கேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு!

‘இயக்குநர் விது வின்செண்ட் தயாரித்து வெளியிட்ட  ‘ஆளிறங்குத்துளை’ (மேன் ஹோல்) என்ற  திரைப்படம் பார்த்த பிறகு, பாதாளச் சாக்கடைக்குள் ஆள் இறங்கி அடைப்பை எடுப்பதை முழுமையாக ஒழித்திடுவதற்கான திட்டம் ஒன்றை அறிவித்தேன். (அந்த சமயத்தில்) இது குறித்து எனக்கு எந்த யோசனையும் இல்லை. ஆனால் கோழிக்கோட்டைச் சார்ந்த ஒரு எம்.டெக். மாணவர் என்னை தொடர்பு கொண்டு ரோபோ மூலம் இதை செய்யலாம் என்றார். ரோபோ தொழில் நுட்பத்தை அறிந்திட அவரை அரசின் சார்பில் தைவானுக்கு அனுப்பினோம். ஒரு எரிசக்தி கம்பெனியும் உதவி செய்தது. கடந்த மாதம் ரோபோ தயாராகிவிட்டது. ஆளிறங்கு துளையில் ஆள் இறங்காமலேயே ரோபோ அந்த வேலையை தற்போது செய்கிறது. இத்தகைய ரோபோவை உற்பத்தி செய்து மற்ற மாநிலங்களுக்கும் விற்பனை செய்ய இருக்கிறோம். இதற்காக ஒரு தொழில்நுட்ப பூங்கா துவங்கிட இந்த பட்ஜெட்டில் ரூபாய் 80 கோடி இவ்வரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது’.

– கேரள நிதி அமைச்சர் கடந்த ஆண்டு 2.2.2018 அன்று கேரள சட்டமன்றத்தில் ஆற்றிய பட்ஜெட் உரையின் ஒரு பகுதிதான் மேற்கண்ட வரிகள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு எல்லா அம்சங்களிலும் மாற்றுக் கொள்கையை கடைபிடித்து வருவதை மேற்சொன்ன உரை பகுதி உணர்த்துகிறது. இவ்வாண்டும் கேரள அரசு பல துறைகளில் மாற்றுக் கொள்கையை அமலாக்கிட திட்டமிட்டிருக்கிறது.

நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை 31.1.2019 அன்று நிதியமைச்சர் தாமஸ் ஐசக் சட்டமன்றத்தில் சமர்ப்பித்தார்.  அவர் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்; கேரளஅரசின் திட்டக்குழு துணைத்தலைவர் வி.கே.ராமச்சந்திரனும் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். இத்தகைய வல்லுனர்கள் இணைந்து உருவாக்கியது தான் கேரள மாநில அரசின் ஆண்டுபட்ஜெட். இதுவொரு கூட்டு முயற்சி என்றாலும் நிதி அமைச்சருக்கு முக்கிய பங்கு உண்டு.மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி வரித் திட்டம், இயற்கையின் சீற்றத்தால் கேரளாவை பாதித்த ஒக்கி புயல் மற்றும் பெருவெள்ளம் மாநிலத்தில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கி இருப்பினும், மாநில அரசு அதிகார வரம்பிற்குட்பட்டு மாற்றுக் கொள்கையை அமலாக்கிட முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கல்வி, சுகாதாரம், அனைவருக்கும் வீடு, உணவு, முறைசாரா தொழிலாளர்கள், பெண்களுக்கு சமூகப் பாதுகாப்பு, தொழில், விவசாயம், பண்பாடு மற்றும் பொதுத்துறை பாதுகாப்பு உள்ளிட்டுமக்கள் நலன்களை பாதுகாக்கக் கூடியதாக பட்ஜெட் அமைந்துள்ளது.

தொழில் வளர்ச்சி – பொதுத்துறை பாதுகாப்பு

2016ம் ஆண்டு இடது ஜனநாயக முன்னணிஅரசு பொறுப்பேற்ற போது கேரளத்தில்உள்ள 40 மாநில பொதுத்துறை நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டி வந்தன. தற்போது 20 நிறுவனங்கள் லாபம் ஈட்டும் வகையில்மேம்பட்டுள்ளன. மாநில பொதுத்துறை நிறுவனங்களின் உற்பத்தி ரூ.2800 கோடியிலிருந்து, ரூ.3800 கோடியாக உயர்ந்துள்ளது. ரூ.123 கோடி நட்டத்திலிருந்து மீண்டு, தற்போது ரூ.160 கோடி லாபம் ஈட்டியுள்ளது. தொழில் வளர்ச்சியில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு முக்கிய பங்குண்டு. மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கிற பின்னணியில் இந்தக் கொள்கையை பார்க்க வேண்டும்.

