குடிநீர், ரேசன் பொருள்கள் கோரி திருப்பூரில் பல்வேறு இடங்களில் பட்டினிப் போராட்டம்

திருப்பூர் மாநகரில் ஒரு வாரத்தில் இருந்து பத்து பதினைந்து நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் சுத்திகரிக்கப்படாமல் கலங்கலாக, மஞ்சள் நிறத்தில் வரும் குடிநீரைப் பயன்படுத்துவதால் பெண்கள், குழந்தைகளுக்கு மர்ம நோய்கள் தாக்கி வருகின்றன. மாநகரில் பல பகுதிகளிலும் குப்பைகள் அகற்றப்படாமல் மலைபோல் தேங்கியிருக்கின்றன. சாக்கடை கழிவுகளை சுத்தப்படுத்துவதும் முடங்கிப் போயுள்ளது. எனவே திருப்பூரில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கி அனைவருக்கும் சீராக குடிநீர் வழங்கவும், குப்பைகள், சாக்கடைக் கழிவுகளை முறையாக அகற்றி சுகாதாரம் பேணவும், தெரு விளக்கு, சாலை பிரச்சனைகளுக்குத் தீர்வு கோரியும், ரேசன் கடைகளில் ஆதார் எண் இணைக்க அலைக்கழிப்பதுடன், ஸ்மார்ட் கார்டு தருவதாகச் சொல்லி மக்களை அலையவிட்டு குழப்புவதுடன், தேவையான பொருட்கள் முழுமையாக வழங்கப்படாமல் இருக்கிறது. ரேசன் கடைகளில் அனைத்துப் பொருள்களையும் முழுமையாக அனைத்து கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிறன்று பட்டினிப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

வடக்கு நகருக்கு உட்பட்ட 7 இடங்கள், தெற்கு நகரில் 6 இடங்கள், வடக்கு ஒன்றியத்தில் பெருமாநல்லூர், காளிபாளையம், காளம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகள் உள்பட 12 இடங்கள், தெற்கு ஒன்றியத்தில் மங்கலம், இடுவாய், முதலிபாளையம் ஊராட்சி பகுதிகள் உள்பட 11 இடங்கள், வேலம்பாளையம் நகரில் 6 இடங்களில் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. இத்துடன் பிரிட்ஜ்வே காலனி, கொங்கணகிரி பகுதிகளில் அந்தந்த பகுதி கிளைகள் சார்பில் சுமார் 20 இடங்களில் வாகனப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ், தெற்கு மாநகரச் செயலாளர் எம்.ராஜகோபால், தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, வடக்கு மாநகரச் செயலாளர் பி.முருகசன், வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிசாமி, வேலம்பாளையம் நகரச் செயலாளர் கே.ரங்கராஜ் உள்பட மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள் இப்போராட்டங்களைத் தொடக்கி வைத்தும், வாழ்த்தியும், முடித்து வைத்தும் பேசினர்.
மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பட்டினிப் போராட்டங்களில் பங்கேற்றனர்.

Check Also

கோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் கே.சீனிவாசன் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் !

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 – திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் ...