கேரளாவில் நடக்கும் அரசியல் கொலைகளைக் குறித்து அருண் ஜேட்லிக்கு ஒரு திறந்த மடல்

மதிப்பிற்குரிய அருண் ஜேட்லிக்கு,

துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் தங்கள் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பதற்கு வாழ்த்துகள். எங்கள் மாநிலத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். நிதித்துறைக்கும், பாதுகாப்புத் துறைக்கும் ஒருங்கே பொறுப்பு வகித்துத் கொண்டு, நாட்டின் தென்மூலைக்கு பயணம் செய்யும் சுமையையும் ஏற்றிருக்கும் முயற்சியைப் பாராட்டுகிறேன். ஜி.எஸ்.டி பிரச்சனைகள்,  குறைந்துவரும் வேலைவாய்ப்புகள், தேங்கும் பொருளாதாரம்  என நிதியமைச்சருக்கு பல வேலைகள் இருக்கும் சமயத்தில், தங்களது கேரள பயணத்திட்டம் கேரளாவின் மீது உங்களுக்கிருக்கும் அக்கறையைக் காட்டுகிறது.

உங்களுக்கிருக்கும் கடுமையான பொறுப்புகளுக்கும், நெருக்கடியான பணிச் சூழல்களுக்கு இடையில், நாட்டுக்கான சேவையில் உயிரை இழந்த துணிச்சலான ராணுவ வீரர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூற முடியுமா என எண்ணி வியக்கிறேன். ஆனால், கடந்த வாரத்தில் கும்பல் தகராறில் உயிரிழந்த ஆர்.எஸ்.எஸ் ஊழியரின் குடும்பத்தைச் சந்திக்க உங்களுக்கு நேரமிருந்திருக்கிறது. உங்கள் சித்தாந்தத்திற்கு நேரெதிரானவனாக நான் இருந்தபோதும், உங்களது கடமையுணர்ச்சியை பாராட்டியே தீர வேண்டும்.

எதிர்கட்சித் தலைவரோ, அரசியல் சுற்றுப்பயணம் செய்பவரோ, எங்கள் அழகிய நாட்டிற்கு வரும் விருந்தினர்களை கற்களை கொண்டு இல்லாமல், உயரிய மரியாதையைக் காட்டி உபசரிப்பதில் பெயர் பெற்றவர்கள் மலையாளிகள். மத்திய பிரதேசத்திலும், கர்நாடகாவிலும் தங்கள் கட்சி உறுப்பினர்களால், கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் சந்தித்த கசப்பான அனுபவங்களை இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

வெறிகொண்டு பேசும் சங்பரிவார் தலைவர்களைப் போல் இல்லாமல், நவீன உடையுடனும், மென்மையான குரலுடனும் தோற்றமளிக்கிறீர்கள். கல்வி கற்ற சமூகமான கேரள மக்கள், அரசியல் புரிதலுடனும், விசாலமான சிந்தனையுடனும் எதிர் சித்தாந்தத்தைக் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்களையும் மதிக்கிறார்கள். பெரும் மதிப்புடனும், எதிர்பார்ப்புகளுடனும் உங்கள் முன்பு சில உண்மைகளை முன்வைக்க விரும்புகிறேன்.

அரசியல் வன்முறைகளையும், நெருக்கடியான சூழல்களையும் முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை உறுதிசெய்யும் நடவடிக்கையாக திருவனந்தபுரத்தில் நடக்கவிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கவிருக்கும் நாளில் நீங்கள் கேரளாவுக்கு வருகை தருகிறீர்கள். அமைதியை உறுதிசெய்யும் வரலாற்று நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கிறீர்கள். தலைநகரில் மட்டும், பாஜக-ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறைகளில், 120 சிபி(ஐ)எம் தோழர்கள் படுமோசமாக காயமடைந்திருக்கிறார்கள். மாநிலச் செயலாளர், முன்னாள் உள்துறை அமைச்சரான கொடியேறி பாலகிருஷ்ணன் ஆகியோர் உட்பட 36 சிபி(ஐ)எம் தோழர்களின் வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

