குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் கொரோனா நிவாரண நிதி மற்றும் உணவுப் பொருட்களை ஓரிரு நாட்களுள் வழங்க வேண்டும்..!

தமிழக முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

பெறுநர்

            மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,

            தமிழ்நாடு அரசு,

            தலைமைச் செயலகம்,

            சென்னை – 600 009.

வணக்கம்.

பொருள்:-    குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் கொரோனா நிவாரண நிதி மற்றும் உணவுப் பொருட்களை ஓரிரு நாட்களுள் வழங்கி முடிப்பது தொடர்பாக…

கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூபாய் ஆயிரமும், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்குவது என அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஒரு நாளைக்கு 100 குடும்ப அட்டைதாரர்கள் வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஊரடங்கு உத்தரவு கடந்த ஒரு வார காலம் அமலில் உள்ள சூழ்நிலையில் ஏழை எளிய மக்கள் வேலையும் வருமானமுமின்றி தவித்து வருகிறார்கள். ஊரடங்கு உத்தரவின் காரணமாக வெளிச் சந்தையிலும் அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறையும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை மற்றும் உணவுப் பொருட்கள் இதற்குள்ளாக வழங்கி முடித்திருந்தால் மக்களுக்கு ஓரளவு பயனளித்திருக்கும். தற்போது ஏப்ரல் 2ம் தேதி முதல் ஒரு நாளைக்கு 100 அட்டைதாரர்கள் வீதம் வழங்குவது என்பதனால் அனைவருக்கும் உதவித் தொகையும் உணவுப் பொருட்களும் சென்றடைவதற்கு மேலும் சில நாட்கள் ஆகக் கூடும்.

உதாரணமாக, ஒரு நியாய விலைக் கடையில் 1000 குடும்ப அட்டைகள் இருப்பின், அவர்களுக்கு உணவுப் பொருட்களும் நிதியும் கிடைக்க மேலும் பத்து நாட்கள் வரை ஆகலாம். இது பொது மக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.

நியாய விலைக் கடையில் பொருட்கள் வழங்க துவங்கியவுடனே தேவை அதிகமாக இருப்பதால் அனைவரும் கடைக்கு முன் திரண்டு உதவித் தொகையையும் உணவுப் பொருட்களையும் வாங்குவதற்கு கூட்டமாகத் திரளும் வாய்ப்புகள் உருவாகும். இதனால் சமூக விலகல் என்பது கேள்விக்குறியாகிவிடும் என்பதோடு, நியாய விலைக் கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பெரும் சிரமத்தையும் ஏற்படுத்தும்.

சமூக விலகலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழலில் நியாய விலைக் கடை ஊழியர்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து கடைகளுக்கு தினம் சென்று வருவதிலும் பிரச்சினை உள்ளது. மேலும், போக்குவரத்து வசதிகள் இல்லாமல் இவர்கள் தொடர்ச்சியாக பணிக்கு செல்வது கடினமானதாக இருக்கும்.

எனவே,

1. அரசு வழங்குகிற உதவித் தொகை மற்றும் உணவுப் பொருட்களை 1 அல்லது 2 தினங்களுக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்குவதற்கான உரிய ஏற்பாட்டினைச் செய்திட வேண்டும். குறிப்பாக, வீடுவீடாகச் சென்று வழங்குவது மிகவும் நல்லது. ஒரு வேளை அது சாத்தியமில்லாதிருப்பின் தற்போதுள்ள நியாய விலைக் கடை ஊழியர்களோடு அரசு ஊழியர்கள், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆகிய அனைவரையும் பயன்படுத்தி குறிப்பிட்ட ஓரிரு தினங்களில் வழங்கி முடித்திடக் கேட்டுக் கொள்கிறோம்.

2. ஏற்கனவே, தமிழக அரசு அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஒரு மாத சம்பளத்தை சிறப்பு ஊதியமாக வழங்குவது என தீர்மானித்துள்ளது. இந்த நிவாரணத் தொகை மற்றும் உணவுப் பொருட்கள் வழங்க ஈடுபடுத்தப்படும் நியாய விலைக்கடை ஊழியர்கள்,  வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களுக்கும் இதுபோன்ற சிறப்பு ஊதியத்தை வழங்கக் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இங்ஙனம்,

தங்கள் அன்புள்ள,

(கே. பாலகிருஷ்ணன்)

மாநிலச் செயலாளர்

Check Also

பயன்படுத்தப்படாத இரயில்வே சீசன் டிக்கெட் காலத்தை நீட்டிக்க கோரி தென்னக ரயில்வே பொது மேலாளர் அவர்களுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்…

பெறுநர்             பொது மேலாளர் அவர்கள்,             தென்னக ரயில்வே,             சென்னை – 600 003. அன்புடையீர், வணக்கம். ...