காஷ்மீரில் ஆதாயம் தேட மதவெறியை தூண்டும் பாஜக! CPIM எச்சரிக்கை

புதுதில்லி. செப். 20-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழுக் கூட்டம் செப்டம்பர் 17 – 19 தேதிகளில் தலைநகர் தில்லியில்மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் நடைபெற்றது. கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஜம்மு-காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உரி என்னுமிடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் 17 பேர் கொல்லப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்றுள்ள எண்ணற்ற மரணங்கள், பலர் காயங்கள் அடைந்திருப்பது குறித்தும்,கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து சச்சரவுகள் நடைபெற்றுவருவது குறித்தும், எல்லைக்கு அப்பாலிருப்பவர்களின் உதவி மற்றும் உடந்தையுடன் நடைபெற்றுவரும் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்தும் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி, மத்தியக்குழு தனியே ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை மத்தியக்குழு கண்டிக்கிறது.காஷ்மீர் சென்றுவிட்டு திரும்பிவந்த அனைத்துக்கட்சித் தூதுக்குழு ஒருமனதாக ஓர் அறிக்கை வெளியிட்டது, அதனை அரசாங்கம் ஒப்புக்கொண்டிருந்த போதிலும், அதில் ‘மத்திய, மாநில அரசாங்கங்கள் அனைத்துத் தரப்பினருடனும் ஓர் அரசியல் பேச்சுவார்த்தையை உடனடியாகத் துவங்கிட வேண்டும்’ என்று ஒப்புக்கொண்டபோதிலும், பாஜக அரசாங்கம் அதன்அடிப்படையில் செயல்படவில்லை. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, ஸ்ரீநகரில் இருந்த அனைத்துபெரிய மசூதிகளும் ஈத் பெருவிழா அன்று மூடப்பட்டிருந்தது. ஈத்கா தொழுகைகளின்போது கூட தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை. ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜமியா மசூதி இதற்குமுன்பு இயற்கைப் பேரிடர் நடந்த 1821ல்தான் மூடப்பட்டிருந்தது. அதன் பின்னர் இப்போது முதன்முறையாக ஈத் தொழுகை நடைபெறும் நாளன்று மூடப்பட்டது. இது ஓர் ஆபத்தான நிலைமையாகும். மத்திய அரசாங்கமும், இந்துத்துவா சக்திகளும் பாகிஸ்தான் எதிர்ப்பு நிலை மற்றும் பாதுகாப்புப் படையினரைக் கொண்டு அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மதவெறித் தீயைக் விசிறிவிட முடியும்என்றும் அதன்மூலம் விரைவில் வரவிருக்கும் தேர்தலில் பாஜக ஆதாயம் அடைந்திட முடியும் என்றும் கருதுவதுபோல் தோன்றுகிறது. இது அபாயகரமானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அமைதியையும் இயல்பு வாழ்க்கையையும் மீட்டெடுக்க இருவிதமான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று கோருகிறது. ஒருபக்கத்தில் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மறுபக்கத்தில் அனைத்துத் தரப்பினருடனும் உடனடியாக பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிட வேண்டும். இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கிட வேண்டும்.

பசுப் பாதுகாப்பு

மாட்டிறைச்சி சாப்பிடுவது குறித்து போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் மீது கொலைபாதகத் தாக்குதல்களை நடத்தியுள்ள பசுப் பாதுகாப்பு சமிதிகளின் நாசகரமான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பசுப் பாதுகாப்புக் குழுக்கள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது. சட்டத்தை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கும் காவல்துறைக்கும் உண்டு. சிலர் தறிகெட்டு, வெறித்தனமான நடவடிக்கைகள் எடுத்திட அனுமதிக்க முடியாது. பசுப் பாதுகாப்புக் குழுக்கள்உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும்.

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள்

மாட்டிறைச்சி சாப்பிடுவது, பசுப் பாதுகாப்பு என்றபெயரில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதுடன், மேலும் பல்வேறு பெயர்களிலும் தாக்குதல்கள் தொடர்கின்றன. முஸ்லிம் மதச் சிறுபான்மையினர் மீதான இத்தாக்குதல்களை மத்தியக்குழு கடுமையாகக் கண்டிக்கிறது. சமீபத்தில் கடந்த வாரம் உத்தரப்பிரதேசம், தலைநகர் தில்லி அருகேயுள்ள பிஜ்னூர் என்னுமிடத்திலும், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் என்னுமிடத்திலும் இவ்வாறுஇரு கொடூரமான தாக்குதல்கள் நடந்துள்ளன. இவ்விரு இடங்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக்குழுவினர் சென்றிருந்தனர். மற்றொரு தூதுக்குழு, முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக கொடூரமான முறையில் தாக்குதல்கள் நடைபெற்று, பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிற, ஹரியானா மாநிலம் மேவாட் கிராமத்திற்கும் சென்றது. பல்வேறு விதங்களிலும் மதவெறித் தூண்டிவிடப்படுவது குறித்தும், ஆர்எஸ்எஸ்-பாஜக வகையறாக்களால் இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் வெறித்தனமாகப் பின்பற்றப்படுவது குறித்தும் மத்தியக் குழு ஆராய்ந்தது. இந்தியாவின் மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் அரசமைப்புச்சட்ட குடியரசைப் பாதுகாத்திட அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளும் அணிதிரள வேண்டும் என்று மத்தியக்குழு அறைகூவி அழைக்கிறது.