கண்ணூர் மாவட்டத்தில், குடும்பத்தின் கண்ணாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஸ்ரீஜன் பாபு கவலைக்கிடமான நிலையைக் குறித்து, அவரது துணைவி ரெம்யா எழுதிய கடிதம் இந்த நேரத்தில் உங்களுக்கு கிடைக்கப் பெற்றிருக்கும். உங்கள் சங் பரிவார் உறுப்பினர்களால், தனது கணவரின் மீது நடந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். 33 நாட்களாக மருத்துவமனையில் இருக்கும் அவருக்கு, தொடர்ச்சியாக அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன. வாழ்நாள் முழுவதும் அவர் படுக்கையிலேயே இருக்கும் நிலை வருமா, இயல்பு நிலைக்கு வருவாரா என மருத்துவர்களால் சொல்ல முடியாத நிலைதான் உள்ளது. இது ஸ்ரீஜன்பாபுவின் கதை மட்டுமல்ல. கடந்த வருடத்தில் மட்டும், 400 சிபி(ஐ)எம் ஊழியர்களுக்கு இதுதான் கதி. இந்த காலத்தில், சிபி(ஐ)எம் தோழர்களும், பிறரும் என மொத்தம் 13 பேர் ஆர்.எஸ்.எஸ்காரர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

சங் பரிவாரத்தால் கட்டமைக்கப்படும் அரசியல் கொலை கட்டுக்கதைகளை சில தேசிய ஊடகங்கள் வெளிச்சம்போட்டுக் காட்டின. அதில் ஒன்றை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். குற்றப்பதிவு தரவுகளின்படி, 2000 முதல் 2017 வரையில், 86 சிபி(ஐ)எம் ஊழியர்களும், 65 ஆர்.எஸ்.எஸ் – பாஜக ஊழியர்களும் உயிரிழந்திருக்கிறார்கள்.

கேரள அரசியல் வன்முறை என்று கட்டமைக்கப்படும் ஒரு சார்பான பொய்க்கதையை உடைத்து நொறுக்க இந்த எண்ணிக்கையே சாட்சி. மோடியின் குஜராத்திலும், யோகியாரின் உத்தரபிரதேசத்திலும் தங்களது ஆர்.எஸ்.எஸ் பட்டாளம் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்போது  இடதுசாரி கட்சி ஆளும் கேரளாவில் தான் தங்களது ஜனநாயக உரிமைகள் மீறப்படுவதாகக் கூறுவது அவர்களது வாதத்தை நியாயப்படுத்த அவர்களுக்கு வசதியாக இருக்கிறது.

உத்தரப் பிரதேசத்திலும், மத்தியப் பிரதேசத்திலும், குஜராத்திலும் நடக்கும் வன்முறைகள் தேசிய ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாவதில்லை. யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த இரண்டு மாதங்களில் நடந்த “729 கொலைகளையும்”, “803 பாலியல் வன்புணர்வுகளையும்” குறித்து ஊடகங்கள் அலறவில்லை. தோற்றுப்போன மாநிலங்களைக் குறித்து யாரும் விவாதிப்பதில்லை. மாறாக முழு கல்வியறிவு பெற்ற கேரள சூழலில், ஆங்காங்கே நடக்கும் சின்ன தகராறுகளும், சிறு சண்டைகளும் கூட அரசியல் வன்முறைகளாக சித்தரிக்கப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ் போல் அல்லாமல், பொறுப்புமிக்க அரசியல் கட்சியாக சிபி(ஐ)எம், அமைதியான சூழலைக் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

கொலைகளை நியாயப்படுத்துவதற்காக இந்த கொலைகளின் எண்ணிக்கையை நான் முன்வைக்கவில்லை. “சிகப்பு தீவிரவாதம்” என்னும் பெயரில் ஆர்.எஸ்.எஸும் பாஜகவும் அப்பாவித்தனத்தை அணிந்துகொள்வதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ரத்தம் படிந்த கரங்களுடன் நாங்கள் நிரபராதிகள் என உங்களால் கூறமுடியாது.

