கொரானா வைரஸ் பாதிப்பு: மூன்றாம் கட்டத்திற்குச் செல்லாமல் தடுத்துநிறுத்த அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துக!

மத்திய மாநில அரசுகளுக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வேண்டுகோள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் தலைநகர் புதுதில்லியில் உள்ள மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவனில் மார்ச் 14-15 தேதிகளில் நடைபெற்றது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை பின்வருமாறு:

கொரோனா வைரஸ் (COVID-19)

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் இரண்டாவது கட்டத்தில் இப்போது இருக்கிறது. மத்திய சுகாதார அமைச்சகம், இந்த வைரஸ் 13 மாநிலங்களில் இருப்பதாகத் தெரிய வந்திருப்பதாகவும், அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் 110 என்றும் அது அதிகரித்துக்கொண்டிருப்பதாகவும், அதிகாரபூர்வமாகக் கூறியிருக்கிறது. இதில், இருவர் இறந்துவிட்டார்கள், பத்து பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research), இந்தத் தொற்று மூன்றாவது கட்டத்திற்குப் போவதிலிருந்து தடுத்திட, நாடு 30 நாட்களுக்கு மூடப்பட்டிருக்க வேண்டும் (30-day window) என்று எச்சரித்திருக்கிறது. மூன்றாவது கட்டம் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்திடும்.

இந்தத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதை உத்தரவாதப்படுத்திட, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்கள் மத்தியில் அறிவியல்பூர்வமாக விழிப்புணர்வை உருவாக்கிட, அனைத்துக் கட்சிக் கிளைகளுக்கும், முன்னணி ஊழியர்களுக்கும் அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுக்கிறது. இந்தத்தருணத்தில் பலரால் பரப்பப்பட்டுவரும் மூடத்தனமான அறிவியலுக்குப் பொருந்தாத வழிமுறைகளை மத்திய மாநில அரசுகள் முறியடித்திட வேண்டும்.

இப்பிரச்சனையில் கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி மேற்கொண்ட முயற்சிகளை அரசியல் தலைமைக்குழு பாராட்டுகிறது. அவர்கள் மீண்டும் ஒருமுறை தொற்றுநோய் பரவாமல் தடுத்திட தங்களுடைய திறமையை மீண்டும் ஒருமுறை தங்களுடைய அனைவருக்குமான பொது சுகாதாரத் திட்டத்தின் மூலமாக மெய்ப்பித்து, சேதத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள்.

இந்தத் தொற்று பாதிக்கப்பட்டிருப்பதாக சந்தேகப்படும் மக்களை சோதனை செய்து பார்ப்பதில், உலகத்திலேயே இந்தியா கடைசி நாடாக இருக்கிறது. போர்க்கால அடிப்படையில் அதிகமான அளவிற்கு சோதனை மையங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். சந்தேகத்திற்குரிய அனைத்துநபர்களும் உடனுக்குடன் சோதனை செய்து பார்க்கப்பட வேண்டும். அதனைத்தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகியிருப்பவர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நம் கிராமப்பகுதிகளையும் அடிப்படை சுகாதார வசதிகளுடன் இருக்கக்கூடிய அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்படுவது அவசியம். அவை இன்றையதினம் போதுமானதாக இல்லை.

இந்தத் தொத்து நோயைக் கட்டுக்குள் கொண்டுவர, அனைத்து மாநில அரசாங்கங்களும் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்திக்கொள்ள மத்திய அரசு உடனடியாக உதவிட வேண்டும். நாட்டில் முறையான பொது சுகாதார அமைப்பை உருவாக்கும் விதத்தில், சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் கணிசமான அளவிற்கு அதிகரிக்கப்பட வேண்டும்.

