குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க போர்க்கால நடவடிக்கை: சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர் மாவட்டத்தில் கடும் குடிநீர் பற்றாக்குறை:

திருப்பூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிலவும் குடிநீர் பற்றாக்குறைப் பிரச்சனையை சமாளித்து மக்களுக்குப் போதுமான குடிநீர் வழங்கிட மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாதஅளவுக்கு கடும் வறட்சி ஏற்பட்டிருக்கும்நிலையில் நீராதாரம் குறைந்து மக்களுக்கு கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தபோதிலும், பல்வேறு பகுதிகளிலும் பொது மக்கள், குறிப்பாக பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டுவருவதாக தொடர்ச்சியாக செய்திகள் வந்து கொண்டிருகின்றன. எனவே இந்த விசயத்தில் அரசு நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சனையைச் சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கிடைக்கக்கூடிய குடிநீர் அளவு வெகுவாகக் குறைந்திருக்கும் நிலையில்,அதை அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைக்கும் வகையில் முறையாகப் பங்கிட்டு வழங்க வேண்டும். நீராதாரம் குறைந்துபோன ஆழ்குழாய்களை மேலும் ஆழப்படுத்தியும், பழுதடைந்த ஆழ்குழாய் மோட்டார்களை உடனடியாகச் செப்பனிட்டும், தேவையான இடங்களில் புதிய ஆழ்குழாய்களை அமைத்தும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மாநகரின் பல்வேறு பகுதிகளில் கைப்பம்புகள்  பழுதடைந்து செயலற்று கிடக்கின்றன. அவற்றையும் உடனடியாக சீரமைத்து தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இத்துடன் பெரிய உணவகங்கள் உள்ளிட்ட இதர தொழில், வர்த்தக நிறுவனங்களில் தற்போதும் தாராளமாக குடிநீர் பயன்படுத்தும் நிலை உள்ளது. குடிப்பதற்கு மட்டுமின்றி இதர பயன்பாட்டுக்கும் குடிநீரை பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற நிலையைக் கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும். பொதுக் குடிநீர் பயன்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும்.தேவையான பகுதிகளுக்கு லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்வதையும் பற்றாக்குறை தீரும் வரை தொடர வேண்டும்.

நகராட்சி, பேரூராட்சி மற்றும் அனைத்து கிராமப்புறங்களிலும் குடிநீர்த் தேவையை சமாளிப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்வதாக கே.காமராஜ் கூறியுள்ளார்.

——————-

Check Also

சாமளாபுரம் தாக்குதல்: காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மாதர் சங்கம் போராட்டம்

சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மறியல் செய்த பெண்களை திருப்பூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையிலான காவலர்கள் ...