கியூபாவே பிடலாக…

தோழர் பிடல் காஸ்ட்ரோ இல்லாமல் ஓராண்டு காலம் கடந்துவிட்டது. உறுதி யேற்றபடி கியூபப் புரட்சி, மேலும் மேலும் சோசலிசத்தை நோக்கிய பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. கியூபாவின் இளைய தலைமுறையினர் பிடலின் நினைவுகளை நெஞ்சில் தாங்கி, தொடர்ந்து முன்னேறி வருகிறார்கள். இதை உறுதி செய்யும் விதத்தில், பிடலின் முதலாமாண்டு நினைவு தினமான நவம்பர் 25 அன்று சனிக்கிழமை கியூபா முழுவதும் பேரணிகளும், அமைதி ஊர்வலங்களும், அஞ்சலி நிகழ்ச்சிகளும் மிகுந்த உணர்ச்சிப் பூர்வமாக நடைபெற்றன. கியூபா மட்டுமின்றி, லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் பிடலின் நினைவுதினம் மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

பிடலின் மறைவுக்கு பிறகு, கடந்த ஓராண்டு காலத்தில் உண்மையில் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம், கியூபா மீதான தனது தடைகளையும், கட்டுப்பாடுகளையும் அதிகரிக்கவே முயற்சி செய்திருக்கிறது. அதை மீறி கியூப அரசாங்கம் தொடர்ந்து தனது அனைத்து விதமான மக்கள் நலத் திட்டங்களையும் உறுதியோடு அமலாக்கி வருகிறது.அனைத்து நிகழ்வுகளும் மேலும் மேலும் புரட்சிகரமாக மாறும். மாற்றம் ஒன்றே மாறாதது; அதுவே புரட்சி என்ற பிடல் உள்ளிட்ட போராளிகளின் முழக்கம், கியூபாவை என்றென்றும் உயிரோட்டமாக வைத்திருக்கிறது. அது அங்குள்ள இளைஞர்களிடையே வெளிப்படுகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் தங்களது நாட்டை கடுமையாக நசுக்கிட முயற்சித்துக் கொண்டே இருக்கிறது என்பதையும், அதை தடுத்து, நுட்பமான முறையில் எதிர்கொண்டு சோசலிசத்தை பாதுகாக்க ரால் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு மேற்கொள்கிற முயற்சிகளை கியூப இளைய தலைமுறை அறிந்தே வைத்திருக்கிறது. கியூபாவின் பள்ளிகள் மிக விரிவான துவக்க நிலை மற்றும் இடைநிலை கல்விக்குபிறகு, இதையும் போதித்து வருகிறது.உலகிலேயே குறைந்த வயதை வாக்குரிமைக்கான வயதாக நிர்ணயித்திருக்கிற 5 நாடு களில் கியூபாவும் ஒன்று. இங்கு 16 வயது நிரம்பியோர் வாக்களிக்கலாம். எனவே, ஒட்டு மொத்த இளைய தலைமுறையும் அரசியல்படுத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, கடந்த 60 ஆண்டு காலப் புரட்சியின் விளைவாக, கியூபா மருத்துவத்துறை உள்பட அனைத்து துறைகளிலும் மிகவும் தேர்ச்சி பெற்ற, மாபெரும் மனிதவளத்தைக் கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் மருத்துவர்களை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிற கியூபா, தனது மக்களி டையே, வறுமையை ஒழித்துள்ளது. இன்னும் முழுமையான, நவீனமான, டிஜிட்டல்மயமான சமூகமாக மாற்றுவதை நோக்கி, பயணத்தை விரைவுபடுத்தியுள்ளது. இத்தகைய பின்னணியில், நவம்பர் 26 ஞாயிறன்று கியூபாவில் தேர்தல்களும் துவங்குகின்றன. முழுமையான ஜனநாயகத்தோடு, சோசலிசத்தை மேலும் உயர்த்திப் பிடிக்கும் பாதையில் செல்கிற கியூபாவை பிடல் வழி நடத்துகிறார். இறுதி மூச்சுக்கு முன்னர் அவர் கேட்டுக் கொண்டதைப் போல, கியூபாவின் எந்தவொரு இடத்திலும் பிடலுக்கு சிலைகள் வைக்கப்படவில்லை. ஆனால் கியூபாவே பிடலாக கம்பீரமாக நிற்கிறது.

Check Also

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.வைத்தியநாதன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

சிஐடியு இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக பணியாற்றியவரும், கே.வி. என்று அனைவராலும் அன்பாக ...