கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளரைச் சந்தித்து சிபிஐ(எம்) கோரிக்கை மனு

பெறுநர்

                மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,

                தமிழ்நாடு அரசு,

                தலைமைச் செயலகம்,

                சென்னை – 600 009.

தமிழ்நாடு அரசு தலைமைச்செயலாளர்  அவர்கள் வழியாக இன்று நேரில் சந்தித்து அளிக்கப்பட்டது.

வணக்கம்.

பொருள்:-       கொரோனா நோய்த்தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் – மருத்துவ சிகிச்சை – ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்  – அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை வற்புறுத்துவது தொடர்பாக…

நோய்தொற்று மற்றும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. அடுத்து வரும் காலங்களில் இந்நோய்த் தொற்று உச்சத்திற்கு செல்லும் என அறிய முடிகிறது. மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகி தற்போது மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால், நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது குறித்து அரசு ஆலோசிப்பதாகத் தெரிய வருகிறது. இத்தகைய நிலைமைகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அ)         சென்னையில் நோய்ப்பரவலை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் கொண்ட குழுக்களில் சடடமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் இணைத்திட வேண்டும். குறிப்பாக வார்டு அளவில் அனைத்து கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலரை கொண்ட குழுக்கள் அமைக்க வேண்டும். நோய்த்தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களிலும் இத்தகைய குழுக்கள் அமைத்திட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளையும் கொரோனா தடுப்புப்பணியில் ஈடுபடுத்திட வேண்டும்.

ஆ)        நோய்த்தொற்றின் காரணமாக அதிகரித்து வரும் நோயாளிகளை மருத்துவமனைகளில் தங்க வைத்து சிகிச்சை அளிப்பதற்கு தற்போது போதுமான இடவசதிகள் இல்லை. நோயாளிகள் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொரோனா சிறப்பு முகாம்களில் அடிப்படை வசதிகள், கழிப்பிடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி போதுமான அளவிற்கு இல்லை. நோயாளிகளுக்கு ஒப்பந்தகாரர்கள் வழங்கும் உணவு தரமற்றதாக உள்ளது. 

                இவைகளை எதிர்கொள்ள 1. அனைத்து தனியார் மருத்துவமனைகளையும், தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளையும் கொரோனா சிகிச்சைக்கு அரசு பயன்படுத்த வேண்டும். 2. நோயாளிகளுக்கு தரமான உணவு மற்றும் குடிநீர் வசதிகள் செய்து தரப்பட வேண்டும். 3. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அனைத்து பொருட்களையும் தன்னார்வலர்கள் மூலம் அளித்திட வேண்டும்.4. குடிசைப்பகுதி மக்கள் உள்ள பகுதிகளில் தனிமைப்படுத்த பொருத்தமான வேறு மையங்கள் தீர்மானிக்க வேண்டும்.

இ)         நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளித்திட வேண்டும். தொற்று அறிகுறி இல்லாதவர்கள் மத்தியில் 100 பேருக்கு ஒருவர் வீதம் சுயனேடிஅ கூநளவiபே நடத்திட வேண்டும்.

ஈ)          தனியார் ஆய்வகங்களில் ஏற்படும் சோதனை செலவுகளை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். இதனால் மக்கள் தயக்கமின்றி தாமே முன்வந்து சோதனை செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

உ)         முகக்கவசம் கட்டாயம் என்ற சூழ்நிலையில் அனைவருக்கும் அல்லது குறைந்தபட்சம் ஏழை – எளிய மக்களுக்கு அரசே இலவசமாக முகக்கவசம் மற்றும் கை கழுவும் சானிடைசர் வழங்க வேண்டும். சுயஉதவிக்குழுக்களை இவற்றை உற்பத்தி செய்ய வைத்து அரசு கொள்முதல் செய்திட வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது கூடாது.

ஊ)        தனியார் மருந்தகங்களில் விற்கப்படும் அனைத்து மருத்துவ உபகரணங்களுக்கும் அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

எ)          அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த சலுகைகள் இதுவரை வழங்கப்படவில்லை. உதாணமாக ஒரு மாத கூடுதல் ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, இவர்கள் அனைவருக்கும் கூடுதல் ஊதியம் மற்றும் பொருளாதார பயன்களை வழங்கிட வேண்டும். இந்த ஊக்கத்தொகை வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை மற்றும் காவல்துறையின் கொரோனா பணியில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும்.

ஏ)          ஏற்கனவே 2015ம் ஆண்டு பணியிலமர்த்தப்பட்ட 8000ற்கும் மேற்பட்ட செவிலியர்களையும், தற்போது பணியமர்த்தப்பட்டுள்ள செவிலியர்களையும், இனி புதிதாக பணியமர்த்தப்படவுள்ள செவிலியர்களையும் பணி நிரந்தம் செய்து, காலமுறை ஊதியம் வழங்கி வேண்டும்.

