கூடங்குளத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகள் அமைக்கும் மத்திய அரசின் முடிவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு

மார்ச் 20, 2013ல், பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3வது மற்றும் 4வது அணு உலைகள் அமைப்பதற்கான அனுமதி அளிக்கப் பட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இதை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது.

நாட்டு நலனுக்கு எதிராக அமெரிக்காவுடன் கையெழுத்திடப் பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்திய எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய 2020க்குள் 40000 மெகா வாட் திறனுள்ள அணு உலைகளை இறக்குமதி செய்ய வேண்டும் என ஐக்கிய முற்போக்கு கூட்டணி  அரசு ஏற்கனவே முடிவெடுத்து அறிவித்துள்ளது. அமெரிக்காவிலிருந்து 10000 மெகா வாட் திறன் கொண்ட அணு உலைகள் வாங்க ஒத்துக் கொண்டதோடு, எங்கும் சோதித்துப் பார்க்காத, மிக அதிக விலையுள்ள பிரெஞ்சு அணு உலைகளை ஜெய்தாபூரில் நிறுவவும் முடிவெடுத்துள்ளது. அதே போல், கூடங்குளத்தில், இருக்கும் 2 உலைகளுடன், கூடுதலாக 4  உலைகளை நிறுவவும் தீர்மானித்திருக்கிறது.
 
புகுஷிமாவில் பல உலைகளை ஒரே இடத்தில் நிறுவி அணு சக்தி பூங்காக்களை உருவாக்கியது, விபத்து நடந்த போது பாதிப்புகளை அதிகரித்தது என்பதால், இத்தகைய பூங்காக்களை இந்தியாவில் எங்குமே நிறுவக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கட்சி ஏற்கனவே உறுதி படக் கூறியிருக்கிறது. எனவே, கூடங்குளத்தில் 3வது, 4வது உலைகளை நிறுவுவதையும், 6 வரை நிறுவ முடிவெடுத்திருப்பதையும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக எதிர்க்கிறது.
 
கூடங்குளத்தில் நிறுவப்பட்ட முதல் 2 உலைகள், 20 ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்ட ஒப்பந்தத்தின் பகுதி என்பதும், குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள், இந்திய அணுசக்தி பயன்பாட்டுக்குத் தடை விதித்திருந்த காலத்தில் அதை எதிர்கொள்ள ரஷ்யாவுடன் உருவான ஒப்பந்தம் என்பதும், அவற்றை வித்தியாசப் படுத்துகிறது. ஆனால், 2011 புகுஷிமா விபத்தின் படிப்பினையாக, அனைத்து அணு மின் நிலையங்களிலும், குறிப்பாகக் கூடங்குளத்திலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த சுயேச்சையான சோதனை மேற்கொள்ளப் பட்டு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள்  உறுதி செய்யப் பட வேண்டும். அத்துடன் கூடங்குளம் பகுதி மக்களின் அச்சத்தையும், வாழ்வாதாரம் குறித்த கவலைகளையும் போக்க வேண்டும். அது வரை, முதல் இரண்டு உலைகளைப் பயன்படுத்தி, மின் உற்பத்தியைத் துவங்கக்கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது. தேசிய அளவில் சுயேச்சையான மற்றும் சுய அதிகாரம் படைத்த அணுசக்தி நெறிப்படுத்தும் அமைப்பு உருவாக்கப் பட வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தியுள்ளது.
 
இந்நிலையில், அடுத்த 2 உலைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது மக்கள் நலனை விட, அமெரிக்காவுக்கு அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தான் அரசு தீர்மானமாய் இருக்கிறது என்பதைத் தெளிவாக்குகிறது. புதிய அணு உலைகளை விற்கும் ரஷ்ய நிறுவனம், அணுசக்தி விபத்து பொறுப்பு சட்ட விதிகளை ஏற்க மறுத்துள்ளது. ஏற்கனவே வாங்கப் பட்ட 2000 மெகா வாட் திறன் அணு உலைகளை அமைக்க ரூ.14000 கோடி செலவழிக்கப் பட்டது. தற்போது அதே 2000 மெகா வாட் திறன் உலைகளுக்கு ரூ.40000 கோடியாகும் என்று கூறப்படுகிறது. இது, உற்பத்தி செலவை அதிகரித்து, மின்சாரம் கட்டுப்படியாகாத  விலைக்கு விற்கப்படும் நிலைக்குத் தள்ளும்.
 
அணுமின்சாரமே கூடாது என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் கருத்து அல்ல. உள்நாட்டு அணுஉலைகளைப் பயன்படுத்தி பாதுகாப்பு ஏற்பாட்டோடு மின்உற்பத்தி  செய்வதில் தவறில்லை. அதிகரித்து வரும் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய அனைத்து ஆதாரங்களும் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், அதற்காகப் பெருமளவு அணு மின் உற்பத்தியைச் சார்ந்திருப்பதும், அதற்காக அதிக விலையுள்ள அணு உலைகளை இறக்குமதி செய்வதும் நாட்டு நலனுக்கு உகந்ததல்ல. அணுசக்தி பூங்காக்கள் மக்களின் பாதுகாப்புக்கும், சுற்றுச் சூழலுக்கும் ஆபத்துக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தவை. எனவே, மத்திய அரசு இந்த முடிவைக் கை விட வேண்டும் என்றும், அனைத்து ஜனநாயக சக்திகளும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிராக ஒன்று பட்டுப் போராட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

 

Check Also

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள 9 மாத ஊதியத்தை உடனே வழங்கிடுக!

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி – பணிநிரந்தரம் செய்திடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்! அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ...

Leave a Reply