கீழடி, ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகளை விரைவுபடுத்துக

தொன்மையும் இளமையும் மிக்க தமிழ் மொழியின் சிறப்புக்களோடு தமிழ் சமூகத்தின் தொன்மை மிகு கலாச்சாரக் கூறுகளும் வரலாற்று அடையாளங்களும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஆனால் இந்துத்துவ பண்பாட்டைத் திணிக்கும் நிகழ்ச்சி நிரலைக் கைக்கொண்டுள்ள மத்திய அரசு, ஹரப்பா நாகரிகத்துக்கு இணையான ஆதிச்சநல்லூர் நாகரிகத்தை  வெளிக்கொணர மறுக்கிறது. 2005ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட அகழ்வாய்வின் முடிவுகள் 12 ஆண்டுகளாகியும்வெ ளியிடப்படாமல் உள்ளது.

கீழடியில் நடத்தப்பட்ட இரண்டு கட்ட அகழ்வாய்வில் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கு முன்பே ஓர் மதச்சார்பற்ற நகர நாகரிகம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. தெற்கிலிருந்தும் இந்திய வரலாற்றை மறு வரைவு செய்வதற்கான ஆதாரங்கள் கீழடியில் கிடைத்துள்ளதாக உலகப் புகழ் பெற்ற வரலாற்றறிஞர்கள் கூறுகின்றனர்.அகண்ட பாரதம், ஆரிய வர்த்தம் என்கிற ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை உடைத்து நொறுக்குகின்ற வலுவான சான்றுகள் கீழடியில் கிடைத்துள்ளன. மத்திய பாஜக அரசு கீழடி ஆய்வைத் தொடர அனுமதி மறுத்து மூடிவிட்டது. உண்மைகளை வெளிக் கொணர்ந்த ஆய்வறிஞரை கட்டாய இடமாற்றம்  செய்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் கலை இலக்கிய அமைப்புகளும் கண்டனக் குரல் எழுப்பியும் இயக்கங்கள் நடத்தியும் கூட எதையும் கேட்க மத்திய அரசு தயாராக இல்லை.நிறுத்தப்பட்டுள்ள கீழடி அகழ்வாய்வுப் பணியை மத்திய தொல்லியல் துறை உடனடியாக துவக்க வேண்டும் .

கீழடியின் தொல்லியல் மேடு பரவிக்கிடக்கும் 110 ஏக்கர் தனியார் நிலத்தை உரிய இழப்பீடு வழங்கி அரசு கையகப்படுத்த வேண்டும். ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வுகளுக்கு நிலம் தந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

கீழடியில் கள அருங்காட்சியகம் அமைக்க இன்று வரை எந்த முயற்சியையும் மத்திய அரசு எடுக்க வில்லை. இதற்கான முயற்சி உடனடியாக துவக்கப்பட வேண்டும்.

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும்.

தமிழக தொன்மைக்கு பெரும் சான்றாக திகழும் ஆதிச்சநல்லூர் கீழடி உள்ளிட்ட இடங்களில் விரிவான அகழ்வாய்வு செய்யவும், கள அருங்காட்சியகம் அமைக்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும், மாநில அரசும் இதற்கான அழுத்தத்தை தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது மாநாடு வலியுறுத்துகிறது.

முன்மொழிந்தவர்: தோழர். கே.ஜி.பாஸ்கரன் (நெல்லை)

வழிமொழிந்தவர்: தோழர். மு.கந்தசாமி (சிவகங்கை)

Check Also

மாநில உரிமைகளைப் பாதுகாப்போம், பலப்படுத்துவோம்

இந்தியா, பல்வேறு மாநிலங்களின் ஒன்றியம் என்றே அரசியல் சாசனத்தின் முதல் வரி குறிப்பிடுகிறது. வேறுபட்ட தேசிய இனங்கள், அவற்றின் மொழிகள், ...