கொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்!

கொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திட வேண்டுமென தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கும், மின்சாரத்துறை அமைச்சர் திரு. பி. தங்கமணி ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.

பெறுநர்

மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.

மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.
பொருள்:- கொரோனா காலத்திற்கு மின் கட்டணம் குறைப்பு கோருவது தொடர்பாக:-
*
கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய, மாநில அரசுகள் பொதுமுடக்கத்தை அமலாக்கி வருகின்றன.
இதன் விளைவாக, இக்காலம் முழுவதும் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் மின் நுகர்வும் அதிகரித்துள்ளது. இன்னொரு பக்கம் வேலை, வருமானம் இல்லாமல் மக்களுடைய வாழ்வாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி பசியும், பட்டினியுமாக வாழ்ந்து வருகின்றனர்.


ஏழை, எளிய மக்கள் வீட்டு வாடகை கூட செலுத்த முடியாமல் வீடுகளை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான காலத்தில் மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்து பொதுமக்களுக்கு தாங்க முடியாத சுமையினை அளித்து வருகிறது.
மேலும், மின்சார வாரியம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்நுகர்வை கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கும் முறையை மேற்கொண்டுள்ளது.


இதனால் 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தும் மின் நுகர்வோர் இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கொரோனா காலத்தில் மின்நுகர்வின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ள மின் கட்டணம் என்பது அரசு அறிவித்த நிவாரணத்தொகை ரூ.1000/-ஐ விட பல மடங்கு கூடுதலாக உள்ளது.

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை அங்கீகரித்து கேரள அரசு உள்பட பல மாநில அரசுகள் மின்கட்டணத்தை குறைத்து உள்ளன.

எனவே, இதை கணக்கில் கொண்டும், மக்கள் அனுபவிக்கும் நெருக்கடிகளை கணக்கில் கொண்டும் தமிழக அரசு மின் கட்டண உயர்விலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

எனவே, கொரோனா காலத்திற்கு முன்பு (2020 ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம்) மின்நுகர்வோர் எவ்வளவு தொகையை மின்கட்டணமாக செலுத்தியிருந்தார்காளோ அதே தொகையைதான் கொரோனா காலம் முடியும் வரை வசூலிக்க வேண்டும்.
அதற்கு மேல் கூடுதலாக உள்ள தொகையை மின்நுகர்வோர்களுக்கு நிவாரணமாக வழங்குகிற முறையில் தமிழக அரசே அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஏற்கனவே மின்கட்டணத்தை மின்நுகர்வோர் செலுத்தியிருந்தால், அவர்கள் செலுத்தியுள்ள கூடுதல் கட்டணத்தை எதிர்கால மின் பயன்பாட்டிற்கான கட்டணத்தில் சரி செய்து கொள்ள வேண்டும்.

இதனால் தமிழக மின்சார வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை தமிழக அரசே ஏற்றுக் கொண்டு ஈடுசெய்ய வேண்டும்.

எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கண்ட கோரிக்கையினை ஏற்றுக் கொண்டு மின் கட்டணத்தை குறைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இங்ஙனம்,
தங்களன்புள்ள,

(கே. பாலகிருஷ்ணன்)
மாநிலச் செயலாளர்

Check Also

நாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் ...