‘குறிப்பிடத் தவறியதற்கு வருந்துகிறேன்’ என்று உங்கள் உரையைத் திருத்திக் கொள்ளுங்கள்… பி.ஆர்.நடராஜன்.எம்.பி., கொடுத்த 55 திருத்தங்கள்…

 1. மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியதன் மூலமாக ஒரு பக்கத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு விவசாயிகளைச் சுரண்டுவதற்கு வாய்ப்பளித்திருப்பதையும், மறுபக்கத்தில் நாட்டின் மக்கள் அதீத விலை கொடுத்து பொருள்களை வாங்குவதற்கு மக்களைத் தள்ளியிருப்பதையும் குறிப்பிடத்தவறியது.
 2. அதிகரித்து வரும் வேலையின்மையையும், நாட்டில் வேலையில்லா வளர்ச்சி (jobless growth) அதிகரித்திருப்பதையும் அரசாங்கம் மக்களுக்கு அளித்திட்ட உறுதிமொழிகளுக்கேற்ப வேலையில்லாதவர்களுக்கு வேலை அளிக்கத் தவறிவிட்டதையும் குடியரசுத் தலைவர் உரை குறிப்பிடத் தவறியது.
 3. நாட்டின் சகிப்பின்மை அதிகரித்து, மக்கள் மத்தியில் வன்முறை வெறியாட்டங்களை ஏவிக் கொண்டிருப்பதையும், மதவெறித் தீ பரப்பப்பட்டுக் கொண்டிருப்பதையும் குறிப்பிடத் தவறியது.
 4. நாட்டில் அரசாங்கத்தின் பிழையான கொள்கைகளின் விளைவாக வேளாண் நெருக்கடி அதிகரித்திருப்பதையும், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்துக் கொண்டிருப்பதையும் குறிப்பிடத் தவறியது.
 5. மூன்று விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை நிறைவேற்றுவதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தின் அனைத்து நெறிமுறைகளையும் புறந்தள்ளியதை குறிப்பிடத் தவறியது.
 6. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முறையான விவாதமின்றி, மூன்று தொழிலாளர் சட்டங்களையும் நிறைவேற்றியிருப்பது.
 7. கார்ப்பரேட்டுகளைக் குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அத்தியாவசியப் பண்டங்கள் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்து, பதுக்கலை, சட்டப்பூர்வமாக்கியது.
 8. மூன்று வேளாண் சட்டங்களையும் நிறைவேற்றியதன் மூலம், விவசாயிகளைக் கார்ப்பரேட்டுகளின் கொத்தடிமைகளாக மாற்றியிருப்பது.
 9. நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் விதத்தில் காசுகொடுத்து ஊடகங்களை விலைக்கு வாங்கி பொய்ச் செய்திகளை வெளியிடும் போக்கு அதிகரித்திருப்பது.
 10. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளும், தொழிலாளர்களும் சாமானிய மக்களும்கூட முன்வந்து நாடு முழுவதும் பிரம்மாண்டமான அளவில் போராட்டங்களை மேற்கொண்டுள்ள போதிலும் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுத்திடும் அரசாங்கம் குறித்து.
 11. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்ப்பலி கொடுத்த பின்பும், அரசாங்கம் இச்சட்டங்களை ரத்து செய்ய மறுத்து வருவது குறித்து.
 12. வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக எவ்விதமான கொள்கையையும் அரசாங்கம் உருவாக்கத் தவறியிருப்பது தொடர்பாக.
 13. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழ் குடும்பத்தினருக்கு ஒருவருக்கு வேலை என்பதற்குப் பதிலாக வேலை கோரும் அனைவருக்கும் வேலையளித்திடும் விதத்தில் அச்சட்டத்தை விரிவாக்குவதற்கு அரசாங்கம் தவறியது.
 14. நாட்டின் உள்கட்டமைப்பு வசதி, கல்வி, சுகாதாரம், போன்றவற்றிற்கு பொது முதலீடு/செலவினத்தை அதிகரித்து, நிரந்தர வேலை வாய்ப்பை உருவாக்க அரசாங்கம் தவறியது குறித்து.
 15. நாட்டின் குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு தவறான முறையில்பயன்படுத்தப்பட்டு வரும் நிகழ்வுகள் அதிகரித்திருப்பது தொடர்பாக.
 16. தலித், பழங்குடியினர் பணியிடங்களில் ஏற்பட்டுள்ள காலியிடங்கள் உட்பட அரசாங்கத்தின் பல்வேறு துறைகளிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் காலியாகவுள்ள பணியிடங்கள் நிரப்பிட அரசாங்கம் தவறியிருப்பது.
 17. மத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும், தொழில் கல்லூரிகளிலும் ஏற்பட்டுள்ள அசாதாரணமான நிலைமையை குறிப்பிடத் தவறியது.
 18. மக்களுக்கிடையே அதிகரித்துவரும் சகிப்பின்மை குறித்தும் அதன் விளைவாக எழுத்தாளர்கள் மற்றும் கலாச்சார செயற்பாட்டாளர்கள் மீது வன்முறை வெறியாட்டங்கள் ஏவிவிடப்படுவது குறித்தும்.
