கூடங்குளத்தில் போராடும் மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் நேரில் சந்திப்பு

கடந்த 10-ஆம் தேதி இடிந்தகரை  பகுதியில் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட  மக்கள் மீது காவல் துறை நடத்திய தாக்குதல் பற்றி நேரில் விசாரிக்கவும் ஆறுதல் கூறவும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி ஒரு குழுவை இடிந்தகரைக்கு அனுப்பியது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் , மாநிலக்குழு உறுப்பினர் ஆர். அண்ணாத்துரை எம்.எல்.ஏ., நெல்லை மாவட்ட செயலர் கே.ஜி. பாஸ்கரன் மற்றும் கருணாநிதி, வரகுணன் ஆகியோர் அக்குழுவில் இடம் பெற்று இருந்தனர். இக்குழு இடிந்தகரையில் பாதிக்கப்பட்ட  மக்களையும் போராட்டக்குழு  பொறுப்பாளர்களில் ஒருவரான ஜேசுராஜையும் சந்தித்தது.

பாதிக்கப்பட்ட மக்கள் மார்க்சிஸ்ட் கட்சிக் குழுவினரிடம், 10-ஆம் தேதி நடைபெற்ற காவல்துறையின் தாக்குதலில்  18 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்; 58 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்; சுனாமி காலனி பகுதியில் 46 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன; வீட்டிலுள்ள பொருட்கள் உடைக்கப்பட்டுள்ளன; லூர்து நாதர் ஆலயம் சேதமாகி உள்ளது; 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன;

இடிந்தகரை , கூடங்குளம், சுனாமி காலனி போன்ற இடங்களில் காவல்துறையினர் வீடு புகுந்து நடத்தி உள்ள சோதனை அப்பகுதிகளில் பதட்டத்தை உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்தனர். 10-ஆம் தேதி கூடிய மக்கள் மீது 500-க்கும் அதிகமான   கண்ணீர் புகைக் குண்டுகள்  வீசப்பட்டன. இத்தாக்குதலால்  100-க்கும் அதிகமான  பெண்களின்  முகத்தோலில்  அரிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் காவல்துறையின் அடக்குமுறைகள் குறித்தும் கவலை  தெரிவித்தனர். மேலும் இடிந்தகரைப் பகுதியில் நேற்று (13.09.12) கப்பற்படையின் விமானம் 15 அடி உயரத்தில் பல முறை பறந்து மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.  சகாயம் என்பவர் இப்பீதியில் அதிர்ச்சியுற்று  கீழே விழுந்து தலையில் காயம் அடைந்து நாகர்கோவில் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகிறார். காவல்துறையின் மேற்கண்ட அராஜகப் போக்கை  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக்   கண்டிக்கிறது.

அணு உலை வேண்டாம் என்பதல்ல மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின்  நிலைபாடு. ஆனால் அதே நேரத்தில் அணு உலை குறித்து அச்சம்  அடைந்துள்ள  மக்களிடம்  மத்திய-மாநில அரசுகள்  போதுமான விளக்கம் அளித்து மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல, இது மத்திய மாநில அரசுகளின் கடமை என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

சட்ட ஒழுங்குப் பிரச்சனையாக இதைப் பார்க்காமல் அப்பகுதி மக்கள் மீது  காவல்துறை தொடுத்துள்ள அனைத்து வழக்குகளையும்  திரும்பப் பெறுவதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய  நிவாரணம் வழங்க வேண்டுமென்றும், அப்பகுதி வளர்ச்சி குறித்து அரசு ஏற்கனவே அறிவித்துள்ள வளர்ச்சிப் பணிகளை விரைவில் துவக்கி செயல்படுத்த வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

Check Also

எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு இசை உலகிற்கு பேரிழப்பு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

மக்கள் மனங்கவர்ந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அஞ்சலி செலுத்துவதுடன், ஆழ்ந்த ...

Leave a Reply