காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி நடைபெறும் அக் 17-18, ரயில் மறியல் போராட்டத்திற்கு முழுஆதரவு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி நடைபெறும்

அக்டோபர் 17-18, தொடர் ரயில் மறியல் போராட்டத்திற்கு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி முழுஆதரவு

காவிரி நதி நீர் பிரச்சனையில் அக்டோபர் 4-ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால்,  அக்டோபர் 3-ம் தேதி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது; நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பின்னரே அமைக்க முடியும்; இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட முடியாது” என்றும் தெரிவித்தது.

அரசியல் சட்டத்தின்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் காவிரி நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்குமுறை குழுவையும் அமைக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். மத்திய பாஜக அரசு இந்த கடமையை நிறைவேற்றவில்லை. மத்திய பாஜக அரசு தனது கடமையிலிருந்து தவறிவிட்டது மட்டுமல்ல உச்சநீதிமன்ற, நடுவர்மன்றத் தீர்ப்புக்கே எதிராக செயல்படுகிறது.  இது தமிழக மக்களுக்கு மத்திய அரசு இழைத்துள்ள மிகப்பெரிய துரோகமாககும்.

இதனால், தமிழகத்தின் தண்ணீர் உரிமை பறிபோகும் ஆபத்து மட்டுமல்ல, காவிரி நீர் டெல்டா பகுதிகள் பாதிக்கப்படுவதோடு குடிநீர் ஆதாரத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இத்தகு நிலையில் மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் மற்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அக்டோபர் 17 மற்றும் 18ம் தேதியன்று தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் ரயில் மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.

தமிழக மக்களின் முக்கிய பிரச்சனையை முன்னிறுத்தி நடைபெறும் தொடர் ரயில் மறியல் போராட்டத்தை வெற்றிபெறச் செய்திட கட்சி அணிகளுக்கு அறைகூவல் விடுப்பதோடு, இவ்வியக்கத்திற்கு ஆதரவாக அணி திரள வேண்டுமென அனைத்துப் பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...