மக்கள் மீது அதிகரித்து வரும் சுமைகள்

பொருளாதார நிலைமைகள் மோசமாகி வருவது தொடர்கிறது. தொழில்துறை மற்றும் உற்பத்தித் துறை ஆகியவற்றில் வளர்ச்சி விகிதங்கள் எதிர்மறையில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. எதிர்காலத்தில் மிகவும் மோசமாகவுள்ள நிலைமை என்னவெனில், மைனஸ் 30 சதவீத அளவிற்கு மூலதனப் பொருள்கள் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாகும். எரிசக்தித் துறை ஒட்டுமொத்தமாக நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக கணிசமான அளவிற்கு தொழில் மந்தம் ஏற்படும். இதன் விளைவாக வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் அதிகமாகும். விவசாயநெருக்கடி ஆழமாகிக் கொண்டிருக்கிறது. ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதன் மூலம் பெரும்பான்மையான மக்கள் தங்களுக்குக் கிடைத்துவந்த சிறு அளவு நிவாரணத்தைக் கூட பெறமுடியாத நிலைஏற்பட்டுள்ளது.உணவுப்பொருள்களின் விலைகள் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக விலைவாசி உயர்வு தொடர்கிறது. இதனால் பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதார நிலைமைகள் கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.

அயல்துறைக் கொள்கையில் மாற்றம்

பாஜக அரசாங்கத்தின் கீழ் இந்தியாவின் அயல்துறைக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டிருப்பது குறித்து மத்தியக் குழு ஆராய்ந்தது. அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளாமல் இருப்பது அந்த இயக்கத்தின் வரலாற்றில் இதுவே முதன்முறையாகும். அமெரிக்காவின் நிர்ப்பந்தங்களுக்கு சரணடைந்து, அதன் இளைய பங்காளியாக மாறிய பின்னர், பாஜக அரசாங்கமானது இந்தியாவால் நீண்ட நெடுங்காலமாகப் பின்பற்றிப் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்த சுயேட்சையான அயல்துறைக் கொள்கை நிலைப்பாடுகளும் கூட மிக வேகமாக பலவீனப்படுத்தப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள கடல்வழி மற்றும் வான்வழி பரிவர்த்தனை ஒப்பந்தக் குறிப்பாணை (LEMOA- Logistic Exchange Memorandum of Agreement) என்ற பெயரிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டிருப்பதன் மூலம், இந்தியா அமெரிக்காவின் ராணுவக் கூட்டணி நாட்டின் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க விமானப் படையும், கப்பல் படையும் இந்திய விமானத் தளங்கள் மற்றும் கப்பல்படைத் தளங்களைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புதல், சேவைகளை தொடர்ந்து பெற்றுக்கொள்ளும். அமெரிக்க ஆயுதப் படையினர், இதர நாடுகளில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதுகூட, இந்திய ராணுவத் தளங்களை இந்த ஒப்பந்தத்தின் மூலம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மோடி அரசாங்கம், இந்தியாவின் இறையாண்மையுடன் சமரசம் செய்துகொண்டு, இந்தியாவின் கேந்திர சுயாட்சியை (strategic autonomy) சரண் செய்துவிட்டது.

கேரளம்

கேரள இடது ஜனநாயக முன்னணி, தன்னுடைய தேர்தல்பிரச்சாரத்தில் கூறிய உறுதிமொழிகளில் சிலவற்றை ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 100 நாட்களில் நிறைவேற்றி இருப்பதை மத்தியக் குழு கவனத்தில் கொண்டது. மேலும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடது ஜனநாயகமுன்னணிக்கு எதிராக கேரளாவின் பல பகுதிகளில் ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரங்கள் வன்முறை தொடர்பாகவும் தொடர்ந்து மேற்கொண்டு வரும் விஷமப் பிரச்சாரம் குறித்தும் மத்தியக் குழு ஆராய்ந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்வதன் மூலம் தன் வன்முறை நடவடிக்கைகளை மூடிமறைக்க ஆர்எஸ்எஸ்/பாஜக முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ்/பாஜகவின் இந்த கபட நாடகம் நாடு முழுவதும் தோலுரித்து அம்பலப்படுத்தப்படும். அமைதியை விரும்பும் கேரள மக்கள் மதவெறியர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.