இந்தச் சூழலில், மத்திய அரசாங்கம் இந்தத் தொத்துநோயைச் சமாளித்திட, மாநில பேரிடர் நிதியைப் (State Disaster Response Fund)பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மாநிலங்களுக்கு உத்தரவு பிறப்பித்துவிட்டு, அவ்வாறு உத்தரவு பிறப்பித்த அடுத்த சில மணி நேரத்திலேயே அவ்வாறு இந்தத் தொத்துநோயால் பாதிக்கப்பட்டுஉயிரிழந்தவர்க்கும், பாதிப்புக்க உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் நிதி அளிக்கலாம் என்று கூறியதை திரும்பப் பெற்றுக் கொண்டதன் மூலம் பகுதி மாற்றம்’(‘partial modification) செய்திருப்பதை அரசியல் தலைமைக்குழு கண்டனம் செய்கிறது. இந்த பகுதி மாற்றத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

இந்தத் தொத்துநோயால் மூடப்பட்டுள்ள நிறுவனங்களில் முறைசாராத் தொழிலாளர்களாகவும், அமைப்பு ரீதியான தொழிலாளர்களாகவும் இருந்து வேலை இழந்தவர்களுக்கு அல்லது ஊதியம் இழந்தவர்களுக்கு உதவும் விதத்தில் தற்செயல் நிதியம் (contingency fund) மத்திய அரசால் உருவாக்கப்பட வேண்டும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம்/தேசிய மக்கள்தொகைப் பதிவேடு/தேசியக் குடிமக்கள் பதிவேடு எதிர்ப்பு இயக்கம்

குடியுரிமைத் திருத்தச் சட்டம்/தேசிய மக்கள்தொகைப் பதிவேடு/தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக அமைதியானமுறையில் தொடர்ந்து நடைபெற்றுவரும் வெகுஜன எதிர்ப்பு இயக்கங்கள் நாடு முழுதும் தொடர்கின்றன. கேரள அரசாங்கத்தைத் தொடர்ந்து மேலும் மேலும் மாநில அரசாங்கங்கள் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக பல்வேறு அளவுகளில் மாநில அரசாங்கங்கள் வெளி வந்திருக்கின்றன.

கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கார், பாண்டிச்சேரி, ராஜஸ்தான் ஆகிய மாநில அரசாங்கங்கள் தாங்கள் தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுப் பணிகளைத் தொடரப் போவதில்லை என்று அறிவித்திருக்கின்றன. தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, தில்லி, ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்கள் 2010 படிவத்தை பின்பற்றிட அனுமதிக்காவிட்டால், தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை அமல்படுத்த மாட்டோம் என்று கூறியிருக்கின்றன. மகாராஷ்ட்ராவில் அமைச்சரவைக் குழு ஒன்று இந்தப் பிரச்சனையை ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

2003 குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள விதிகள் அமலில் இருக்கும்வரை, தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டில் எவரொருவரும் சந்தேகத்திற்குரிய பிரஜை (doubtful citizen) என முத்திரைகுத்தப்பட மாட்டார்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிக்கையால் எந்த விளைவும் ஏற்படாது. உள்துறை அமைச்சர் தன் வார்த்தைகளுக்கு உண்மையானவராக இருக்கிறார் என்றால், இந்த விதிகள், குறிப்பாக விதிகளின் கீழ் உள்ள 3, 4,5 6, 7 ஆகிய பிரிவுகள் ரத்து செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்வதன்மூலம்தான் தேசியக் குடிமக்கள் பதவேட்டின் ஷரத்துக்கள் பயனற்றவையாகும். எனவே, 2003 குடியுரிமைத் திருத்தச் சட்டமும் திருத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்காதவரை, அமைதியான கிளர்ச்சிப் போராட்டங்கள் தொடரும்.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய தியாகிகள் தூக்குமேடை ஏறிய மார்ச் 23 தியாகிகள் தினத்தை – குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்றுவரும் கிளர்ச்சிப் போராட்டங்களை ஒருமுகப்படுத்திடக் கூடிய விதத்திலும், தில்லியில் நடைபெற்ற இந்துத்துவா வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும், பெரும்பான்மையான மக்கள்மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பொருளாதாரச் சுமைகளை ஏற்றியிருப்பதற்க எதிராகவும் அனுசரித்திடுமாறு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்திருக்கின்றன. கொரானா வைரஸ் தொற்றுப் பிரச்சனை உள்ளநிலையில், மக்கள் கூடும் நிகழ்ச்சிகளும் பொதுக் கூட்டங்களும் தவிர்க்கப்பட வேண்டும். ஆனாலும், தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட வேண்டும். இத்தனை ஆண்டு காலமும் அதனை தொடர்ந்து அனுசரித்து வந்திருக்கிறோம்.

