கூடங்குளத்தில் 5 மற்றும் 6வது அணு உலைகளுக்கான விரிவாக்கப் பணிகளை உடனடியாக கைவிடுக

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன், உ.வாசுகி, பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

கூடங்குளத்தில்  5 மற்றும் 6வது அணு உலைகளுக்கான விரிவாக்கப் பணிகளை  உடனடியாக கைவிட வேண்டும்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின்சாரம் தயாரிப்பதற்கான இரண்டு அணு உலைகள் ஏற்கனவே இயங்கி வருகிறது. அதை ஒரு அணு உலை பூங்காவாக மாற்றுவதற்கான திட்டத்தோடு, அடுத்தடுத்த அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளையும் பாஜக அரசு தொடர்ச்சியாக எடுத்து வருகிறது.

கடந்த 2016ல் மூன்று மற்றும் நான்காம் அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான பணிகளை பிரதமர் மோடி துவக்கி வைத்த போதே எழுந்த மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, அதில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளையும் நிர்மாணிப்பதற்கான இடம் தற்போது தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்க உள்ளதாகவும், அதற்கு அணுசக்தி துறையின் ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

ஒரே இடத்தில் இத்தகைய பல அணு உலைகளை நிர்மாணித்து அணு உலை பூங்கா அமைப்பதால் ஏற்படும் பிரச்னைகளும், ஆபத்துகளும் குறித்து பட்டியலிட்டு விடுக்கப்படும் எச்சரிக்கைகளை பாஜக அரசு துளியும் கண்டுகொள்ளாமல் ஒருதலைபட்சமாகவே இத்தகைய நடவடிக்கைளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.

அணு உலை பூங்காக்களால் உருவாகும் சுற்றுச் சூழல் அபாயம், இவற்றால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் நோய்கள், அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதில் உள்ள நடைமுறை பிரச்னைகள், இதனால் பெரும் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு என பல்வேறு ஆபத்துக்கள் உள்ளன. ஏற்கனவே ரஷ்யாவில் செர்னோபில், ஜப்பானில் புகுஷிமா உள்ளிட்ட பல்வேறு அணு உலை பூங்காங்களில் ஏற்பட்ட விபத்துக்களின் காரணாமாக ஏராளமான மக்களும் உயிரிழப்பிற்கு ஆளாகியுள்ளார்கள்.

எனவே இந்நிலையில், கூடங்குளத்தில் தற்போது இயங்கி வரும் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய அணு உலைகளை தவிர்த்து கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் மூன்று, நான்கு அணு உலைகளுக்கான நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துவதோடு, தற்போது துவங்கப்பட்டுள்ள ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளுக்கான பூர்வாங்க பணிகளையும் உடனடியாக கைவிட வேண்டுமென ஒன்றிய பாஜக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுப்பதோடு, இத்தகைய பணிகளை நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளில் தமிழக அரசும் இணைந்து நிற்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Check Also

அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதமான இட ஒதுக்கீடு! சிபிஐ(எம்) வரவேற்பு! முழுவெற்றி பெற தொடர்ந்து போராடுவோம்!

மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15 சதமான இடங்களை மத்திய தொகுப்புக்கு ஒன்றிய அரசு எடுத்து கொண்டது. இந்த இடங்களுக்கு ...