வங்கம்

வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுமுன்னணிக்கும் எதிராக பாஜகவின் கள்ள மவுனத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் அரசியலைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இடது முன்னணி வெற்றி பெற்றிருந்த பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளையும் பணபலம் மற்றும்ஆயுத பலம் மூலம் கைப்பற்றும் வேலைகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் இறங்கி இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தையும் ‘கைப்பற்றுவோம்’ என்றும் பகிரங்கமாகவே திரிணாமுல் காங்கிரஸ் மிரட்டியுள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக மக்களின் போராட்டம் தொடர்கிறது.

திரிபுரா

ஐபிஎப்டி எனப்படும் (ஐஞகுகூ- ஐனேபைநnடிரள ஞநடியீடந’ள குசடிவே டிக கூசiயீரசய)இயக்கம், திரிபுராவில் பழங்குடியினருக்குத் தனி மாநிலம்வேண்டும் என்கிற பிரிவினைப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. இத்தகைய வன்முறைப் பிரச்சாரத்தை மத்தியக்குழு கடுமையாகக் கண்டனம் செய்கிறது. ஆகஸ்ட் 23 அன்று நடைபெற்ற வன்முறை நிகழ்வு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, அமைதி மற்றும் இயல்பு வாழ்க்கை மீண்டும் இடது முன்னணி அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டுவிட்டது. இந்தத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளார்கள். மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட கும்பலுடன் திரிணாமுல் காங்கிரசும் தீவிரமான அளவில் நடவடிக்கைகளில் இறங்கியது. திரிபுராவில் இடது முன்னணி அரசாங்கத்தை பலவீனப்படுத்திட மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை திரிபுரா மக்கள் சகித்துக்கொள்ளமாட்டார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கிறது.

கொல்கத்தா பிளீனம் முடிவுகள் அமலாக்கம் தொடர்பாக

ஸ்தாபனம் குறித்த கொல்கத்தா பிளீனத்தின் முடிவுகளின்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்திட கட்சி மையம் மற்றும் அரசியல் தலைமைக்குழு / மத்தியக்குழு செயல்பாடுகளை வலுப்படுத்திட மேற்கொள்ளப்பட வேண்டிய துல்லியமான நடவடிக்கைகள் குறித்து மத்தியக்குழு விவாதித்து, முடிவுகளை எடுத்துள்ளது. முன்வைக்கப்பட்ட திட்டத்தை விவாதித்து நிறைவேற்றியுள்ளது.

அக்டோபர் புரட்சி நூற்றாண்டு

அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டில் அரசியல் கூட்டங்கள், தத்துவார்த்த பிரச்சாரங்கள், கலாச்சார நிகழ்வுகள்/கலை/இசை/திரைப்பட விழாக்கள் நடத்துவது என்றும் அக்டோபர் புரட்சியின் பங்களிப்புகள் இன்றைக்கும் பொருந்தக்கூடிய ஒன்று என்று பிரச்சாரம் செய்திடவும் முடிவு செய்துள்ளது. 2016 நவம்பர் 7 அன்று தொடங்கி, 2017 நவம்பர்7 வரை ஓராண்டு காலத்திற்கு இந்த விழாக்கள் நடைபெறும்.

மத்தியக்குழு அறைகூவல்கள்

  • மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள சுமைகளுக்கு எதிராக அனைத்து மாநிலங்களிலும் பிரச்சாரங்கள், கிளர்ச்சிகளை தீவிரப்படுத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாய நெருக்கடி, விவசாயிகளுக்கு நிவாரணம், நிலப் பிரச்சனை மற்றும் பொது விநியோக முறை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு கட்டாய ஆதார் அட்டை பதிவு செய்யப்பட வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது ஆகிய பிரச்சனைகளும் உள்ளூர் பிரச்சனைகளும் எடுத்துக் கொள்ளப்படும்.
  • காஷ்மீர் பிரச்சனை குறித்து அனைத்து மாநிலங்களிலும் பிரச்சாரம் நடத்தப்படும்.
  • ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளுடன் இணைந்து மதவெறிக்கு எதிரான மேடை அமைக்கப்படும்.
  • அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் சரணடைந்துள்ள பாஜக அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
  • மாபெரும் அக்டோபர் சோசலிஸ்ட் புரட்சி நூற்றாண்டை விரிவாக கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

English Version:- http://cpim.org/pressbriefs/cc-communiqu%C3%A9-5

Check Also

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி டி.கே.ரங்கராஜன் பிரதமருக்கு அவர்களுக்கு கடிதம்…

தடுப்பூசி தயாரிக்கும் பணியில் செங்கல்பட்டு `ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை விரைவில் செயல்படுத்திட கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...