கூட்டுறவு வங்கிகளை சீரழிக்கும் ரிசர்வ் வங்கியின் ஆணையினை உடனே திரும்பப் பெற்றிடுக சிபிஐ(எம்)

தமிழகத்தில் 4474 பிரதம வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் கூட்டுறவு /நெசவாளர் கூட்டுறவு / மீனவர் கூட்டுறவு சங்கங்களும் உள்ளன. இவைகளுக்கு பணம் பட்டுவாடா மற்றும் கடன் வழங்குதல் மற்றும் வசூல் பணிகளை மாநிலத்தில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், இதன் 700-க்கு மேற்பட்ட கிளைகளும் செய்து வருகின்றன. இந்த 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும் முறையாக பாரத ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்ற வங்கிகளாகும்.

கடந்த 31-3-2016 அன்று இந்த வங்கிகள் அனைத்தும் லாபமடைந்த வங்கியாகவும், விவசாயிகளுக்கு கடன் உரிய நேரத்தில் வழங்கும் வங்கியாகவும், மாநில அரசு/மத்திய அரசின் கொள்கைகளை அமல்படுத்தும் வங்கியாகவும் திகழ்கின்றன. கடந்த 14-11-2016 அன்று பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கிகள் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை மாற்றவோ, வைப்புத் தொகையாக செலுத்தவோ கூடாது என்று தடை விதித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 6000 கோடிக்கு மேற்பட்ட விவசாய கடன்கள் மற்றும் பிரதம வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கிட வேண்டிய உரம், விதை மற்றும் வேளாண் பொருள்கள் விற்பனை செய்ய இயலாத வகையில் இச்சங்கங்களின் செயல்பாடுகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.

இதைப் போலவே நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், மீனவர் கூட்டுறவு சங்கங்கள்  உள்ளிட்ட அனைத்து வகை கூட்டுறவு சங்கங்களும் மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடின்மையால் முடங்கி கிடக்கின்றன. தமிழகத்தின் கிராமப்பொருளாதாரம் வெறிச்சோடிப் போய்கிடக்கிறது. கருப்புப்பணத்தை வெளியே கொண்டு வருகிறோம் என்று மத்திய அரசு அறிவித்து, அதன் மூலம் வெளியிடப்பட்ட இந்த ரிசர்வ் வங்கியின் ஆணையினால் சாதாரண ஏழை விவசாயிகள், விவசாயக்கூலிகள், நெசவாளர்கள், மீனவர்கள், பால், பட்டு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் என சுமார் 80 லட்சத்திற்கு மேற்பட்ட கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.

இந்த அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில், பால், நெசவு, மீனவர் மற்றும் பிற தொழில்களிலும் ஈடுபட்டுள்ள சாதாரண மக்கள் மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலம், பிற வங்கிகளில் செய்யப்படுவது போல் பணப்பரிவர்த்தனை செய்யவும், கிராமப்பொருளாதாரத்தை உயிரோட்டத்துடன் செயல்பட வைக்கவும்,  14-11-2016 வெளியிட்டுள்ள ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

Check Also

கோவையில் தேர்தல் ஆதாயத்திற்காக கலவரம் ஏற்படுத்தும் சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராகவும் அமைதியைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம்!

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்ததையொட்டி பாஜக மற்றும் ...