கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்திடுக!மக்கள் அனைவருக்கும் இயல்புவாழ்க்கையை மீளவும் ஏற்படுத்திடுக! இடதுசாரிக் கட்சிகள் அறிக்கை

புதுதில்லி, ஆக.3-

கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும், மக்கள் அனைவருக்கும் இயல்புவாழ்க்கையை மீளவும் ஏற்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி, மத்திய அரசாங்கத்தை இடதுசாரிக் கட்சிகள் கோரியுள்ளன.

இது தொடர்பாக, ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து, இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா,  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் – லிபரேசன்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர், தேவ பிரத பிஸ்வாஸ், புரட்சி சோசலிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா, ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

2020 ஆகஸ்ட் 5, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கலைக்கப்பட்டதையும், அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையும், ஜம்மு-காஷ்மீர் மக்களை கூண்டுக் கிளிகளாக மாற்றியதையும் இவ்வாறு ஓராண்டு காலம் நிறைவடைந்ததைக் குறிக்கிறது.

சென்ற ஆண்டு, மோடி அரசாங்கம் எண்ணற்ற உறுதிமொழிகளை வாரி வழங்கின. இந்த நடவடிக்கை எப்படியெல்லாம் நாட்டுக்கும், ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கும்  பயன் அளித்திடும் என்றும், கூறின. அதே சமயத்தில், பலர், மோடி ஆட்சியின் கொடுங்கோன்மை, காஷ்மீருடன் நிற்காது, இது ஒட்டுமொத்த நாட்டுக்கும் இதேபோன்று ஒரு கொடுங்கோன்மை திட்டத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு முன்னோடித் திட்டம் என்று எச்சரித்தனர். ஓராண்டு கழிந்தநிலையில், ஜம்மு-காஷ்மீர் மக்கள், தொடர்ந்து வீடுகளுக்குள்ளேயே சிறை வைக்கப்பட்டிருப்பதிலிருந்தும், வாய்ப்பூட்டு போடப்பட்டிருப்பதிலிருந்தும் மோடி அரசாங்கம் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளுக்குத் துரோகம் இழைத்திருப்பது தோலுரித்துக்காட்டப்பட்டிருக்கிறது.

மோடி அரசாங்கம், இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 370 மற்றும் 35(ஏ) பிரிவுகளை ரத்து செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் இன்னமும் விசாரணை செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வருகின்றன.

இடதுசாரிக் கட்சிகள், 2019 ஆகஸ்ட்டிலிருந்து சிறை வைக்கப்பட்டிருக்கிற அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், முழு தகவல் தொடர்பும் மீண்டும் அளிக்கப்பட வேண்டும் என்றும், மக்களின் இயல்பு வாழ்க்கையை அனுமதித்திட வேண்டும் என்றும், கோருகின்றன. கொரோனா வைரஸ் தொற்றை வலுவான முறையில் எதிர்த்து முறியடிப்பதற்கும், ஜனநாயக உரிமைகள், சிவில் உரிமைகள் மீது அரசமைப்புச்சட்டம் அளித்துள்ள உத்தரவாதங்களை உயர்த்திப் பிடிப்பதற்கும்  அதே சமயத்தில் செய்வதறியாத திகைத்துத் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கும் இவை மிகவும் அவசியமாகும் என்றும் கூறுகின்றன.

இவ்வாறு இடதுசாரிக் கட்சிகள் கோரியுள்ளன.

Check Also

சட்டமன்றம் – நாடாளுமன்றம் துவங்கும் நாள் மக்கள் கோரிக்கைகளை வற்புறுத்தி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: இடதுசாரி கட்சிகள் தீர்மானம்!

செப்டம்பர் 6 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், கட்சி (மார்க்சிஸ்ட் – ...