காஷ்மீர் பிரச்சனையை இடதுசாரிகள் சரியாகவே கையாண்டார்கள்!

இந்திய அரசியல் தளத்தில் இடதுசாரிகள் விளிம்புநிலைக்கு சுருக்கப்பட்டது போல தெரிந்தாலும், மிகச் சிறப்பாகத் திட்டமிடும் திறனை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் சமீபத்திய ஸ்ரீநகர் பயணத்தை, பிற பெரிய அரசியல் கட்சிகள் எதுவுமே செய்யத் துணியாத, திறமையான அரசியல் திட்டமிடலுக்கு ஓர் எடுத்துக்காட்டாக கருத வேண்டும்.

ஜம்மு – காஷ்மீரின் முன்னாள் எம்.எல்.ஏவும், தன்னுடைய கட்சித் தோழருமான யூசுப் தாரிகாமியின் கைது குறித்து கவலையடைந்த யெச்சூரி, ஆகஸ்ட் 24 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

ஜம்மு – காஷ்மீரின் குல்காம் தொகுதியில் இருந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரான தாரிகாமி, நரேந்திர மோடி அரசு 370 ஆம் பிரிவை அவரசரகதியில் ரத்து செய்து, ஜம்மு-காஷ்மீரை இரண்டாகத் துண்டாக்கியபோது, ஜம்மு- காஷ்மீரின் அரசியல் தலைவர்களுடன் கைது செய்யப்பட்டு, ஆகஸ்ட் 5 ஆம் தேதியிலிருந்து காலவரையற்ற வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் குறித்த அரசின் முடிவுகளுக்கும், அரசியல் தலைவர்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் குதித்தன. யெச்சூரி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் தடையை மீறி காஷ்மீருக்குள் நுழைய முயன்றபோது, கடுமையான ராணுவக் கட்டுப்பாடுகளின் காரணமாக, ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்தே திருப்பி அனுப்பப்பட்டார்கள்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் மக்களைச் சந்திக்கும் அவர்களுடைய அரசியல் நோக்கம் நிறைவேறாமல் போனது. உண்மையில், ஸ்ரீநகருக்குள் நுழைய முயன்றபோது, யெச்சூரிக்கு தற்செயலாக காலில் தடுக்கி காயம் கூட ஏற்பட்டது. கட்சியின் தலைமை அலுவலகமான ஏகேஜி பவனில், அவர் சில நாட்கள் கட்டாயமாக ஓய்வெடுக்க வேண்டிய நிலை கூட ஏற்பட்டது.

சில தலைவர்கள் காஷ்மீருக்குள் நுழையும் தங்களுடைய முயற்சியை பரப்பரப்பாகக் காட்டிக் கொள்வதும், அடுத்த விமானத்தைப் பிடித்து ஊர் திரும்புவதுமாக இருந்தபோது, புத்திசாலித்தனமான கம்யூனிஸ்ட்டுகள் உச்சநீதிமன்றத்தை அனுகினார். தன்னுடைய கட்சித் தோழரான தாரிகாமியை மட்டும்தான் சந்திக்க முடியும் என்று யெச்சூரிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும், அவர் வெற்றி பெற்றார்.

இதன் மூலம், 370வது பிரிவு ஒழிக்கப்பட்ட பிறகு, வெளியில் இருந்து ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்குள் நுழைந்த முதல் அரசியல் கட்சித் தலைவரானார் யெச்சூரி.

மற்ற தலைவர்கள் ஏன் இந்த வழியைத் தேர்ந்தெடுத்து தங்களுடைய கட்சித் தோழர்களைச் சந்திக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. மூத்த காங்கிரஸ் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்து, ஸ்ரீநகருக்குச் சென்றிருக்கலாம்.

பொது மக்களுடன் உரையாட முடியாமல் போனாலும், தங்களுடைய கட்சிக் கொடியை மாநிலத்தில் உயரே பறக்கவிட்டிருந்த உள்ளூர் கட்சித் தோழர்களுடன் நேரம் செலவழித்து, வலுவான அரசியல் எச்சரிக்கையைப் பதிவு செய்திருக்க முடியும்.

தமிழில்: நர்மதா
நன்றி : இந்துஸ்தான் டைம்ஸ் (http://bit.ly/2lYmF4p)

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...