கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டக்குழு வலியுறுத்தல்

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மத்திய அரசின் நேரடி பார்வையில் இயங்கி வரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சுமார் 7,000த்திற்கும் அதிகமான ஒப்பந்த தொழிலாளர்கள் எல்&டி போன்ற ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் வேலை செய்து வருகிறார்கள். இதில் 6000 பேர் வடமாநில தொழிலாளர்கள். இவர்களுக்கு குறைந்த அளவு ஊதியமே வழங்கப்படுகிறது.

144 தடை உத்தரவு பிறப்பித்த இந்த காலத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கவில்லை. இயங்காத இந்த காலத்தில் தொழிலாளர்களுக்கு அனைவருக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின்  நேரடி பார்வையில் இயங்கும்  கூடங்குளம் அணுமின் நிலையம் மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்தவில்லை. மார்ச் மற்றும் ஏப்ரல் மாத சம்பளம் அனைத்து தொழிலாளர்களுக்கும் முழுமையாக வழங்கப்படவில்லை. 

இதன் காரணமாக தொழிலாளர்கள் அனைவரும் வருமானமின்றி மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் வாழ்வதற்கு வழி இல்லாமல் தவிக்கின்றனர். வடமாநில தொழிலாளர்களில் 4,800 பேர் அணுமின் நிலைய வளாகத்தினுள் 2400 பேர் மட்டுமே தங்கும் அளவு கொண்ட ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 

போதுமான கழிப்பறைகளோ அடிப்படை வசதிகளோ அங்கு இல்லை. இந்தச் சூழ்நிலையில் இன்று தொழிலாளர்கள் வேலையில்லாத காலத்திற்கு மத்திய அரசின் அறிவிப்பின்படி  சம்பளம் வழங்க வேண்டும்,  தங்களின் மாநிலத்துக்கு அனுப்ப வேண்டும் என தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். ஜார்கண்ட், பீகார், ஒரிசா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களை சேர்ந்த இந்த தொழிலாளிகள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் தங்கள் ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதில் சொந்த மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என 3344 தொழிலாளர்கள் ஆன்லைனில் அப்ளை செய்துள்ளனர்.

தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல ஏற்பாடு செய்ய தவறிய  ஒப்பந்தகாரர்களும், நிர்வாகமும் போலீசை வைத்து தேவையற்ற சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்கி உள்ளனர். 32 தொழிலாளர்கள் மீது பத்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது வன்மையான கண்டனத்துக்குரியது. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் செயலையும் காவல்துறையின்  நடவடிக்கையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட குழு வன்மையாக கண்டிக்கிறது. அனைத்து தொழிலாளர்களுக்கும் மார்ச்,ஏப்ரல் மாத சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். 

வெளிமாநில தொழிலாளிகளை கூடங்குளம் அணுமின் நிலைய ஏற்பாட்டிலேயே அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப விரைவான நடவடிக்கைஎடுக்க வேண்டும். இந்த பிரச்சினையில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நெல்லை மாவட்ட குழு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

கே.ஜி.பாஸ்கரன்

மாவட்டச் செயலாளர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

நெல்லை மாவட்டக்குழு

Check Also

வாழ்விழந்த மக்களுக்கு வாழ்விடம் கோரிய போராட்ட பயணத்தடம்…

PDF பதிவிறக்கம் செய்யDownload பெருநகர சென்னை மாநகராட்சி, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்குக்கு சென்னையை சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து ...