காஷ்மீரில் கைது செய்துள்ள அனைவரையும் விடுதலை செய்திடுக! பிரதமருக்கு, சீத்தாராம் யெச்சூரி கடிதம்

காஷ்மீரில் கைது செய்து அடைத்து வைத்துள்ள அனைவரையும் விடுதலை செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு:

“நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலமாக, ஜம்மு-காஷ்மீரில் அரசமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35-ஏ பிரிவுகளை திடீரென்று ரத்து செய்து, கடும் கட்டுப்பாடுகளைப் பிறப்பித்து இப்போது ஆறு மாதங்களாகிவிட்டன.

2019 ஆகஸ்ட் 4-5 தேதிகளின் இரவிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு சிறைகளிலும் மற்றும் வீட்டுக்காவல்களிலும் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டு அனைத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா போன்ற முன்னாள் முதல் அமைச்சர்களும், மத்திய அமைச்சர்களும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த எங்கள் கட்சியின் உறுப்பினர் முகமது யூசுப் தாரிகமி மற்றும் பல்வேறு தரப்பினரும் அடங்குவர்.

இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருக்கிற அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், இந்திய அரசமைப்புச்சட்டம் உத்தரவாதப்படுத்தியுள்ள சுதந்திரம் மற்றும் உரிமைகளை அவர்களுக்கு அளித்திட வேண்டும் என்பதற்காகவும் இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

அங்கே முடக்கிவைக்கப்பட்டுள்ள தகவல் தொடர்புகளை உடனடியாக நீக்கிட வேண்டும் என்றும், ஜனநாயக நடைமுறைகளையும் உடனடியாக மீளவும் அளித்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவை அனைத்தும் அப்பிராந்தியத்தின் பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. அம்மக்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பசி-பஞ்சம்-பட்டினி நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.

அம்மாநிலம், இந்திய ஒன்றியத்துடன் இணையும்போது அம்மாநில மக்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் கவுரவிக்கப்பட வேண்டும். இப்பிரச்சனைகளை மிகவும் ஆழமான முறையில் நீங்கள் பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...