கேரள வங்கி

இடது ஜனநாயக முன்னணி அரசு எடுத்தமுயற்சியினால் ‘கேரள வங்கி’யை (Kerala Bank) நடப்பாண்டில் அரசு துவங்க இருக்கிறது.கேரளத்தில் உள்ள மாநில கூட்டுறவு வங்கி, மாவட்டகூட்டுறவு வங்கிகள் மற்றும் 800 கூட்டுறவு வங்கிகிளைகளை இணைத்து இந்த வங்கி உருவாக்கப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ளவர்களும் டெபாசிட் மேற்கொள்ளலாம். இவ்வகையில் டெபாசிட் ரூ. 57,761 கோடியிலிருந்து ரூ.64,741 கோடியாக அதிகரிக்க உள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. கேரள சட்டமன்றத்தில் அதற்கான மசோதாவை நிறைவேற்றவுள்ளனர்.  இந்த வங்கி கேரளத்தில் தொழில் மற்றும் விவசாய வளர்ச்சிக்கு உதவி செய்திட முடியும். இந்தியாவில் முதன் முதலாக ஒரு மாநில அரசு துவங்கும் வங்கி இதுவாகும்.

அரசுப்பள்ளி பாதுகாப்பு

கடந்த 25 ஆண்டுகளில் கேரளாவில் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், அரசுப்பள்ளிகளில் குறைந்து வந்தது. இந்த நிலைமைகளை பரிசீலித்த மாநில அரசுஅரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதில் அக்கறைகாட்டியது.  முந்தைய காங்கிரஸ் கூட்டணிஆட்சியின்போது மூடப்பட்ட சில பள்ளிகளைதிறந்தனர். சுமார் 45000 அரசுப்பள்ளிகளில் கணினி மூலமாக வகுப்புகள் துவங்கப்பட்டன. ஆசிரியர்கள், பெற்றோர்கள்ஆகியோரின் ஈடுபாட்டோடு அரசு எடுத்த முயற்சியினால் கடந்த 2ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் 3,20,000 மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் 3 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசுப் பள்ளிகளில் சேர்ந்தவர்கள் என்பதை கவனிக்க வேண்டும். கணிதம், சமூக அறிவியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய துறைகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் கல்வித் தரத்தை உயர்த்த முடிந்துள்ளது. இத்தகைய சாதனையை படைத்திட மாநில அரசு உருவாக்கிய கேரள கல்விக்கான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் (Kerala Infrastructural and  Technology for Education)  பின்புலமாக உள்ளது.

பசுமைக் கேரளம்

நீர்வளம், விவசாயம், துப்புரவு போன்ற பணிகளை ஒருங்கிணைத்து உள்ளாட்சி அமைப்புகளின் உதவியோடு மக்களை பெருமளவில் ஈடுபடுத்தி பசுமைக்கேரளம் என்ற திட்டத்தை மாநில அரசு அமலாக்கி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு 5,881 கிலோ மீட்டர் நீள கால்வாய்களையும், 5,482 குளங்களையும் அரசு மறுசீரமைத்தது. குறிப்பாக பத்தனம்திட்டா மாவட்டத்தில் குப்பைகளாலும், கழிவுகளாலும் தூர்ந்து போன 9 கிலோ மீட்டர் நீளமுள்ள வறட்டாற்றில் தூர்வாரும் பணி நடைபெற்று மீண்டும் நீரோட்டம் துவங்கி இந்த ஆறு புத்துயிர் பெற்றுள்ளது. நடப்பாண்டில் 24 ஆறுகளில் சுமார் ஆயிரம் கிலோமீட்டர் அளவுக்கு தூர்வாறும் பணி நடந்து வருகிறது. இப்பணியை மகளிர் சுயஉதவிக்குழு, மகாத்மாகாந்தி கிராமப்புற வேலை உறுதித்திட்டம், ஊர்மக்கள் இணைந்து செய்து வருகின்றனர். இதற்காகஅரசும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள்

நடப்பாண்டிற்கு திட்டச் செலவில் ரூ. 24.5 சதவிகிதம் அளவிற்கு நிதியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதர மாநிலங்களைப் போல் அல்லாமல் கேரளத்தில் மத்திய அரசின் திட்டங்கள் எல்லாம் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவே அமலாக்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கும், ஊழியர்களுக்கும் பயிற்சியளித்திட Kerala Institute of Local Administration (வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத) கேரளா உள்ளாட்சி அமைப்பு பயிற்சி நிறுவனம் இயங்கி வருகிறது.