தில்லி மதவெறி வன்முறை

தில்லியில் மிகவும் கொடூரமான முறையில் நடைபெற்றுள்ள இந்துத்துவா வன்முறை வெறியாட்டங்கள் கடுமையாகக் கண்டனம் செய்யப்படுகிறது. இந்தக் குற்றங்கள் குறித்து நீதித்துறை மேற்பார்வையில், ஒரு காலக்கெடு நிர்ணயம் செய்து, சுயேச்சையான புலனாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த வன்முறையை மேற்கொண்ட கயவர்கள் சட்டத்தின் கீழ் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட கிரிமினல்களுக்கு போலீசார் உதவி செய்தது குறித்தும், உடந்தையாக இருந்தது குறித்தும் சமூக ஊடகங்களில் வீடியோ காட்சிகள் வைரலாகப் பரவியதை ஏராளமானவர்கள் பார்த்திருக்கிறார்கள். எனவே இது குறித்தும் நீதித்துறை ஒருகுறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து முழுமையாக புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

இந்த வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டறிவதற்காக முகம் அங்கீகரித்திடும் தொழில்நுட்பம் (face recognition technology) பயன்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் கூறியிருப்பதற்கு அரசியல் தலைமைக்குழு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது. இந்தத் தொழில்நுட்பம் 2018இல் 2 சதவீதம்தான் துல்லியமாக இருந்ததாகவும், 2019இல் 1 சதவீதம்தான் துல்லியமாக இருந்ததாகவும் அரசாங்கமே நீதிமன்றத்தின் முன் ஒப்புக்கொண்டிருக்கிறது. மேலும் இதனால் பரிசோதிக்கப்படும் நபர், ஆணா, பெண்ணா என்று கூட கூற முடியாது. எனவே இவை அனைத்தும் அப்பாவி மக்களைத் துன்புறுத்துவதற்கும், இடர்ப்படுத்துவதற்கும் வாய்ப்புகளை உருவாக்கிடும். மேலும், இத்தகைய அடையாளத்திற்காக, இத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு, இந்த நடைமுறை சட்டத்தின்முன் நிலைக்கத்தக்கதும் கிடையாது.

நிவாரணப் பணிகள்: வன்முறை வெறியாட்டங்களில் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உதவுவதற்காக, நிவாரண நிதி சேகரிக்குமாறு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுத்த அறைகூவலுக்கு செவிமடுத்து, இதுவரை ஆறு கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலாகி இருக்கிறது. இரண்டு நாள் வெகுஜன மக்களிடம் வசூல் செய்யப்பட்டதில் 5,30,74,779 ரூபாய் வசூலித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக் குழுவிற்கு அரசியல் தலைமைக்குழு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. நாடு முழுதும் வசூல் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

வன்முறை வெறியாட்டங்களில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கும், காயம் அடைந்தோருக்கு சிகிச்சை அளிப்பதற்கும், தீக்கிரையாக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கும், வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்கும் புனர்வாழ்வு அளிப்பதற்கும், தில்லி மாநிலக்குழுவின் கீழ் ஒரு நிவாரணக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

ஜம்மு-காஷ்மீர்

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீர் ஏழு மாதங்கள் அடைப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தபின்னர், முன்னாள் முதலமைச்சராகவும், மத்திய கேபினட் அமைச்சராகவும் தற்போது மக்களவை உறுப்பினராகவும் இருக்கின்ற பரூக் அப்துல்லா கடைசியாக விடுதலை செய்யப்பட்டிருப்பதை அரசியல் தலைமைக்குழு வரவேற்கிறது.