ஆர்.எஸ்.எஸ்காரர்களால் தாக்கப்பட்ட, கொல்லப்பட்ட அனைவரின் குடும்பங்களையும் சந்தியுங்கள் என நான் கூறவில்லை. அது முடியாத காரியமும் கூட. ஆனால் கேரள அரசு நடத்தவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒரு சாதகமான செய்தியை நீங்கள் அளிக்க விரும்பினால், நகரத்தின் மையப்பகுதியில் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட தோழர் விஷ்ணுவின் குடும்பத்தினரை நீங்கள் சந்திக்கவேண்டும். இதைப்போல பல சம்பவங்களை என்னால் சுட்டிக்காட்டமுடியும்.

உங்களது ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், கொல்லப்பட்ட சிபிஐ(எம்) செயற்பாட்டாளர்களின் குடும்பங்களை சந்திக்க உங்களை அனுமதிக்கப் போவதில்லை என எனக்கு தெரியும். இருப்பினும் ஒரு பனிவான பரிந்துரையைச் செய்ய விரும்புகிறேன். ஆலப்புழா மாவட்டத்தைச் சார்ந்த அனந்து, திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்மல் ஆகிய பதின்ம வயது ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளர்களின் குடும்பத்தையாவது சந்தியுங்கள். சொந்த இயக்க உறுப்பினர்களையே கொன்ற ஆர்.எஸ்.எஸ் அல்லது பாஜக தொண்டர்களின் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?

இந்தக் கடிதத்தை முடிப்பதற்கு முன்பாக, எங்கள் மாநிலத்திற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் -இன் விவரமான திட்டத்தை உங்களுக்கு முன்வைக்க விரும்புகிறேன். ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை இங்கு கொண்டுவருவதுதான் அவர்களது குறிக்கோளாக இருப்பது தெரிய வருகிறது. இந்தக்கீழான அரசியல் நோக்கத்திற்காக, கேரளாவின் சமூக பொருளாதார சாதனைகளை அவமதித்து வருகிறார்கள். இந்த கேலிக்குரிய யுக்தியை முன்னோட்டமாக தொடங்கி வைத்தவர் சோமாலியாவை கேரளாவுடன் ஒப்பிட்ட மோடிதான். உலகம் முழுவதிலும் இருந்து அந்த வாக்கியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட பின்பும், நீங்கள் ஏன் பாடம் கற்கவில்லை என எனக்குப் புரியவில்லை. உங்களுக்கு வாயாக செயல்பட்டு வரும் தொலைக்காட்சி நிறுவனம் கேரளாவை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டது. அதற்கு எழுந்த எதிர்ப்புகளுக்குப் பின்பு, நிபந்தனையற்ற மன்னிப்பையும் கேட்டது. அரசியல் கட்சி சார்புகளையெல்லாம் கடந்து, கேரள மக்கள் ஒருபோதும் தங்கள் சுயமரியாதையை சமரசம் செய்துகொள்ளமாட்டார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான, நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த கேரளம், சுயமரியாதையின் வீர வரலாற்றைக் கொண்டதாகும்.  இத்தகைய பெருமையான வரலாறு இல்லாதகவர்கள் இதையெல்லாம் சகித்துக்கொள்ள மாட்டார்கள். எனது வாதத்தை நிரூபிக்க NCRB மற்றும் NFHS தரவுகளையும் இணைக்கிறேன்.

முடிவாக, நாட்டின் மூத்த தலைவர்களின் ஒருவராக, இந்த பிரச்சனையில் சுமூகத் தீர்வு காணும் வகையில் நீங்கள் செயலாற்றுவீர்கள் என நான் நம்புகிறேன். இந்த முழு செயல்பாட்டிலும், முழு மனதுடன் ஒத்துழைப்பை வழங்குமாறு உங்கள் சக கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துங்கள். அரசியல் சார்புகளைக் கடந்து, ஒவ்வொரு மரணமும் வருத்தத்திற்குரியதே என்பதை ஏற்போம். அரசியல் என்பது சித்தாந்தங்களுக்கு இடையிலான போர், ஆயுதங்களுக்கு இடையிலானது அல்ல என்பதை உறுதிப்படுத்துவோம்.

2017, ஆகஸ்ட் 8-ஆம் தேதி பாராளுமன்றத்தில் நடக்கவிருக்கும் விவாதத்தில் உங்களை சந்திக்கக் காத்திருக்கிறேன்.

எம்.பி ராஜேஷ்., MP

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...