மகளிர் நலன்

பட்ஜெட் திட்டச்செலவில் ரூ. 1420 கோடி (6.1சதவிகிதம்) மகளிர் மேம்பாட்டு திட்டத்திற்காகஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் 12 பொருட்களை (ஆயத்த ஆடை, கயிறு, கைவினைப் பொருட்கள் உள்ளிட்டு) உற்பத்தி செய்திடவும், அவைகளை சந்தைப்படுத்திடவும்  மாநில அரசுதிட்டமிட்டு உதவி செய்து வருகிறது. இத்தகையமகளிர் சுய உதவிக்குழுக்களில் மாநிலம் முழுவதும் 45லட்சம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

நெருக்கடி கொடுக்கும் மத்திய அரசு

கேரளமெங்கும், சமீபத்திய வெள்ளத்தால் கணக்கிலடங்காத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் வெள்ள சமயத்தில் மாநிலமே ஸ்தம்பித்து நின்றதால் ஏற்பட்ட மக்களுடைய வருமான இழப்பு ரூ. 25 ஆயிரம் கோடி எனகேரள அரசு மதிப்பீடு செய்துள்ளது. இத்தகைய சூழலில் கேரள மக்களுக்கு உதவ ஐக்கிய அரபுநாடுகள் நிதி கொடுத்து உதவிக்கரம் நீட்டின. ஆனால் மத்திய அரசு இடருக்கு உள்ளாக்கியது. மத்திய அரசும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதுடன், மாநில அரசு கடன் பெறுவதற்கும் வரம்பு விதித்துள்ளது. இத்தகைய நெருக்கடிகளை எல்லாம் எதிர்கொண்டு ஒரு வரம்புக்குட்பட்டுதான் மாநில நிதியமைச்சர் ஆண்டு நிதிநிலை அறிக்கையை உருவாக்கியிருக்கிறார்.  மக்கள் நலன் காக்க செயல்படுகிற போது ‘தடைகள் எதுவானாலும் அவைகளையெல்லாம் உறுதியாக எதிர்கொள்ள வேண்டும்’ என்ற குமாரன் ஆசானுடைய வரிகளை மேற்கோள் காட்டி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தை மறுகட்டமைப்பு செய்திட திட்டங்களை இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை மூலம் நிதியமைச்சர் முன்வைத்துள்ளார்.

மக்கள் ஒற்றுமை காத்திட…

சபரிமலைக்கு அனைத்து வயதுடைய  பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை பயன்படுத்தி கேரள சமூகத்தை பிளவுபடுத்த ஆர்.எஸ்.எஸ். – பாஜக போன்ற சக்திகள் முயற்சி எடுப்பதையும், அதற்கு எதிராக 55 லட்சம் பெண்கள் கலந்து கொண்ட ‘வனிதா மதில்’ (பெண்கள் சுவர்) இயக்கம் நடந்ததையும் நிதியமைச்சர் தன்னுடைய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மதில் அமைக்கப்பட்ட பாதையில் கேரள லலித கலா அகாடமியின் உதவியுடன் நினைவுச் சுவர்கள் அமைக்கப்படவுள்ளன. மேலும், கேரள மறுமலர்ச்சி வரலாற்று ஆய்வு மையத்தினை திருவனந்தபுரத்தில் அமைக்கவுள்ளனர். “மதமோ, ஆடையோ, மொழியோ எதுவானாலும் அவற்றின் இலக்கு ஒன்றே”என்ற சமூக சீர்திருத்த பிதாமகன் நாராயண குரு அவர்களின் வரிகளோடு பட்ஜெட் உரையை துவக்கிய தாமஸ் ஐசக், நூறாண்டுகளுக்கு முன்புகுமாரன் ஆசான் கூறிய கீழ்க்காணும் வரிகளோடு தனது உரையை நிறைவு செய்திருக்கிறார்:

‘ ‘காலம் மாறிக் கொண்டிருக்கிறது

சனாதன சங்கிலிகள் தளர்ந்து கொண்டுள்ளன 

இனியும் அவை நம்மை கட்டிக் கொண்டிருக்க முடியாது 

விதிகளை மாற்றிடுவோம்,

இல்லையேல் அவைகள் நம்மை மாற்றிடும் 

வீசும் சூறைக் காற்று கர்ஜித்தபடி சுற்றுகிறது 

காலகாலமாய் இதுதான் நடக்கிறது 

இப்போது கேரளத்தில் …’’ 

நிதியமைச்சர் தன்னுடைய பட்ஜெட் உரையில் ஒவ்வொரு பொருள் குறித்தும் அரசின் திட்டத்தை விளக்குகிற போது, நாவல்கள், கவிதைகள், சமூக அக்கறையுள்ள திரைப்படங்கள், வரலாற்று நிகழ்வுகள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்களை எடுத்துக்காட்டி தன்னுடைய வாதத்திற்கு வலிமை சேர்த்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு எல்லாத் துறைகளிலும் தனது மாற்றுக் கொள்கையை, திட்டத்தை முன்வைத்து மக்கள் நலனை பாதுகாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மார்க்சிஸ்டுகள் மாற்றுக் கொள்கைக்காக போராடுவது மட்டுமல்ல, வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் முன்னுதாரணத்தை உருவாக்குவார்கள் என்பதை கேரளாவில் நிரூபித்து வருகிறார்கள்.

கட்டுரையாளர்: ஜி.ராமகிருஷ்ணன்

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)

 

Check Also

சாதிய அணி சேர்க்கைக்கு இடமளிக்க வேண்டாம்!

வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும் போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடமிருந்து வன்னியர் ...