கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்ட மோசடியை விசாரணை நடத்த சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இடதுசாரிக் கட்சிகளின் தொடர்ச்சியான வற்புறுத்தல் காரணமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு பதிலாக மத்தியில் பாஜக கூட்டணி அரசு இந்தத் திட்டத்திற்கான நிதியை வெட்டிச் சுருக்குவதோடு, பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்தும், இந்தத் திட்டம் அமலாகும் கிராமங்களை குறைத்தும் வருகிறது.

இந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகின்றன. முறைகேடுகளைக் களைந்து கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும், கூலியை அதிகரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தற்போது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் நடந்துள்ள மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாநில அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் நடத்தப்பட்ட சமூக தணிக்கை அமைப்பு இந்த மோசடியை கண்டுபிடித்துள்ளது.

2014 – 15 ஆம் நிதியாண்டில் எருமார்பட்டி மற்றும் மண்ணூர் கிராமங்களில் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் 672 குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர் அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளார். ஆனால் இந்தத் திட்டத்தில் 1200 பேர் பணியாற்றியதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு மையத்திற்கு போலியாக கணக்கு அனுப்பப்பட்டு ரூ.30லட்சம் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. போலியான பெயர்களை கணக்கு காட்டி பணம் பெறப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தமிழகம் முழுவதும் இத்தகைய மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றுவோர் குறித்தும், பெறப்பட்ட கூலி குறித்தும் முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும். சில ஊழியர்கள் மட்டும் இத்தகைய மோசடியில் ஈடுபட்டிருக்க முடியாது. ஒரு வலைப்பின்னலே செயல்பட்டிருக்கக் கூடும். எனவே முழுமையான விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்களை தண்டிக்க மாநில அரசு முன் வர வேண்டும். திட்டத்தை முறைகேடின்றி நடைமுறைப்படுத்த வேண்டுமேயன்றி, தவறுகள் நடப்பதைக் காரணம் காட்டி திட்டத்திற்கு மூடுவிழா நடத்த முயலக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...