கூடங்குளம் அணு உலை பூங்கா திட்டத்தை கைவிடுக!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் 2016, ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய இரு தேதிகளில் சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், உ.வாசுகி, பி.சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இன்றையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

கூடங்குளம் அணு உலை பூங்கா திட்டத்தை கைவிடுக!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 1, 2 அலகுகள் தொடர்ச்சியாகவும், முழுமையாகவும் செயல்படாத நிலைநீடித்துக் கொண்டிருக்கிறது. அணுமின் நிலைய நிர்வாகமும், அரசும் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு காரணங்களை கூறி வருகிறார்கள். இயக்கத்தின் ஏற்படும் தடை, தரமற்ற உபகரணங்கள் ஆகியவை குறித்து பல்வேறு விமர்சனங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன. இவை கூடங்குளம் அணுமின் நிலையத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாகக்குவதாக இருக்கின்றன. எனவே, மத்திய அரசும், கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகமும் எழுந்திருக்கக்கூடிய விமர்சனங்கள் குறித்து உடனடியாக உரிய விளக்க்ததை அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

மேலும் கூடங்குளத்தில் ஒரு அணுஉலை பூங்கா அமைப்பதற்கான ஒப்பந்தங்களை ரஷ்ய அரசாங்கத்தோடு இந்திய அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. புகுஷிமா விபத்துக்குப் பிறகு பொதுவாக அணுஉலை பூங்காக்கள் அமைப்பதை பல்வேறு அமைப்புகளும் எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை அணு உலை பூங்காகவாக மாற்றும் முயற்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. இதை கைவிட வேண்டுமென மத்திய அரசை மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்று அஞ்சிய அப்பகுதி மக்களும், மீனவர்களும் போராடி வருகிறார்கள். இந்நிலையில் தமிழக அரசு குத்துமதிப்பாக 1000 பேர், 2000 பேர் என்று குற்றம் சாட்டி வழக்குகள் பதிவு செய்திருக்கிறது. இதனால், கூடங்குளம் மற்றும் அருகிலுள்ள போராட்டத்தில் ஈடுபட்ட கிராமங்களிலுள்ள இளைஞர்கள் யாரும் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்ல முடியாத நிலை இருக்கிறது. நிலுவையிலுள்ள வழக்கை காரணமாக்கி பாஸ்போர்ட் தருவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் இத்தகைய வழக்குகளை கைவிட வேண்டுமென்று சொன்ன பிறகும் பழிவாங்கும் நோக்கோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடைய வாழ்க்கையை, வேலை வாய்ப்பை சீரழித்துக் கொண்டிருப்பதை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டுமென்றும், போராட்டக்காரர்கள் மீது தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் கைவிட வேண்டுமென்றும் மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

Check Also

சட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் சிபிஐ (எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி (2021) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...