 19. வலதுசாரி மதவெறி சக்திகள் மாணவர்கள் மீதும் பத்திரிகையாளர்கள் மீதும் தொடுத்திடும் தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டிருப்பதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறியது குறித்து.
 20. கொரோனா வைரஸ் தொற்றுக்கு முன்பே இருந்து வந்த பொருளாதார மந்த நிலைமை, கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியபின் மேலும் மோசமானதைக் குறித்து அரசாங்கம் எதுவும் கவலைப்படாமல், பொருள்களின் விலைகளைக் கடுமையாக உயர்த்தி, மக்கள் மீது மேலும் மேலும் சொல்லொண்ணா துன்ப துயரங்களை ஏற்றியது குறித்து.
 21. நாட்டில் தலித் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் பாகுபாடு காட்டப்படுதல், ஒதுக்கி வைத்தல் மற்றும் அவமானப்படுத்தப்படுதல் போன்ற காரணங்களால் அவர்கள் தற்கொலைப் பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பது குறித்து.
 22. அந்நிய நேரடி முதலீட்டை அனைத்துத் துறைகளுக்கும் அகலத் திறந்துவிடப்பட்டிருப்பது குறித்து.
 23. உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னரும் கூட, பொது விநியோக முறையின் கீழ் நாட்டில் உள்ள பெரும்பான்மையான ஏழை மக்கள் உணவு கிடைக்காமல் அவதிக்குள்ளாகியிருப்பது குறித்து.
 24. அரசாங்கம் வறுமைக் கோட்டை மாற்றி அமைத்திடாததன் விளைவாக, நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு, மானிய அடிப்படையில் உணவும் மற்றும் அடிப்படை வசதிகளும் அளிக்கப்படாமல் அவர்கள் உரிமைகள் வேண்டுமென்றே பறிக்கப்பட்டிருப்பது.
 25. அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் முன்கூட்டியே கட்டாய ஓய்வுக்கு அனுப்பப்படும் முடிவைத் திரும்பப் பெறாதது குறித்து.
 26. தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடன்கள் அவர்களால் திருப்பிச் செலுத்தப்படாததன் காரணமாக, வங்கிகளின் செயல்படாச் சொத்துக்கள் அதிகரித்து, வங்கிகளின் நிதி நிலைமையே கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது குறித்தும், நாட்டின் நிதி நிர்வாக அமைப்பு முறை மீதே மக்கள் அவமதிப்பு கொண்டிருப்பது குறித்தும்.
 27. பொதுத்துறை வங்கிகளில் கடன்கள் வாங்கிவிட்டு, அவற்றை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத கார்ப்பரேட்டுகள் குறித்து.
 28. மகளிர்க்கான இடஒதுக்கீட்டுச் சட்டமுன்வடிவை இன்னமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முன்வருவதற்கு அரசாங்கம் தவறியிருப்பது தொடர்பாக.
 29. சுதந்திரம் வாங்கிய காலத்திலிருந்தே நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த சுயேச்சையான அயல்துறைக் கொள்கையை அரசாங்கம் கைவிட்டது குறித்தும் அதில் தோல்வியடைந்திருப்பது குறித்தும்.
 30. உலகப் பொருளாதார மந்தம், இந்தியத் தொழில்களையும் கடுமையாகப் பாதித்து அவற்றில் ஈடுபட்டிருந்த பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தது குறித்தும், குறிப்பாக நம்முடைய பாரம்பரியத் தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது குறித்தும்.
 31. நாட்டில் அதிகரித்து வரும் அகதிகள் பிரச்சனை குறித்து ஐ.நா. மன்றத்தில் வலுவாக எடுத்துச்சென்று அரசாங்கம் முறையிடாதது குறித்து.
 32. உலகில் பல நாடுகளில் இனவெறி, நிறவெறி ஆகியவற்றுக்கு ஆளாகிடும் இந்தியக் குடிமக்களைப் பாதுகாத்திட அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது குறித்து.
 33. உலகில் பல நாடுகளில் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் இந்தியக் குடிமக்களை விடுவித்து, இந்தியா கொண்டு வருவதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது குறித்து.
 34. அரசாங்கம், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்ததன் மூலமும், மேலும் பல பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்திட நடவடிக்கைகள் எடுத்து வருவதன் மூலமும் பல லட்சக்கணக்கான வேலைகள் இழப்பு ஏற்பட்டிருப்பது குறித்து.
 35. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்றான மத்திய-மாநில உறவுகள் குறித்து மறுபரிசீலனை செய்திட அரசாங்கம் முன்வராதது குறித்து.
 36. அரசாங்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு ஆறு சதவீதமும், சுகாதாரத்திற்கு ஐந்து சதவீதமும் ஒதுக்கத் தவறியிருப்பது.
 37. உலக அளவில் நிலவிவரும் பொருளாதார மந்தத்திலிருந்து நம் பொருளாதார நிலைமையை சரிசெய்து கொள்வதற்கு உதவிடும்விதத்தில் பொதுத்துறையிலும், நிலச் சீர்திருத்தங்கள் உட்பட சமூகத் துறைகளிலும் அதிக நிதி முதலீடு செய்திடவும், அரசாங்கம் முன்வராதது.
