குமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காண்ணிப்பு அதிகாரியிடம் சி.பி.ஐ(எம்) மனு…

கன்னியாகுமரி மாவட்டத்தில் 30.11.2017 அன்று ஏற்பட்ட ஓக்கி புயலின் எதிரொலியாக கனமழையும் சூறைகாற்றும் வீசியது.இதனால் மாவட்டமே புரட்டி போடப்பட்டது. நூறு ஆண்டு காலத்தில் காணாத புயல் இது.

புயல் பற்றிய முன்னெச்சரிக்கை இல்லாமையால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க சென்றனர். எத்தனை பேர் மீன் பிடிக்க சென்றனர், இதில் காணாமல் போனவர்கள் எத்தனை பேர், இறந்து போனவர்கள் எத்தனை பேர் என்ற விபரம் கூட அரசால் அறுதியிட்டு தெரிவிக்க முடியவில்லை. அமைச்சைர்கள் ஒரு எண்ணிக்கையும் அதிகாரிகள் ஒரு எண்ணிக்கையும் கூறி மக்களை குழப்புகின்றனர்.

நமது மாவட்ட மீனவ மக்களின் நீண்ட நாள் கோரிக்கை என்பது கடலில் காணாமல் போகும் மீனவர்களை தேடி கண்டுபிடிக்க ஒரு ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும், அதி நவீன விடைபடகு வஸ்தி செய்துதரப்பட வேண்டும் என்பதாகும். ஆனால் அரசு இதற்கான ஏற்பாடுகள் கூட செய்யவில்லை. இதனால் உயில் தப்பி வந்த பல மீனவர்கள் நாட்கணக்கில் உடைந்த படகுகளின் பாகங்க்களை பிடித்துக் கொண்டிருந்ததாகவும் அதனை பயன்படுத்தி நீச்சல் அடித்து கரை சேர்ந்ததாகவும் கண்ணீர் மலக கூறுகின்றனர். மேலும் கட்டுமர உபகரணங்க்களை கொண்டு நீச்சல் அடித்தவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் நீச்சல் அடிக்க முடியாமல் தங்கள் கண் முன்னே கடலில் மூழ்கியதாக கூறி கதறினர்.போதிய ஹெலிகாப்டர் வசதி இருந்திருந்தால் இவ்விதம் தத்தளித்தவர்களை உயிருடன் மீட்டெடுக்க முடிந்திருக்கும். எதிர்காலத்தில் அரசு தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

செயற்கைக்கோள் மூலம் கப்பல் போக்குவரத்தை கண்காணிப்பது போல் ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும். காணாமல் போன மீனவர்கள் பற்றிய அறிவிப்புக்காக 7 வருடங்கள் காத்திருக்க வேண்டுமென்பதை மாற்றி சுனாமி காலத்தில் வழங்கியது போல் குறைந்த காலக்கெடுவில் மரணச் சான்றிதழ்களும் நஷ்டஈடுகளும் வழங்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்து போனவர்களுக்கும், காயமுற்றவர்களுக்கும், மீன்பிடி உபகரணங்களை இழந்தவர்களுக்கும் போதிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் ஆயிரகணக்கான வீடுகள் சேதமடைந்து மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர். முழுமையாக இடிந்து போன வீடுகளுக்கு குறைந்தது ஒரு லட்சமும், சேதமடைந்த வீடுகளுக்கு 50000 ரூபாயும் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். கூரை போன வீடுகளையும் சேதமடைந்த வீடுகள் பட்டியலில் இணைக்க வேண்டும். நீர்;நிலைகளின் கரைகள் மற்றும் ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழைகளின் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நஷ்டஈடு வழங்குவதுடன் மாற்று இடம் கண்டுபிடித்:து பசுமைவீடு, அடுக்குமாடி வீடுகள் அமைத்து கொடுக்க வேண்டும். நூற்றுகணக்கான அரசு பள்ளிகூடங்கள் இடிந்தும், சேதபட்டும் உள்ளன. அவற்றை உடனே கணக்கெடுத்து கட்டிடத்தை புனரமைக்க தேவையான ஏற்பாடு செய்ய வேண்டும்.

விவசாய பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஏற்கனவே மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் விளைபொருட்களை வனவிலங்குகள் நாசம் செய்வதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை அனுபவித்து வந்தனர். இந்நிலையில் புயல் காற்றினால் சுமார் 20 லட்சம் வாழைகள் சேதமடைந்துள்ளன. ஒரு வாழைகன்று நட வேண்டுமெனில் சுமார் 50 ரூபாய் செலவாகும். இதற்குமேல் நில சொந்தக்காரருக்கு தலா 60 ரூபாய் குத்தகை கொடுக்க வேண்டும். இதற்கு மேல் ஒருவாழை குலைதள்ளும் அளவிற்கு வளர்க்க வேண்டுமெனில் குறைந்தது 300 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி வரும். இவ்வாழைகள் அறுவடை பருவத்தில் புயலால் அடித்து முறிக்கப்பட்டு விட்டதால் பலவிவசாயிகள் கடன் சுமையை சமாளிக்க முடியாமல் தற்கொலை செய்யக்கூடிய நிலைக்கு தள்ளப்படும் ஆபத்து உள்ளது. மாவட்ட வாழை விவசாயிகள் பெரும்பாலும் வாய்மொழி குத்தகை செய்கின்றனர்.

