கொரானா வைரஸ் தொற்றைக் காரணம் கூறி வசூலித்துள்ள பணத்தை இப்போதாவது செலவு செய்திட பிரதமர் மோடி முன்வர வேண்டும்: சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தல்!

கொரானா வைரஸ் தொற்றைக் காரணம் கூறி, தன் பெயரில் தனியார் அறக்கட்டளை ஒன்றின் மூலம் வசூல் செய்து வைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை, இப்போதாவது பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு செலவு செய்திட பிரதமர் மோடி முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதில் இந்தியா, பிரேசிலைப் பின்தள்ளி, முதலிடத்தை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றைப் பரவாது கட்டுப்படுத்துவதிலும் தன்னுடைய திறமையின்மையை உலகுக்குப் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. மக்களை இத்தொற்றிலிருந்து காப்பாற்ற எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல், அவர்களாகவே தங்களைக் காப்பாற்றிக்கொள்ளட்டும் என்றவிதத்தில் மிகவும் பொறுப்பற்றமுறையில் நடந்துகொண்டிருக்கிறது.

நாட்டின் பொருளாதாரம் பாழாகிவிட்டது. கோடானுகோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துவிட்டார்கள். பொது முதலீட்டை அதிகப்படுத்துங்கள், நாட்டின் உள்கட்டமைப்புகளைக் கட்டி எழுப்புங்கள், அதன்மூலம் வேலையில்லாதவர்களுக்கு வேலை வழங்குங்கள், பொருளாதாரத்தை மீட்க வழிகாணுங்கள் என்று நாம் கூறிய ஆலோசனைகள் அனைத்தையும் மோடி அரசாங்கம் கண்டுகொள்ளவேயில்லை. இதனால் நாட்டில் கோடானு கோடி மக்கள் இன்றையதினம் வறுமை, துன்ப துயரங்களுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றைச் சொல்லி தன்னுடைய பெயரில் தனியார் அறக்கட்டளை ஒன்றின்மூலமாக வசூலித்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாய்களை, மக்களைக் காப்பாற்றுவதற்காக, விடுவித்திட குறைந்தபட்சம் இப்போதாவது பிரதமர் மோடி முன்வர வேண்டும். மக்களுக்கு ரொக்க மாற்று மற்றும் இலவச உணவு அளித்து, அவர்கள் உயிர்வாழ்வதற்கு வகை செய்திட வேண்டும்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

Check Also

திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை இழிவுபடுத்தும் நோக்கோடு நேற்று நள்ளிரவு சமூக விரோதிகள் ...