கொரோனா – ஊரடங்கு காலத்தில் கௌரவ விரைவுரையாளர்களுக்கு ஊதியம் மறுப்பு! முதலமைச்சர் தலையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

தமிழகத்தில் உள்ள 113 கலை மற்றும் அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் இரண்டு சுழற்சிகளிலும் சேர்த்து 4084 கௌரவ விரிவுரையாளர்கள் மிகக் குறைந்த ஊதியமான ரூ. 15,000/-ல் பணியாற்றி வருகின்றனர். கொரோனா நோய் தொற்று பரவல் மற்றும் ஊரடங்கினால் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்களுக்கு உள்ளாகி தங்களது குடும்பத் தேவைகளை கூட சமாளிக்க முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொரோனா நோய்த் தொற்று, ஊரடங்கு ஆகிய காரணங்களால் இவர்கள் தங்களது குடும்பத் தேவைகளை சமாளிப்பதற்காக வேறு எங்கும் வேலைக்கு செல்ல முடியாது என்பதையும் கவனப்படுத்த விரும்புகிறோம்.

இப்பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக தலையிட்டு வாழ்வாதாரமின்றி சிரமப்படும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களுக்கான ஊதியத்தை உடனடியாக வழங்கிட உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

அதேபோல், தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மூன்று மாதங்களுக்கான ஊதியத்தை உடனடியாக வழங்கிட தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கும் முதலமைச்சர் அறிவுறுத்த வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

கே. பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை இழிவுபடுத்தும் நோக்கோடு நேற்று நள்ளிரவு சமூக விரோதிகள் ...