ஐ)         தற்போது சென்னையில் மருத்துவர்கள் போதாமை உள்ளதால் ஏற்கனவே நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக வெளியூர்களுக்கு மாற்றப்பட்ட மருத்துவர்களை அவர்கள் பணியாற்றிய மருத்துவமனைகளில் மீண்டும் பணியமர்த்திட வேண்டும்.

ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு

கீழ்க்கண்டவைகளை நிறைவேற்றித் தர வேண்டும்

1.            மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்றுள்ள நுண் நிதி நிறுவனக் கடன்கள், வாகன கடன்கள், வீடு கட்ட வாங்கியுள்ள கடன்கள் போன்ற அனைத்து கடன் வசூலையும் ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டுமெனவும், இக்காலத்துக்கான வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு வற்புறுத்திட வேண்டும். நுண்நிதி நிறுவனங்களுக்கு இதுகுறித்து அறிவுறுத்த வேண்டும்.

2.            அனைத்து கிராம ஊராட்சிகளிலும்  ஊரக வேலை உறுதி சட்டத்தை உடனடியாக செயல்படுத்திடவும், கிராமப்புற, பேரூராட்சிகளுக்கு இதனை விரிவுபடுத்தவும் வேண்டும். வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும். வழங்கப்படும் ஊதியத்தை ஊரடங்கு காலத்தில் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கிட வேண்டும். இதில் ஊழல் முறைகேடுகளுக்கு இடமளிக்கக்கூடாது.

3.            சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு மத்திய அரசு செய்துள்ள அறிவிப்பு போதுமானதாக இல்லை. இத்தொழில்களை துவக்குவதற்கு தேவையான அளவு நேரடி நிதி உதவி அளித்திட மத்தியஅரசிடம் தமிழக அரசு வற்புறுத்திட வேண்டும். சிறு, குறு தொழில்களுக்கு மின்சார வாரியத்திலிருந்து விதிக்கப்படும் பிக்சட் சார்ஜசை மார்ச் மாதம் முதல் ஜூன் வரையிலான காலத்திற்கு தள்ளுபடி செய்திட வேண்டும்.

4.  நகர்ப்புறங்களில் உள்ள ஏழை, எளிய தொழிலாளர்களுக்கு வேலையும், வருமானமும் கிடைத்திட நகர்ப்புற வேலை உறுதிச் சட்டம் உடனடியாக இயற்றி ஊரடங்கு காலத்தில் செயல்படுத்திட வேண்டும்.

5.            புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை பூதாகரமாக  உள்ளது. எனவே காலந்தாழ்த்தாமல் தமிழகத்திலிருந்து புறப்படும் அனைத்து ரயில்களையும் இயக்கி இத்தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

6.            தொழில்நிறுவனங்களில் உற்பத்தி துவங்கியுள்ள நிலையில் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல பேருந்துகள் இயக்கிட வேண்டும். ஊரடங்கு காலத்தில் காவல்துறை வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்துள்ள வாகனங்களை தாமதமின்றி உரிமையாளர்களுக்கு அளித்திட வேண்டும். தொழில்நிறுவனங்களில் தொழிலாளர்கள் ஆட்குறைப்பு, சம்பளக்குறைப்புக்கு அனுமதிக்கக் கூடாது.

7.            தனியார் கல்லூரி, பள்ளிகள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு ஊரடங்கு காலத்திற்கான சம்பளத்தொகையினை முழுமையாக வழங்கிட வேண்டும்.

8.            ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களிலாவது முடிதிருத்தகங்கள், சலவை நிலையங்கள் திறந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்.

9.            சென்னையில் ஆட்டோ போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டும்; நலவாரியத்தில் பதிந்த மற்றும் பதிய முடியாத அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணம் அறிவித்திட வேண்டும்.

10.          அனைத்து வாகனங்களுக்கான நடப்புக் காலாண்டு சாலை வரியினை ரத்து செய்திடவும் வேண்டும்.

11.          ஊரடங்கின்போது சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்ய முடியாமல் அழிந்துபோன பழங்கள், காய்கறிகள், மலர்கள், வெற்றிலை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உரிய நட்ட ஈடு வழங்கிட வேண்டும். அதற்கான கணக்கெடுப்புப் பணிகளை உடன் துவங்கிட உத்திரவிட வேண்டும்.

12.          கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய பாக்கியை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

13.          கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் இ-சேவை மையங்கள் எதுவும் செயல்படவில்லை. உடனடியாக அனைத்து இ-சேவை மையங்களும் செயல்பட நடவடிக்கை எடுத்திட வேண்டும்

14.          இதுவரை நிவாரணம் அறிவிக்கப்படாத மாற்றுத்திறனாளிகள், தையல் கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் உட்பட இதுவரை நிவாரணம் கிடைக்காத பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உடனடியாக நிவாரணங்கள் அறிவிக்கப்பட வேண்டும்.

இங்ஙனம்,

தங்கள் அன்புள்ள,

(கே. பாலகிருஷ்ணன்)

மாநிலச் செயலாளர்

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...