கொரோனாவை விட கொடியது மத்திய அரசின் மனப்பான்மை…

தொழில் மந்தநிலை, கொரோனாவால் ஏற்பட்டுள்ள நோய் பாதிப்புகள் ஆகியவற்றை எதிர்கொள்ள மாநில அரசுகளே நேரடியாக செலவழிக்க வேண்டிய நிலையுள்ளது. இத்தகைய நிலையில் கூட மத்திய அரசு கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள மாநிலங்களுக்கு போதுமான உதவிகள் செய்ய முன்வரவில்லை. இதுவரையிலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணங்கள் எந்த வகையிலும் தற்போதைய இடர்பாடுகளை எதிர்கொள்ள உதவும் வகையில் அமையவில்லை.

இது ஒருபுறமிருக்க, மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலங்களின் உரிமைகளின் மீதும், நிதி ஆதாரங்களின் மீதும் மிகக் கடுமையான ஆக்கிரமிப்பை செய்து வந்திருக்கிறது. ஜிஎஸ்டி அமலான பிறகு மாநிலங்கள் தங்களது வருவாயைப் பெருக்கிக் கொள்ள மாநில அளவிலான எந்த வரி விதிப்புக்கும் மத்திய அரசின் அனுமதி பெறாமல் செய்ய முடியாது. உற்பத்தி மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்படும் இழப்பை 5 ஆண்டுகளுக்கு ஈடுகட்டுவோம் என கூறிய மத்திய அரசு அதனை தற்போது பின்வாங்கியிருக்கிறது.

மாநிலங்களின் உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்கு மேல் கடன் வாங்க முடியாது என்ற நிர்ப்பந்தத்தால் மாநில மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்வதற்காக வெளியில் கடன் வாங்குவதற்கும் இயலாத நிலை இருக்கிறது. மத்திய அரசு அனுமதிக்காமல் வெளிச்சந்தையில் கடன் திரட்ட முடிவு செய்தால் வட்டி விகிதம் 4 1/2 சதவிகிதத்திலிருந்து 9 சதவிகிதமாக இரட்டிப்பாக மாறிவிடும். இவைவெல்லாம் இணைந்து மாநில அரசுகள் குறைந்தபட்ச அளவுக்காவது நிதி சுயேட்சைத்தன்மையில் செயல்படுவதற்கான வாய்ப்புகளை தடுத்திருக்கிறது.

தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் அரிசி வழங்கும் நிலையில் கூட, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அட்டைதாரர்கள் தவிர பிறருக்கு வழங்கும் அரிசிக்கு பணம் பெற்றுக் கொண்டே மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது. மத்திய அரசிடம் தேவைக்கு மேல் உபரியாக குவிந்து கிடக்கும் உணவு தானியங்களை ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மத்திய அரசு செவி மடுக்க மறுத்து வருகிறது. கொரோனா பாதிப்புகளை எதிர்கொள்வதை விட மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் போக்கை எதிர்கொள்வது மிகக் கடினமான பணியாக மாநிலங்களுக்கு மாறியிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டு இறுதியில் ஒட்டுமொத்த கடன் தொகை ரூபாய் 4,56,661 கோடியாக இருக்குமென தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நிலைமைகளை எதிர்கொள்ள மாநில அரசாங்கம் மத்திய அரசிடம் ரூபாய் 9 ஆயிரம் கோடி நிதி கோரியுள்ளது. இந்த நிதியும் கூட முதன் முறையாக மார்ச் 21 அன்று ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது முன்வைக்கப்பட்ட கோரிக்கையாகும். கடன் திரட்டுவதற்கான ஒரு அனுமதியைத் தவிர வேறு எந்த வகையிலும் மத்திய அரசாங்கம் மாநில அரசுக்கு குறிப்பிடத்தக்க வகையில் உதவி செய்யவில்லை.

மேலும், மத்திய அரசாங்கம் தமிழகத்திற்கு தர வேண்டிய கீழ்க்கண்ட வகையிலான நிலுவைத் தொகையை தராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. உதாரணமாக, 2017-18ம் ஆண்டு முதல் மாநில அரசுக்கு வந்திருக்க வேண்டிய ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ 4073 கோடி இன்று வரையிலும் தரப்படவில்லை. இதைப்போன்று 15வது நிதிக்குழு பரிந்துரைத்த வருவாய் பற்றாக்குறை மானியம் ரூபாய் 4025 கோடியை மத்திய அரசாங்கம் இதுவரை தரவில்லை. ஒரு சிறு தொகை மட்டுமே தரப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு தர வேண்டிய வருவாய் பற்றாக்குறை ரூபாய் 74000 கோடி. ஆனால், மத்திய பட்ஜெட்டில் 30000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இதேபோன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் முடிக்கப்பட்ட பணிகளுக்கு மத்திய அரசாங்கம் 31.3.2020 வரை தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி பாக்கி, சர்வசிக்ச அபியானுக்கு மத்திய அரசின் பங்கு, +2க்கு தேர்ச்சிக்கு பிந்தைய எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் 25 சதவிகிதம் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு தர வேண்டிய மத்திய அரசின் பங்கு என சில ஆயிரம் கோடிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு பாக்கி வைத்துள்ளது. இந்த நிதிகளை மத்திய அரசாங்கம் கொடுக்க காலதாமதம் செய்வது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. கடும் கண்டனத்துக்கு உரியது.

இத்தகைய கடுமையான நிதிச் சூழலிலும், நோய்ப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மாநிலங்களுக்குத் தர வேண்டிய அனைத்து வகை நிதிகளையும் நிலுவையின்றி வழங்க வேண்டுமெனவும், கொரோனாவை எதிர்கொள்வதற்கான சிறப்பு நிதிகளை மத்திய அரசு உடனடியாக தேவையான அளவிற்கு வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

கே. பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...