கொரோனா தடுப்பு நடிவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நடமாட்டத்திற்கு மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டுமென பணிவன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வது மட்டும்தான் இந்த வைரஸ் பரவுவதைத் தடுத்து நம்மையும் மற்றவர்களையும் பேராபத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும். எனவே, நம்மை இந்த வைரஸ் தாக்காது, நமக்கு எந்த நோயும் வராது என்ற நம்பிக்கையில் மக்கள் செயல்பட வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

எனவே, எந்த சூழ்நிலையிலும் இருப்பிடங்களை விட்டு வெளியே வருவது, பொது இடங்களில் கூட்டமாகக் கூடுவது, கடைகள் மற்றும் வியாபார இடங்களில் கூட்டமாகக் கூடுவது போன்ற அனைத்தையும் தவிர்த்து முழு சுயக்கட்டுப்பாடுடன் அனைவரும் செயல்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் பல நிவாரண உதவிகளையும், நலத்திட்டங்களையும் தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார். இத்தகைய அறிவிப்புகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரவேற்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இரவு பகல் பாராமல் மருத்துவ மற்றும் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு ஊதியம் வழங்க அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இவர்களுக்கு நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உரிய மருத்துவ உபகரணங்களை வழங்குவதோடு, அடிக்கடி தொற்று தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்படவும் வேண்டும். அவர்கள் வீடுகளிலிருந்து பணிக்கு வருவதற்கு போதிய போக்குவரத்து வசதிகள், ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

இவர்களைப் போலவே இந்த நெருக்கடியான நிலையில் இரவு பகலாக பணியாற்றக் கூடிய காவல்துறையினர், அரசு ஊழியர்கள், குடிநீர் வழங்கும் பணியாளர்கள் மற்றும் நியாய விலைக்கடை ஊழியர்கள் உள்பட அனைவருக்கும் மேற்கண்ட சலுகைகளை அரசு வழங்க வேண்டும்.

இந்த இக்கட்டான நேரத்தில் பொது மக்களுக்கு உடனுக்குடன் தகவல்களையும் உரிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிற மகத்தான பணியில் ஈடுபட்டுள்ள பத்திரிக்கையாளர்கள் மற்றும்  ஊடகவியலாளர்கள் இரவு பகல் பாராமல் மாநிலத்தின் மூலை முடுக்களுக்கெல்லாம் சென்று பணியாற்றி வருகின்றனர். இப்பணி பாராட்டுக்குரியது. இவர்கள் தனியார் நிறுவன ஊழியர்கள் என்று பார்க்காமல் இவர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்களையும் ஒரு மாத சம்பளத்தையும் அரசே உதவித் தொகையாக வழங்கிட வேண்டும்.

மக்களினுடைய வாழ்வாதாரம், வருமானம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் செலுத்த வேண்டிய மின்கட்டணம், கடன் தவணைகள், இன்சூரன்ஸ் தவணைகள், கிரெடிட் கார்டு கடன்கள் போன்றவைகளை செலுத்துவது சாத்தியமில்லை என்பதால் ஒரு 3 மாத காலத்திற்கு இவைகள் அனைத்தையும் ஒத்தி வைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

நுண்நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்றுள்ள மகளிர் சுயஉதவிக்குழு கடன்களை 6 மாத காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டுமெனவும் இந்த நெருக்கடி மிகுந்த நேரத்தில் கடன் வசூலை நுண்நிதி நிறுவனங்கள் மேற்கொள்ளக் கூடாது என மத்திய அரசு அறிவித்திட தமிழ்நாடு மாநில அரசு வற்புறுத்திட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் மார்ச் மாதத்தில் பணியாற்றிவர்களுக்கு மட்டும் 2 நாள் ஊதியம் சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை உறுதித் திட்டப் பணிகள் பெரும்பகுதி நடைபெறாத சூழ்நிலையில் இந்த சலுகை வெறும் அறிவிப்பாக மட்டுமே இருக்கும். எனவே, கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தில் ‘வேலை அட்டை’ வாங்கியுள்ள அனைவருக்கும் குறைந்தபட்சம் 5 நாள் ஊதியத்தை நிவாரணமாக வழங்கிட வேண்டும்.

இதைப்போன்று, இத்திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கடந்த பல மாதங்களாக சம்பள பாக்கித் தொகை வழங்கப்படாமல் உள்ளது. இந்த சம்பள பாக்கி முழுவதையும் உடனடியாக வழங்கிட மாநில அரசு நடவடிக்கை எடுப்பதுடன் மத்திய அரசையும் வற்புறுத்திட வேண்டுகிறோம்.

ஓய்வூதியம் பெறுகிற முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு மாத ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

மக்களைக் காப்பாற்றுவதற்கு மருத்துவப் பணி அத்தியாவசியமானதாக உள்ள நிலையில் கடந்த காலத்தில் தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய அரசு மருத்துவர்கள் பலர் பல்வேறு இடங்களுக்கு பணி மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறப்பு மருத்துவர்கள் (ளுயீநஉயைடளைவள) மற்றும் அனுபவம் வாய்ந்த மூத்த மருத்துவர்களாக உள்ளார்கள்.

இவர்களது சேவை அத்தியாவசியமானதாக உள்ளதால் இவர்கள் மீதான பணி மாறுதல் நடவடிக்கைகளை உடனே ரத்து செய்து அவர்கள் ஏற்கனவே பணியில் இருந்த இடங்களில் பணியிலமர்த்தக் கேட்டுக் கொள்கிறோம்.

கே. பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

மனுவாதிகளின் ஆதிக்க செயலை முறியடித்த அய்யா வைகுண்டரின் 189-வது பிறந்த தினம்…

அய்யா வைகுண்டரின் 189வது பிறந்த தின விழாவை கொண்டாடி வரும் அய்யாவின் அன்புக்கொடி மக்களுக்கு இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். ...