எனினும், காஷ்மீரில் மக்கள்மீதான அடக்குமுறை தொடர்கிறது. மிகவும் கொடூரமான பொதுப் பாதுகாப்புச் சட்டம் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள், உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோருக்கு எதிராக ஏவப்பட்டிருக்கிறது. ஏழு மாதங்கள் கடந்தபின்னரும், ஆயிரக்கணக்கான மக்கள் சிறைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். அவர்களின் லட்சக்கணக்கான வாழ்வாதாரங்கள் அழிக்கப் பட்டிருக்கின்றன. நாளும் நடைபெற வேண்டிய இயல்பான வாழ்க்கை நிலை இன்னமும் ஏற்படவில்லை.

2019 ஆகஸ்ட் 4/5லிருந்து கைதுசெய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கிற அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். தகவல் தொடர்புக்கு இருந்துவரும் கட்டுப்பாடு விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். மக்களின் இயல்பு வாழ்க்கைக்கான நிலைமைகள் மீளவும் உடனடியாக அளிக்கப்பட வேண்டும். இந்திய அரசமைப்புச்சட்டத்தின்கீழ் ஜனநாயக நடைமுறைகள் உடனடியாக மீளவும் நிறுவப்பட வேண்டும்.

இந்திய அரசமைப்புச்சட்டத்தின் கீழ் ஜம்மு-காஷ்மீர் பெற்றிருந்த மாநில அந்தஸ்து அதற்கு மீளவும் உடனடியாக அளிக்கப்பட வேண்டும்.

நீதித்துறை

இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அரசமைப்புச்சட்ட நெறிமுறைகளின் படி, இந்தியாவில் நீதித்துறையானது சுயேச்சையானது மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க வேண்டிய முக்கியமான பங்கினையும் பெற்றிருக்கிறது. நீதியை வழங்குவதில் சமீபத்தில் அது ஏற்படுத்தி வரும் தாமதம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நள்ளிரவில் மாற்றப்பட்டிருப்பது, அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பாகவும், குடியுரிமைச்சட்டம் திருத்தப்பட்டது தொடர்பாகவும், நீதி வழங்காமல் அது ஏற்படுத்திடும் தாமதம் மக்கள் மத்தியில் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. இவ்வாறு அது மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யக்கூடிய அளவில் இல்லை. அரசு எந்திரத்தினாலும் நிர்ப்பந்திக்கப்பட்டு அது தன் பொறுப்பைக் கைவிட்டுவிட்டதாக பல முனைகளிலிருந்தும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது துரதிர்ஷ்டவசமானது. இது அவசரகதியில் சரிசெய்யப்பட வேண்டும்.

மாநில அரசாங்கங்களைக் கவிழ்க்கும் முயற்சிகள்

மத்தியப் பிரதேசத்தில் மக்களின் தீர்ப்பை மீறும் விதத்தில், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கவிழ்ப்பதற்காக, வெட்கங்கெட்டமுறையில் குதிரை வர்த்தகம் மற்றும் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் போன்றவற்றால் எம்எல்ஏக்களைக் கட்சித் தாவச் செய்வதற்கான இழிசெயல்களில் ஈடுபடுவதை அரசியல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இதற்கு முன்பும், கர்நாடகாவிலும், வேறு சில மாநிலங்களிலும் இதேபோன்ற உத்திகளை மேற்கொண்டு, மக்களின் தீர்ப்புகளுக்குத் துரோகம் இழைத்திருக்கிறது. பெரும்பான்மை மக்களின் தீர்ப்பையும், ஜனநாயகத்தையும் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்கிடும்.

