காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சனையில் அதிமுக தமிழகத்தை ஆளுகிற தகுதியை இழந்துவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு 3 மாத அவகாசம் கோருவது தமிழகத்தை வஞ்சிப்பதாகும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த 6 வார காலத்தை கடத்திய பின்னர் தற்போது மீண்டும் மூன்றுமாத கால அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. உண்மையில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு 24 மணி நேர அவகாசமே போதுமானது. ஆனால், 6 வார காலம் இப்பணியினை முடக்கி விட்டு இப்போது மேலும் அவகாசம் கோருவது இப்பிரச்சனையை கிடப்பில் போட்டு, தமிழகத்தை வஞ்சிக்கும் உள்நோக்கம் கொண்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. மத்திய அரசின் இப்போக்கிற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் இவ்வாறு அவகாசம் அளிக்கக் கூடாது என வற்புறுத்தும் வகையில் மனுவினை தாக்கல் செய்ய வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க மறுப்பது இது முதல்முறையல்ல. கடந்த 21.9.2016 அன்று மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோது அதை ஏற்க மறுத்து நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்மனு தாக்கல் செய்ததை நாடே அறியும். எனவே மீண்டும் அவகாசம் கேட்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பை உதாசீனப்படுத்தும் உள்நோக்கம் கொண்டது என்பதை கவனத்தில் கொண்டு மத்திய அரசுக்கு அவகாசம் கொடுக்கக் கூடாது என உச்நீதிமன்றத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சனையில் அதிமுக தமிழகத்தை ஆளுகிற தகுதியை இழந்துவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் நீர்ஒழுங்குமுறை குழுவினை மத்திய அரசு 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் கடந்த 16.02.2018 அன்று தீர்ப்பு வழங்கியது.

இத்தீர்ப்பின் மீது பல அரசியல் கட்சிகளும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்த போதும் தீர்ப்பை செயல்படுத்த மத்திய அரசாங்கத்தை வற்புறுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்திட தமிழக அரசின் சார்பில் கடந்த 22.02.2018 அன்று அனைத்துக்கட்சி மற்றும் விவசாய சங்கங்களின் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டியிருந்தார்கள். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களும் முதலமைச்சரின் முன்முயற்சிக்கு பாராட்டு தெரிவித்ததோடு இதுபோன்று காவிரி பிரச்சனையில் தொடர்ச்சியாக ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்கிற பாகுபாடின்றி அனைவரும் கருத்தொற்றுமையோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென வற்புறுத்தினார்கள். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

“தமிழ்நாட்டுக்குரிய பங்கு நீரினை உரிய காலத்தில் வழங்குவதற்கு ஏதுவாக, அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உச்ச நீதிமன்றத்தின் 16.2.2018-ம் நாளிட்ட தீர்ப்பின்படி, ஆறு வார காலத்திற்குள் மத்திய அரசு அமைக்கக்கோரி வலியுறுத்தப்படும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கு, காவிரி நடுவர் மன்றம் இறுதி ஆணையில் வழங்கிய நீரில், 14.75 டிஎம்சி அடி நீரைக் குறைத்து கர்நாடகத்திற்கு கூடுதலாக வழங்கி உத்தரவிட்டது குறித்து, அனைத்துக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளை முழுமையாக ஏற்றுக் கொண்டு, சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் தலைமையில், அனைத்துக்கட்சித் தலைவர்கள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவுடன் பிரதமர் மோடியை விரைவில் நேரில் சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்கவும் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பிலுள்ள தமிழ்நாட்டிற்குச் சாதகமான அம்சங்களை உடனடியாக நிறைவேற்றித் தருமாறும் வலியுறுத்தப்படும்”.

மேற்கண்ட இத்தீர்மானங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி தமிழக தலைவர்களை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கி தர மறுத்துவிட்டார். இப்பின்னணியில் கடந்த 15.3.2018 அன்று மீண்டும் மத்திய அரசை வற்புறுத்துகிற வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் மத்திய அரசு அணு அளவு கூட அசைந்து கொடுக்கவில்லை.

இறுதியாக ஆறுவார காலக்கெடு 29.3.2018 அன்றுடன் முடிவடைந்துவிட்டது. ஆயினும் மத்திய அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமலாக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் தமிழகத்திற்கு பச்சைத் துரோகத்தை இழைத்துள்ளது. இந்நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்கு தமிழக அரசு மீண்டும் அனைத்துக்கட்சி தலைவர்கள் மற்றும் விவசாய சங்கங்களின் தலைவர்களின் கூட்டத்தை நடத்தி தமிழகத்தின் ஒருமித்த குரலாக மத்திய அரசை வற்புறுத்திட நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு இதனை செய்ய மறுத்துவிட்டு தற்போது தன்னிச்சையாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது எனவும், அதிமுக சார்பில் ஏப்ரல் 3 அன்று உண்ணாவிரதப் போராட்டம் எனவும் அறிவித்துள்ளது.

காவிரி பிரச்சனையில் மத்திய அரசின் துரோகத்தை எதிர்த்து ஒவ்வொரு கட்சியும் தனித்தனியான இயக்கங்களை நடத்த ஆலோசிப்பது இயற்கையானதே. இருப்பினும் தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளையும், அமைப்புகளையும் ஒருங்கிணைத்து ஒருமித்த குரலை மத்திய அரசுக்கு எதிராக எழுப்ப வேண்டிய கடமையினை நிறைவேற்ற வேண்டியது ஆளுங்கட்சி என்ற முறையில் அதிமுகவின் பிரதான பொறுப்பாகும்.

இதை நிறைவேற்றாமல் தன்னிச்சையாக அதிமுக போராட்டங்களை அறிவித்திருப்பது ஒன்றுபட்ட தமிழக மக்களின் குரலை பலவீனப்படுத்தி மத்திய அரசுக்கு மறைமுகமாக சேவகம் செய்யும் உள்நோக்கம் கொண்டதாகும்.

ஆகவே, தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்துவரும் மத்திய அரசுக்கு துணைபோவதாகவே அஇஅதிமுகவின் செயல் அமைந்துள்ளது. இதன் மூலம்  அஇஅதிமுக தமிழகத்தை ஆளுகிற தகுதியை இழந்துவிட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி பிரச்சனையில் நமது உரிமையை நிலைநாட்ட அரசியல் வேறுபாடுகளின்றி அனைத்து கட்சிகளும், அனைத்து விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி பொதுமக்களும் ஒன்றிணைந்து போராடுவது மட்டுமே தீர்வாக அமையும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது.

மத்திய மோடி அரசின் நயவஞ்சகத்தை முறியடிக்க மேற்கண்ட அடிப்படையில் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...