்கு சிபிஐ(எம்) கண்டனம்

காவிரி மேம்பாட்டு ஆணையம் அமைப்பது சாத்தியமில்லை: மத்திய நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் நிதின் கட்காரி பேச்சுக்கு சிபிஐ(எம்) கண்டனம்

மத்திய நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் சென்னையில் ஒரு பத்திரிகை அலுவலகத்திற்கு சென்று பேசும் போது “காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் காவிரி மேம்பாட்டு ஆணையத்தை அமைப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை. மத்திய அரசு தமிழகத்தையும், கர்நாடகத்தையும் இரண்டு கண்களைக் போல் பார்க்கிறது” என கூறியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

பல ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகு உச்சநீதிமன்றம் இறுதியாக காவிரி பிரச்சனையில் வழங்கிய தீர்ப்பில் மத்திய அரசு 6 வார காலத்திற்குள் காவிரி மேம்பாட்டு ஆணையத்தை அமைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து உடனடியாக அதனை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சரே மேற்கண்டவாறு பேசியிருப்பது உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகும்.

ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு அனைத்துக் கட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மேலாண்மை வாரியத்தை அமைக்க வற்புறுத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர், மத்திய அரசு காவிரி மேம்பாட்டு ஆணையத்தை அமைக்க உள்ளதாக சூசகமாக தெரிவித்தார். மேலும் பாஜக தலைவர்கள் ஊடகங்களில் மத்திய அரசு மேம்பாட்டு ஆணையத்தை அமைக்கும் என பேட்டியளித்துள்ளார்கள். இந்நிலையில் இதற்கு நேர்மாறாக மத்திய அமைச்சர் காவிரி மேம்பாட்டு ஆணையம் அமைப்பது சாத்தியமில்லை என்று சொல்லியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

மேலும் சென்னையில் 24.02.2018 அன்று அரசு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதலமைச்சர்  காவிரி மேம்பாட்டு ஆணையத்தை அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுப்பிய போது அதனை பிரதமர் உதாசீனம் செய்துள்ளார். இவற்றை வைத்து பார்க்கும் போது மத்திய அரசு குறுகிய அரசியல் நோக்கத்திற்காக காவிரி மேம்பாட்டு ஆணையத்தை அமைக்காமல் மீண்டும் இந்த பிரச்சனையை கிடப்பில் போடுவதற்கு திட்டமிடுவதாகவே கருத வேண்டியுள்ளது.

எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மறுக்கும் பாரதப் பிரதமர் மீதும், நிதின் கட்காரி மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தொடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் உடனடியாக மத்திய அரசின் தமிழக விரோதப் போக்கை கண்டித்தும், அதிக அதிகாரங்களை கொண்ட காவிரி மேம்பாட்டு ஆணையத்தை உடனடியாக அமைக்க வற்புறுத்திட ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...