மக்கள் மீது தொடர்ந்து பொருளாதாரத் தாக்குதல்கள்

பொருளாதார மந்தம், பெரும்பான்மையான மக்களை, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு துன்ப துயரங்களுக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கிறது. உச்சத்தில் உள்ள வேலையின்மை, விவசாய நெருக்கடி, தொழிற்சாலைகள் மூடல், ஆள் குறைப்பு, தொடர் விலைவாசி உயர்வு மிக அதிக அளவில் பொருளாதாரச் சுமைகளை ஏற்றிக்கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போன்ற இப்போது மத்திய அரசாங்கம் பெட்ரோலியப் பொருட்கள் மீது அதீதமான அளவில் வரிகளை உயர்த்தி இருக்கிறது. இது, மேலும் விலைவாசி உயர்வுக்கு இட்டுச்செல்லும். அதே சமயத்தில், நாட்டின் பொதுச் சொத்துக்களும் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

கூட்டுக்களவாணி முதலாளித்துவம்:

கூட்டுக்களவாணி முதலாளித்துவத்திற்க மிகவும் மோசமான எடுத்தக்காட்டு, மேலும் ஒரு தனியார் வங்கி – யெஸ் பேங்க் – நிலைகுலைந்திருப்பதாகும். இந்த வங்கியின் பதிவுருக்கள், 2014 மார்ச்சில் 55,633 கோடி ரூபாயாக இருந்த கடன்கள், 2019 மார்ச்சில் 2,41,999 கோடி ரூபாயாக உயர்ந்திருப்பதாகக் காட்டுகிறது. ஆள்வோருக்கு சாதகமான கூட்டுக்களவாணி கார்ப்பரேட்டுகளுக்கு இந்த வங்கி கடன்களை வாரி வழங்கி இருக்கிறது.

லாபத்தைத் தனியார்மயமாக்கு, நஷ்டத்தை தேசியமயமாக்கு என்பதற்குச் சரியான எடுத்துக்காட்டாக, இந்த வங்கியைக் காப்பாற்றுவதற்காக, பாரத ஸ்டேட் வங்கி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மோடி அரசாங்கத்தின் கூட்டுக் களவாணிகளுக்கு வங்கிகள் அளித்த கடன்களை மோடி அரசாங்கம் கடந்த ஆண்டுகளில் (2014இல் 7,78,000 கோடி ரூபாய் மற்றும் 2018-19இல் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை 1.83 லட்சம் கோடி ரூபாய்) கடன் தள்ளுபடி செய்தது போக, இப்போது சமீபத்தில் 76,600 கோடி ரூபாய் 33 பணக்காரர்களுக்குத் தள்ளுபடி செய்திருக்கிறது. இதுநாள்வரையிலும், பிரதமர் மோடி வசம், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் 2015இல் இவ்வாறு வங்கிகளில் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச் செலுத்தாத கூட்டுக்களவாணிகளின் பெயர்களை, இதுவரை மக்களுக்கு மோடி வெளிப்படுத்தவில்லை.

அரசியல் தலைமைக்குழு அறைகூவல்

மக்கள்மீது சுமைகளை ஏற்றியுள்ள அனைத்துப் பிரச்சனைகள் மீதும், அரசியல் தலைமைக்குழு தீர்மானித்திருப்பதுபோல், கொரானா வைரஸ் தொற்று நோயை மனதில் வைத்துக்கொண்டு, பொதுப் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். வேலையின்மைக்கு எதிராக இளைஞர்களை அணிதிரட்டியும், ஆலைமூடல்களுக்கு எதிராகவும், பொதுச் சொத்துக்களை சூறையாடுவதற்கு எதிராகவும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கு எதிராகவும், ஆட்குறைப்புக்கு எதிராகவும், குறைந்தபட்ச ஊதியம் கோரியும், பெண்களுக்கு எதிராக அதிகரித்துவரும் குற்றங்கள், அட்டூழியங்களுக்கு எதிராகவும், பொருளாதார மந்தத்தால் ஏற்பட்டுள்ள சுமைகளுக்கு எதிராகவும், விவசாய நெருக்கடிக்கு எதிராகவும், தொழிலாளர்களையும், விவசாயிகளையும், மாணவர்களையும், பெண்களையும் தலித்துகளையும், பழங்குடியினரையும் அணிதிரட்டியும், இவ்வாறு அனைத்துப் பகுதி மக்களையும் ஒருங்கிணைத்து இந்த நிலைமைகளுக்கு எதிராகக் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்திட வேண்டும்.

தமிழில்: ச. வீரமணி

English Version: Press Communique

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...