எனவே அவர்களுக்கு செவ்வாழைக்கு 500 ரூபாயும், இதர வாழைக்கு தலா 300 ரூபாயும் நஷ்ட ஈடுவழங்க வேண்டும். இது உண்மையான விவசாயிக்கு எவ்வித கஷ்டமில்லாமல் எளிதில் கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும். இதுபோல் நூற்றுகணக்கான ஏக்கர் நெல் தண்ணீர் சூழ்ந்து அமிழ்ந்து விட்டது. மேலும் மரவள்ளி கிழங்கு போன்ற பணபயிர்கள், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மலர் போன்றவைகளுக்கும் உற்பத்தி செலவுக்கு தக்கவாறான நஷ்டஈடு வழங்க வேண்டும். மா, பலா, தேக்கு, அயினி, தென்னை உட்பட அனைத்தும் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் காற்றில் கீழே விழுந்துவிட்டன. சேதமடைந்த தென்னை மரத்திற்கு தலா 5000 ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசியாவிலேயே உயர்ந்தரக ரப்பர் கிடைக்கிறது. ஆயிரகணக்கான ஏக்கரில் விளையும் பல ஆண்டுகள் ரப்பர் கிடைக்கும் மரங்களை புயல்காற்று பிடிங்கி எறிந்து விட்டது. ரப்பர் மரத்துக்கு குறைந்தது 2000 ரூபாய் வழங்க வேண்டும். புதிய ரப்பர் நட தேவையான ரப்பர் தை, ரப்பர் போர்டு மூலம் இலவசமாக வழங்க வேண்டும். விவசாய கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் போடப்பட்ட சாலைகள் மிகவும் தரம் குறைந்த நிலையில் பல முக்கிய சாலைகள் மழையால் அடித்து செல்லப்பட்டு விட்டது. போக்குவரத்தை சரிசெய்ய உடனடி சாலைகளை செப்பனிட வேண்டும். இது தற்போதும் பல பகுதிகளில் மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தது மாற்றவில்லை. அதனால் போக்குவரத்து தடையாகியுள்ளது. பொதுவாக மாவட்டத்தில் 7000-த்துக்கு மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் ஐந்து தினங்கள் கடந்த பின்பும் பெரும்பாலான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கவில்லை. ஜெனரேட்டர் மூலம் மேல்நிலை தொட்டிகளி;ல் தண்ணீர் ஏற்றி அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகத்தை தடையின்றி செய்யவேண்டும். இதனால் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. உணவு விடுதிகள் திறக்கவில்லை. அத்தியாவசிய பொருட்கள் விலை பலமடங்கு உயர்ந்து விட்டது.

கனமழை பெய்த பிறகும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் போய் சேரவில்லை. வடிகால்கள் அடைபட்டுள்ளது. பலஇடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தொற்று நோய்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. பல குளங்கள் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வித சேதங்களை போர்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும்.

வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைத்துள்ளவர்களின் வீடுகள் சரிசெய்யும் வரை முகாம்களில் தங்கவைப்பதுடன், போதிய வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
சுமார் 2000 கோடி ரூபாய் அளவிற்கு மாவட்டத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
புயலால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களுக்கு கேரளா அரசு வழங்கியது போல் 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
மீனவர்கள், விவசாயிகள் வாங்கியுள்ள அரசு கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
கடலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் இதரர் தங்கள் முறையீடு மனுக்களை அந்தந்த கிராம அலுவலகங்களில் பெறவசதி செய்து கொடுக்க வேண்டும். அங்கிருந்து துறைவாரியாக பிரித்து கொள்ள வேண்டும். புயல்காரணமாக பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்கள், மீனவர்கள், தோட்டத் தொழிலாளர்கள், செங்கல்சூளை தொழிலாளர்கள், முந்திரி தொழிலாளர்கள் மற்றும் இதரகூலி வேலை செய்பவர்களுக்கு மேலும் பல நாட்கள் வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளது. எனவே குடும்பங்களுக்கு தலா 5000 ரூபாய் உடனடி வழங்க வேண்டும்.
துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகள் போர்கால அடிப்படையில் சரிசெய்ய போதிய உபகரணங்கள் தட்டுபாடின்றி வழங்க வேண்டும்.

வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதிலாக புதிய கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும்.
மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை நிவாரண பணிக்கு பயன்படுத்த வேண்டும். அவர்களுடைய சம்பள பாக்கிகளை அவசரமாக வழங்க வேண்டும்.
மின்தடையை காரணம் காட்டி ரேசன் பொருட்கள் வழங்கவில்லை. ரேசன் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்திட வேண்டும்.
சேதமடைந்த செவ்வாழைக்கு தலா 500 ரூபாயும், இதர வாழைகளுக்கு 300 ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும். தென்னை மரத்திற்க்கு 5000 ரூபாயும், ரப்பர் மரத்திற்கு 2000 ரூபாயும் வழங்கிட வேண்டும்.
முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ஒரு லட்சம் ரூபாயும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு 50000 ரூபாயும் வழங்கிட வேண்டும்.
குமரிமாவட்டத்தில் ஹெலிகாப்டர் தளம், அதிநவீன விசைபடகு வசதி ஏற்படுத்த வேண்டும்.

இந்த மனுவை மாவட்ட செயலாளர் என்.முருகேசன், மாநிலகுழு உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.உஷாபாசி, என்.எஸ்.கண்ணன், மாவட்டகுழு உறுப்பினர் மலைவிளை பாசி, ரவி, மணி ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் கண்காணிப்புகுழு அதிகாரி திரு.ககன்தீப்சிங்பேடி ஆகியோரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்.

Check Also

NPHH அட்டைகளை PHH அட்டைகளாக மாற்ற கோரி மாதர் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் போராட்டம்.

NPHH குடும்ப அட்டைகளை PHH குடும்ப அட்டைகளாக மாற்றக் கேட்டும், ரேஷன் பொருட்கள் விலை உயர்வை ரத்து செய்யவும், ரேஷன் ...