கிரானைட் குவாரி முறைகேடுகளை விசாரிக்க முழு ஒத்துழைப்பு வழங்குக!

தமிழகத்தில் கிரானைட் உட்பட கனிம குவாரிகளில் நடைபெற்றுவரும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகளை தடுத்து நிறுத்திட தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பிரச்சனையில் சி.பி.ஐ விசாரணை கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கு தொடுத்து தொடர்ந்து போராடியும் வருகிறது. மதுரை மாவட்ட ஆட்சியராக உ.சகாயம் ஐ.ஏ.எஸ் செயல்பட்டபோது கிரானைட் உள்ளிட்ட கனிம வளக் கொள்ளையால் அரசுக்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளது பற்றி விசாரணை அறிக்கை அனுப்பியிருந்தார். இப்பின்னணியில் மேற்கண்ட இயற்கை வளங்கள் கொள்ளை போவது குறித்து ஆய்வு செய்திட சென்னை உயர்நீதிமன்றம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்தது. இந்த ஆய்விற்கு மாநில காவல்துறையும், அரசு நிர்வாகமும் உதவி செய்ய வேண்டுமென்றும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. ஆனால், தமிழக அரசு இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த நிலையில், மதுரையில் உள்ள பி.ஆர்.பி., நிறுவனத்தின் குவாரிகளில் 12 பேர் நரபலி கொடுக்கப்பட்டதாகவும், அங்கு 1999 முதல் 2003 வரை டிரைவராக இருந்த சேவற்கொடியோன் என்பவர் அதிர்ச்சியளிக்கும் தகவல் கொடுத்துள்ளார். இதனை விசாரிக்கச் சென்ற உ.சகாயம் குழுவினருக்கு காவல்துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை. தடயங்கள் மறைக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக அவர் இரவு முழுவதும் அங்கேயே தங்கியுள்ளார்.

இத்தகைய கடும் போராட்டத்திற்கு பிறகு தடவியல் அதிகாரிகள் அந்த பகுதியை தோண்டியதில் எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன என செய்திகள் கூறுகின்றன. இப்படி காவல்துறை ஒத்துழைப்பை போராடி பெற வேண்டிய நிலைமை திரு சகாயத்திற்கு ஏற்பட்டிருப்பது வேதனையான விஷயம்.

இயற்கை வளம் கொள்ளையடிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் விருப்பமாகும். விசாரணையை தாமதப்படுத்தும் விதத்தில் காவல்துறையும், அரசு அதிகாரிகளும் நடந்துகொண்டிருக்கும் விதம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.  தமிழக அரசு, விரைவான விசாரணைக்கு உதவியாக செயல்பட்டு, குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் நிறுத்த  வேண்டுமென்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

 

Check Also

மனுவாதிகளின் ஆதிக்க செயலை முறியடித்த அய்யா வைகுண்டரின் 189-வது பிறந்த தினம்…

அய்யா வைகுண்டரின் 189வது பிறந்த தின விழாவை கொண்டாடி வரும் அய்யாவின் அன்புக்கொடி மக்களுக்கு இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ...