குற்றவாளிகள் ஆட்சி தொடர்வது நாட்டுக்கே பெருத்த அவமானம்

கடலூர் தேரடி தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் செவ்வாயன்று (அக்.23) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

தமிழ்நாட்டின் ஆளுநர் குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டிருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்திற்கு முன் குற்றவாளியாக நிற்கிறார். துணை முதல்வர் மீதும் குற்றச்சாட்டு உள்ளது. அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு, பாலியல் குற்றச்சாட்டு உள்ளது. நாட்டை ஆளும் பிரதமர் மோடியும் ஊழல் புரிந்துள்ளார். மத்திய அமைச்சர்களும் ஊழல், பாலியல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பவில்லை. இப்படி நாட்டை ஆளுகின்றவர்கள் ஒட்டுமொத்தமாக குற்றவாளிகளாகவும், ஊழல்வாதிகளாகவும் இருப்பது நாட்டிற்கே பெருத்த அவமானமாகும்.
பிரதமர் மோடியின் பொருளாதாரக் கொள்கை இந்திய நாட்டை பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்கும் கொள்கையாகும்.

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களை சுற்றியுள்ள பன்னாட்டு கம்பெனிகளின் தொழிற்சாலைகளில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இங்கு நான்கு சக்கர வாகனங்கள், இரண்டு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் ஏராளமான தொழிலாளர் கள் அடிமைகள் போல் வேலை வாங்கப்படுகிறார்கள். தொழிலாளருக்கு குறைந்தபட்ச ஊதியமில்லை, இந்திய சட்டத்தை பன்னாட்டு முதலாளிகள் அமல்படுத்த தயாரில்லை. முறையான வரி வருவாய் வருவதில்லை. மாறாக இந்திய தொழிலாளர்களை கசக்கிக் பிழிந்து கொள்ளையடிக்கும் கூட்டமாக பன்னாட்டு முதலாளிகள் உள்ளனர். இப்படிப்பட்ட வளர்ச்சி யாருக்குத் தேவை?

நவம்பர் 8 ஆம் தேதி வந்தால் பணமதிப்பிழப்பின் இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறும். கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 1000, 500 ரூபாய் நோட்டுகளை செல்லாத நோட்டு ஆக்கினார் பிரதமர் மோடி. கறுப்பு பணம் ஒழிந்ததா?, ஆனால் ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் ஒரு சதவீதம் கூட கறுப்பு பணம் ஒழிக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

ஜி எஸ் டி கொண்டு வந்ததால் பொருளாதார வளர்ச்சி மேலும் குறைந்துள்ளது. நான்கு ஆண்டுகளில் வளர்ச்சி சரிந்துள்ளது என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இப்படிப்பட்ட ஆட்சி இனி நீடிக்கக் கூடாது.

வங்கிகளில் ஒவ்வொரு வாக்காளர் பெயரிலும் 15 லட்சம் ரூபாய் போடுகிறேன் என்று கூறியவர்கள் 15 ரூபாய் கூட போடவில்லை. மாறாக மக்களுடைய பாக்கெட்டுகளிலும், ஏழை மக்களின் வங்கி கணக்குகளிடமிருந்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

மோடியின் ரபேல் ராணுவ பேர ஊழலால் உலகமே நாறுகிறது. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும். ராணுவ தளவாட கொள்முதல் என்ற பெயரால் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை மடைமாற்றிக் கொள்ளும் ஏற்பாடுதான் ரபேல் ஒப்பந்தம்.

ஏற்கனவே இருந்த அரசு போட்ட ஒப்பந்தத்தை யாருக்கும் தெரியாமல் ரத்து செய்தும், மூன்று மடங்கு விலை அதிகம் கொடுத்து இல்லாத கம்பெனி இருக்கிறது என்று அம்பானியின் ரிலையன்ஸ் கம்பெனியை பங்குதாரராக சேர்த்து இந்திய மக்களின் பணம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. பிரதமர் மோடி நாடு நாடாகச் சென்று, “இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள், வாருங்கள்’’ என்று கூறி வருகிறார். வரும் முதலாளிகளிடம் பெரும் தொகை கமிஷனாக பெறப்படுகிறது. மோடி நாட்டுக்கு அவமானம், இப்படிப்பட்ட பிஜேபி ஆட்சி இந்தியாவில் இனியும் நீடிக்கக் கூடாது. பாஜகவை எதிர்க்க யார் வருகிறார்களோ அவர் களை சேர்த்துக் கொண்டு தேர்தல் போராட்டம் தொடரும்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஊழல் புகாருக்கு ஆளாகிறார். நெடுஞ் சாலைத்துறையில் 4,800 கோடி டெண்டர் விடப்பட்டு ஊழல் நடைபெற்றுள்ளது. ஐஜி மீது காவல் கண்காணிப்பாளர் பாலியல் புகார் கூறுகிறார். புகார் கூறியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தவறிழைத்தவர் மீது நடவடிக்கை இல்லை.

இது முதலமைச்சர் செய்யும் ஊழலை கண்டுகொள்ளாமல் இருக்க பரஸ்பர உடன் பாட்டோடு செயல்படுவதாக தெரிகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை முதலமைச்சரின் எடுபிடி துறையாக உள்ளது. மக்களை பற்றி கவலைப்படாமல் நாள்தோறும் தன்னை பாதுகாத்துக் கொள்வதும், தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பதில் கூறுவதற்குமே முதலமைச்சர் தனது நேரத்தை செலவிடுகிறார்.

இரண்டு ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இடைத்தேர்தல் அறிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் தேர்தல் நடந்தால் அதிமுகவின் முகத்திரை கிழித்து எறியப்படும் என்ற காரணத்தினால் மோடியோடு கைகோர்த்துக் கொண்டு இடைத்தேர்தலை தள்ளி வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை இல்லை. ஆட்சியில் ஊழலை தவிர எதுவுமே நடைபெறவில்லை.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நீதிமன்றத்தை நாடி சிபிஐ விசாரணைக்கு வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி கேட்டதன் விளைவாக அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.

8 வழிச் சாலைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்தின் விளைவாக ஆறு வழிச் சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. தற்போது அந்த திட்டம் வேண்டுமா என்று மறுபரிசீலனை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது.

அதேபோல் கோவையில் பன்னாட்டு கம்பெனிக்கு தண்ணீர் விநியோக உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி போராடி வருகிறது. தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும்.

கேரளாவில் வெள்ளம் பாதித்த மக்களை காப்பதிலும், நிவாரண உதவிகளிலும் அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக மத்திய அரசு வஞ்சகம் செய்கிறகிறது. ஐயப்பன் கோயில் விவகாரத்தில் மட்டுமல்ல அனைத்து கோயில்களிலும் பாலின அசமத்துவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, சமத்துவம் வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கூறி வருகிறது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமல்படுத்தாமல் இருக்க முடியாது. பிஜேபி, ஆர்எஸ்எஸ், காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து கேரளத்தை நாசகரமாக ஆக்க முயற்சிக்கின்றனர். பழைய கால கண்மூடித்தனமான பழக்கங்களை இன்றும் அமல்படுத்த முடியாது. அரசை செயல்படவிடாமல் இவர்கள் செயல்படுகின்றனர். கலவர பிரதேசமாக கேரளாவை மாற்ற சதி வேலையை செய்துவரும் இவர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி இடமளிக்காது.

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...