கேரள வெள்ள நிவாரண நிதிக்கு மேலும் ரூ.65 லட்சம் சிபிஎம் தமிழ்நாடு மாநிலக்குழு வழங்கியது

கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் கேரள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக நிதி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவலின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் இருந்து கட்சியின் மாவட்டக்குழுக்கள், வர்க்க, வெகுஜனஅமைப்புகள் மற்றும் கட்சித்தோழர்கள், பொதுமக்கள் ஆகியோர் மாநில மையத்திற்கு நிதி அனுப்பினர். இதுவரை வந்த நிதியில், ஏற்கெனவே 2018 ஆகஸ்ட் 21ம் தேதி ரூ. 20 லட்சமும், 2018 ஆகஸ்ட் 27-ந் தேதி ரூ. 25 லட்சமும் வழங்கப்பட்டது. மேலும் ரூ. 2 கோடிக்கும் மேலான அரிசி, பருப்பு, எண்ணெய், துணி, உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது மூன்றாவது தவணையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் இன்று (05.09.2018) ரூ. 65 லட்சத்திற்கான காசோலையை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ். வெங்கட்ராமன், எஸ். நூர்முகமது ஆகியோர், கேரள தொழில்துறை அமைச்சர் இ.பி. ஜெயராஜன் அவர்களிடம் நேரில் வழங்கினர்.

இதுவரை கேரள மாநில முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் ரூ. 1 கோடியே 10 லட்சம் நிதியாக வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த நிதி மற்றும் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு பணியில் ஈடுபட்ட கட்சியின் ஊழியர்களுக்கும், வர்க்க – வெகுஜன அரங்க உறுப்பினர்களுக்கும், தாராளமாக நிதி மற்றும் பொருட்கள் வழங்கிய பொதுமக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

– கே. பாலகிருஷ்ணன்
மாநில செயலாளர்
05.09.2018

Check Also

உமர் காலித் கைது சிபிஎம் கண்டனம்

உமர் காலித் உட்பட ஜேஎன்யு பல்கலைக் கழக மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...