 38. நம் ராணுவத்தினருக்கு அளிக்கப்பட வேண்டிய ஆயுதங்கள் விநியோகத்தில் சீரழிவு ஏற்பட்டிருப்பது.
 39. முற்றிலும் காலாவதியாகிப்போன வறுமைக் கோட்டு வரையறையை அரசாங்கம் மாற்ற முன்வராதது குறித்தும், “ஆதாரி”ன் கீழ் தனிநபர் விஷயங்கள் வெளியில் கசியும் நிலை உருவாகி இருப்பது குறித்தும்.
 40. நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிகரித்திருப்பது.
 41. மேற்கு வங்கத்தில் சீட்டு நிறுவன ஊழல்களை வெளிக் கொணர்வதிலும் மற்றும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு ஊழல்களை வெளிக் கொணர்வதிலும் மத்திய புலனாய்வு அமைப்புகள் தோல்வி அடைந்திருப்பது.
 42. உலகப் பொருளாதார மந்தத்தின் விளைவாக பல லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்திருப்பது குறித்தும், வாழ்வாதாரங்களை இழந்திருப்பது குறித்தும், பல தொழில்நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டது குறித்தும், பல நிறுவனங்களில் தொழிலாளர்களின் ஊதியங்களில் வெட்டு, தொழிலாளர்கள் பணிநீக்கம் முதலானவை ஏற்பட்டிருப்பது குறித்தும்.
 43. உலக அளவில் பசுமை வாயுக்கள் (green house gases) உமிழ்வதைக் குறைப்பதற்கு இந்தியாவின் பங்களிப்பு தொடர்பாக தற்போது இருந்துவரும் வரையறையை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாதது.
 44. மாநிலங்களுக்கிடையேயான ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்திடும் விதத்தில் சிறப்பு அந்தஸ்து மாநிலங்களுக்கு, சிறப்பு நிதித் தொகுப்பு எதுவும் இல்லை.
 45. வட கிழக்கு மாநிலங்களும், கேரள மாநிலமும் மத்திய அரசிடம் வாங்கிய கடன்களை அதற்கான வட்டி உட்பட ஒரு தடவை கடன் நிவாரண நிதித்தொகுப்பு அளிப்பது தொடர்பாக எதுவும் இல்லை.
 46. வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்குவது குறித்தோ அல்லது வேலையில்லா இளைஞர்களுக்கு அதற்கான நிவாரணம் வழங்குவது குறித்தோ எதுவும் உரையில் இல்லை.
 47. மிகவும் வேகமான முறையில் வேலையில்லாக் கொடுமைக்கு ஆளாகி, துன்புறும் விவசாயத் தொழிலாளர்களைப் பாதுகாத்திடும் வண்ணம் ஒருங்கிணைந்த மத்தியச் சட்டம் கொண்டுவராதது.
 48. வேளாண் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததன் காரணமாக விவசாயிகளும் மற்றும் அவர்தம் குடும்பத்தினரும் தற்கொலை செய்து கொள்வதைக் கட்டுப்படுத்திட துல்லியமான நடவடிக்கைகள் எதையும் அரசு எடுக்காதது.
 49. நிலமற்ற விவசாயிகளுக்கு நிலமும், வீடற்றவர்களுக்கு வீட்டுமனைப் பட்டாவும் வழங்கக்கூடிய விதத்தில் நிலச் சீர்திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக.
 50. ஒருங்கிணைந்த ஊட்டச்சத்துத் திட்டத்தை அனைவருக்கும் விரிவாக்கும் விதத்திலும் அங்கன்வாடி மற்றும் ‘ஆஷா’ போன்று திட்டப்பணிகளில் பணியாற்றுபவர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்குவது தொடர்பாக.
 51. வளர்ச்சியற்றிருக்கிற குக்கிராமங்களின் வளர்ச்சிக்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது.
 52. மின்சாரத்தின் தேவை மற்றும் விநியோகத்தில் இருந்துவரும் இடைவெளியைச் சரிக்கட்டுவது தொடர்பாகவும், கேரளாவில் ஓடும் பல்வேறு ஆறுகளின் மூலம் நீர் மின்சாரம் உற்பத்தி நிலையங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தவறியிருப்பது குறித்தும்.
 53. ஏர் இந்தியா நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உயர்த்தும் விதத்தில் நடவடிக்கைகள் எடுப்பதில் அரசாங்கம் தோல்வி அடைந்திருப்பது குறித்து.
 54. அரசாங்கம், நாட்டு மக்கள் அனைவருக்கும் குறைந்தபட்சம் மாதத்திற்கு 35 கிலோ உணவு தானியங்கள் கிலோ ரூ.2 வீதம் அளித்திடவும், சர்க்கரை 3 கிலோ கிராம், பருப்பு வகைகள் 5 கிலோ கிராம், சமையல் எண்ணெய் 2 லிட்டர் அளித்திடவும் வலுவான நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பது.

Check Also

நாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் ...