கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்துக

14.6.2016

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் 2 நாள் தமிழ்நாடு மாநிலகுழுக் கூட்டம், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ் தலைமையில் இன்று (14.6.2016)  சென்னையில் துவங்கியது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பி.வி. ராகவலு, மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ.வாசுகி, பி.சம்பத், அ. சவுந்தரராசன், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இன்றைய முதல்நாள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு.

  1. தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்துக

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்துக

தமிழகத்தில் 2016-17 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பள்ளிகள், கல்லூரிகளில் நடந்து வருகின்றன. தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அதன் அருகமை பகுதியில் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று மத்திய கல்வி உரிமைச் சட்டம் கூறுகிறது. ஆனால் தமிழகத்தில் இந்த இடஒதுக்கீடு சட்ட அமலாக்கம் தொடர்ந்து மீறப்பட்டே வருகிறது. இந்த சட்டம் முறையாகவும், முழுமையாகவும் அமலாக்கப்படுவது குறித்து பள்ளிக் கல்வித்துறையும், தமிழக அரசும் கண்டு கொள்ளாத நிலைமையே தொடருகிறது. இதனால் ஏழை, எளிய குடும்பத்து மாணவர்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசே இதற்கு காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது. எனவே ஒவ்வொரு பள்ளியிலும் 25 சதவிகிதம் ஏழைக் குடும்பத்து மாணவர்கள் இடஒதுக்கீட்டு சலுகையின் அடிப்படையில் சேர்க்கப்படுவதை உறுதி செய்திட வேண்டுமென்றும், மாணவர்கள் சேர்க்கை குறித்து பள்ளிகளின் தகவல் பலகையில் வெளிப்படையான அறிவிப்பு செய்திட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேலும் ஒதுக்கீட்டு உரிமையின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட மாணவர்களிடம் அரசின் நிதி இன்னும் கிடைக்கவில்லை என்று சொல்லி தனியார் பள்ளி நிறுவனங்கள் முழுக் கல்விக் கட்டணத்தையும் மாணவர்களையே உடனடியாக செலுத்த நிர்ப்பந்திப்பதால்  கட்டணம் செலுத்த முடியாமல் பல மாணவர்கள் பள்ளியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அவல நிலைக்கு தமிழக அரசின் மெத்தனப்போக்கே காரணமாகும்.

இதுபோல் தனியார் பள்ளிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட வரைமுறையின்றி கல்விக் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்து பெற்றோர்களும், மாணவர்களும் சொல்லொணா துயரத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். கல்வி கட்டணம் என்ற பெயரால் கொள்ளையடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

  1. நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2500/- விலை நிர்ணயம் செய்க

வேளாண் விளைபொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பரிந்துரை அடிப்படையில் உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவிகிதம் உயர்த்தி விலை வழங்கப்படும் என்று தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்து ஆட்சியை கைப்பற்றிய பிஜேபி தற்போது அதற்கு மாறாக விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 60/- மட்டுமே உயர்த்தி அறிவித்திருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் விலை உயர்வு அறிவிப்புக்கு பின்னரும் சன்ன ரகத்துக்கு ரூபாய் 1,510/-, மோட்டா ரகத்துக்கு ரூபாய் 1,470/- என்ற அளவிலேயே உள்ளது.

வேளாண் இடுபொருட்களின் விலை கடுமையாக உயர்நதுள்ளன. உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளன. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, வறட்சி, விவசாயப் பொருட்களுக்கு கட்டுப்படியான விலையின்மை, மத்திய மாநில அரசுகளின் தவறான அணுகுமுறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பெரும் துயருக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் நெல்லுக்கான மத்திய அரசின்  விலை அறிவிப்பு வேளாண் தொழிலையும், அதை  நம்பி வாழும் மக்களின் வாழ்க்கையையும் சீரழிக்கும். எனவே, தனது அறிவிப்பை மறுபரிசீலனை செய்து நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2,500/- விலை  கிடைக்கச் செய்திட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு மத்திய பாஜக அரசை வலியுறுத்துகிறது. இதனை உறுதி செய்திட தேவையான நடவடிக்கை எடுத்திட தமிழக அரசையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

