கொரோனாவால் இறப்போர் இறுதி நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் !

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு தங்கள் பகுதியில் அனுமதிக்க முடியாதென சிலர் ஆட்சேபனை செய்தது இரண்டாவது முறையாக தமிழகத்தில் நடந்திருக்கிறது. நேற்றைய தினம் மரணமடைந்த நரம்பியல் மருத்துவர் சைமன் உடல் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டபோது, அந்த அடக்கத்திற்காக சென்றவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டிருக்கிறது. கொரோனாவால் மரணமடைந்தவரை தங்கள் பகுதியில் புதைப்பதால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்ற தவறான புரிதலால் சிலர் இதில் ஈடுபட்டிருக்கின்றனர்.

கொரோனா தொற்றால் இறந்தவர்களை புதைப்பதால் அருகிலுள்ள பகுதிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதை மருத்துவர்கள் திரும்பத்திரும்ப வலியுறுத்தி சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆயினும், மீண்டும் இத்தகைய நிகழ்வு தலைநகரிலேயே நடந்திருப்பது வேதனையில் ஆழ்த்துகிறது. இந்த செயல்கள் வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியதாகும்.

இந்த இக்கட்டான காலத்தில் மருவத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் தங்கள் குடும்பங்களைப் பிரிந்து மிகக் கடுமையான சூழலில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகைய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்போருக்கு இந்த செய்திகள் மிகக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். பொதுமக்கள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டிக் கொள்கிறது. இனியொரு நிகழ்வு இதுபோன்று நடக்காத வண்ணம் உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கும் காவல்துறைக்கும் உண்டு.

மருத்துவர்களின் கடுமையான முயற்சிகளையும் மீறி யாருக்கேனும், அவர் மருத்துவராக இருந்தாலும் சரி மற்றவராக இருந்தாலும் சரி இத்தகைய நிலை ஏற்பட்டால்  காவல்துறையினரின் உரிய பாதுகாப்புடன் இறுதி நிகழ்ச்சி நடைபெறுவதை மாநில அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

கே. பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...