காஷ்மீரும் தமிழகமும் இரு முனைகளின் ஒரே குரல்!

முகமது யூசுப் தாரிகாமி

மாநிலச் செயலாளர், ஜம்மு-காஷ்மீர், சிபிஐ(எம்)

சுதந்திர இந்தியாவின் மேல்முனையில் இருக்கும் காஷ்மீருக்கும் கீழ்முனையில் இருக்கும் தமிழ்நாட்டுக்கும் வரலாற்றின் ஆரம்பத்திலிருந்தே ஏராளமான ஒற்றுமைகளை அடுக்கலாம். தனித்ததொரு மொழி, தனித்ததொரு கலாச்சாரம், தனித்ததொரு அடையாளம். இரு பிராந்தியங்களுமே தனி நாடு கேட்டவை;

இன்று உச்சபட்ச மாநில சுயாட்சிக்கான உரத்த குரலை ஒலிப்பவை! நாங்கள் காஷ்மீரிலிருந்து தமிழ் நாட்டையோ, திராவிட இயக்கத்தையோ மிக நெருக்கமாகப் பார்ப்பதன் முக்கியமான புள்ளி இதுதான் – மாநிலங்கள் சுயாட்சிக்கான உறுதியான குரல்! காஷ்மீரைப் பொறுத்த அளவில் அது இந்தியா சுதந்திரம் அடையும்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லை. ஒரு வித்தியாசமான சூழலில் இந்தியாவுடன் இணைய காஷ்மீர் முடிவெடுத்தது. இந்த இணைப்பின் பிணைப்புச் சங்கிலி இந்திய அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 370. அதுதான் காஷ்மீருக்கு ஒரு சிறப்பு அந்தஸ்தை அளிக்கிறது. ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு போன்ற முக்கியத் துறைகள் நீங்கலாக ஏனைய துறைகள் தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்கள் – அவற்றுக்கு காஷ்மீர் மாநிலத்தின் இசைவு இல்லாவிட்டால் – காஷ்மீருக்குப் பொருந்தாது என்பதில் தொடங்கி காஷ்மீரின் எல்லைகளைக் கூட்டவோ, குறைக்கவோ முடியாது என்பது வரையிலான சிறப்பு அதிகாரங்களைக் கொண்டது இது.

காஷ்மீரைப் பொறுத்த வரை, இந்திய அரசியல் சட்டத்தைத் தவிர்த்து, தனக்கென்று ஒரு தனி அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் மாநிலத்தில் தேசியக் கொடியுடன், மாநிலக் கொடியும் உண்டு. முன்பு காஷ்மீருக்கு ஜனாதிபதி, பிரதமர் பதவிகள் இருந்தன.இப்போதுதான் முதல்வர், ஆளுநர் பதவி என்றாகிவிட்டது. எல்லாம் உரிமைப் பறிப்பின் விளைவுகள்! நமது நாட்டுக்கென்று ஒரு கூட்டாட்சி அமைப்பு இருக்கும்போதிலும், நம்முடைய நாடாளுமன்ற அமைப்பும் அரசு நிர்வாகமும் நடைபெறும் விதத்தைப் பார்க்கும்போது, ஒரு விஷயம் தெளிவாகப் புலப்படும்.

அது மத்திய – மாநில அரசுகளுக்கான தராசுத் தட்டுகள் இணையாக நிற்கவில்லை என்பதேயாகும்! அரசியல் சட்டப் பிரிவு 370-ன் கீழ் உறுதியளித்தபடி, காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சுயாட்சி அதிகாரமானது காலப்போக்கில் கடுமையாக அரிக்கப்பட்டுவந்திருப்பதாகவே காஷ்மீரிகள் கருதுகிறார்கள். பயங்கரவாதம், வன்முறை, கிளர்ச்சி போன்றவை அதிகரிக்கஇதுவும் முக்கியமான ஒரு காரணம். ஆனால், தில்லியில் கேட்டால் இதே கதையைத்தலைகீழாக மாற்றிச் சொல்வார்கள். உலகெங்கும் அமைதிக்கும் வளர்ச்சிக்கும் அதிகாரப் பகிர்வு ஊக்கச் சக்தியாக இருப்பதையே வரலாற்றில் பார்த்துவருகிறோம்.திமுக, குறிப்பாக அண்ணா வழிவந்த கருணாநிதி மாநில சுயாட்சிக் கோரிக்கையை ஒரு தேசிய முழக்கமாகவே வளர்த்தெடுத்தவர். காஷ்மீர் தலைவர்களும், தமிழகத் தலைவர்களும் இந்த விஷயத்தில் தொடர்ந்தும் இணைந்தும் பணியாற்றியிருக்கிறார்கள்; மார்க்சிஸ்ட் கட்சியும் கூட. விளைவாகவே மத்திய – மாநில உறவுகள் தொடர்பான விவாதம் பெரிய அளவில் தேசத்தின் கவனத்தை ஈர்த்தது.

இந்தப் பின்னணியில்தான் இரு மாநிலங்களுக்கும் இடையிலான உறவு வளர்ந்தது. திராவிட இயக்கத்துடன், கருணாநிதியுடன் பல்வேறு விஷயங்களில் மாற்றுக்கருத்துகள் இருந்தாலும், இந்நாட்டின் ஜனநாயகத்தை விரிவாக்கவும் வலுப்படுத்தவும் சமூக நீதியிலும் மத நல்லிணக்கத்திலும் அவர்களுடைய பங்களிப்பின் முக்கியத்துவத்தை எவராலும் நிராகரிக்க முடியாது. 1950-ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் காஷ்மீருக்கு வழங்கிய அதிகாரங்களைப் போன்ற அதிகாரங்களையே எல்லா மாநிலங்களுக்கும் கேட்கிறது தமிழகம். அதைத்தான் மாநில சுயாட்சி என்று திமுக குறிப்பிடுகிறது. ஒரு காஷ்மீரியாக, மார்க்ஸியனாக நானும் மாநிலங்களுக்கான அதிகாரங்களைப் பகிர்ந்தளியுங்கள் என்று உரக்கக் கேட்பேன்!

தமிழில்: வெ.சந்திரமோகன்

நன்றி: தி இந்து தமிழ் (24.10.17)

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...