  1. ஊடகங்கள் மீதான அவதூறு வழக்குகளை திரும்ப பெறுக

முதல்வரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாக  நக்கீரன் இதழின் மீது சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். இது, அதிமுக அரசு, விமர்சனங்களை ஒடுக்குகிற தன் நடைமுறையை மாற்றிக் கொள்ளாது என்பதைத் தெளிவாக்குகிறது. கடந்த 5 ஆண்டுகளில் எதிர் கட்சி தலைவர்கள் மீதும், பத்திரிகைகள் மீதும் சுமார் 190 அவதூறு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஏற்கனவே உச்சநீதிமன்றம், பெரும்பாலான அவதூறு வழக்குகள் தமிழகத்திலிருந்து தான் வருகின்றன என்று சுட்டிக்காட்டியதோடு, சொல்லப் பட்ட கருத்துக்கள் அரசு மீதான விமர்சனமே தவிர தனிநபர் மீதான விமர்சனமாகத் தெரியவில்லை என்று தெரிவித்தது. மேலும்  அப்படி தனிநபர் பாதிக்கப் பட்டால் அந்த நபர் தானே போட வேண்டும், ஏன் அரசு சார்பில் வழக்கு பதியப்படுகிறது என்றும் தமிழக அரசு வழக்கறிஞரிடம் கேட்டிருக்கிறது. ஜனநாயக ரீதியாக வெளியிடப்படும் கருத்துக்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கும் இப்போக்குக்கு எதிராக வலுவான கண்டனத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு பதிவு செய்கிறது. அவதூறு வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்துகிறது.

  1. மனித உரிமை மறுக்கப்படுவதை கண்டித்து

இத்தகைய கருத்தியல் ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக, மூத்த பெரியாரிய சிந்தனையாளரும் செயல்பாட்டாளரும் 80க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியருமான எஸ்.வி.ராஜதுரை பற்றிய ஆவணப்படம் திரையிடலுக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இப்படி செய்வதன் மூலமாகவே மாற்றம் குறித்த சிந்தனைகளுக்குப் பூட்டு போட்டு விடலாம் என்று அரசு நினைத்தால், அதை விட மாயை வேறு எதுவும் இருக்கமுடியாது.

பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பதைப் போல, அரசு ஒடுக்குமுறையில் ஈடுபடும் போது, காவல்துறையின் ஒரு பகுதியும் அதே பாணியைப் பின்பற்றுகிறது. புதுக்கோட்டையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் பூபதி கார்த்திகேயன், எழுத்தாளர் துரை குணா இருவரும் கரம்பக்குடி காவல் நிலைய ஆய்வாளரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவானந்தம் என்பவரிடம் பொய் புகார் ஒன்றை வற்புறுத்திப் பெற்று அதன் அடிப்படையில் கைது நடவடிக்கை நடந்திருக்கிறது. ஆய்வாளரின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் 5 வழக்குகள் பதிவு செய்யப் பட்டதில் இவர்களுக்குப் பங்கு இருக்கிறது என்பதும், கள்ளச்சாராயத்துடனும், சாதியத்துடனும் ஸ்தல காவல்துறை  சமரசம் செய்து கொள்வதைத் தொடர்ந்து அம்பலப்படுத்தினார்கள் என்பதும் தான் இவர்கள் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதன் பின்புலம். இதை வன்மையாகக் கண்டிப்பதுடன், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இப்பிரச்னையை விசாரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது. கைது செய்யப்பட்ட இருவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், கறம்பக்குடி காவல் நிலைய ஆய்வாளர் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது.

  1. ஆந்திராவில் கொல்லப்பட்ட 20 தமிழர்களின் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக

ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7ந் தேதி செம்மரக்கடத்தலை தடுக்கிறோம் என்ற பெயரில் தமிழகத்தைச் சேர்ந்த ஆதிவாசிகள் உட்பட 20 பேர் ஆந்திர காவல் மற்றும் வனத்துறையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டனர். நாடு முழுவதும் மனித உரிமையின் மீது அக்கரை கொண்ட பல்வேறு அமைப்புகள் இந்த கொடுமைக்கெதிராக வன்மையான கண்டனத்தை தெரிவித்தன. இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்போதே கோரியது. ஆனால் தமிழக அரசு இந்த பிரச்சனையில் போதிய அக்கரை காட்டவில்லை.

இந்த நிலையில், ஆந்திர உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு போதிய சாட்சியங்கள் இல்லையென்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதையேற்று வழக்கை முடிக்கலாம் என்று ஆந்திர மாநில அரசும் பரிந்துரை செய்துள்ளது. ஆந்திர மாநில அரசின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தமிழக அரசு, உடனடியாக தனது ஆட்சேபனையை ஆந்திர மாநில அரசுக்கு தெரிவிப்பதுடன், இந்த வழக்கை மத்திய புலனாய்வு பிரிவு (சி.பி.ஐ) விசாரணைக்கு உத்தரவிடுமாறு மத்திய அரசை வற்புறுத்த வேண்டுமென தமிழக அரசை சிபிஐ(எம்) மாநிலக்குழு கோருகிறது.

மனித உரிமைகளைப் பற்றி கவலைப்படாமல், சட்டவிரோதமான செயலில் ஈடுபட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சட்டப்படியான இழப்பீடும் கிடைக்கச் செய்யவும் இது அவசியம் என்பதை மாநிலக்குழு சுட்டிக் காட்டுகிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...