கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து மக்களுக்கு ஏற்படுகிற சிரமங்களுக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்!

பிரதமருக்கு சிஐடியு கடிதம்

பெறுதல்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்

தமிழ்நாடு,

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து நாட்டு மக்கள் பாதுகாக்கப்பட அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால், உழைப்பாளி மக்களுக்கு ஏற்டுகிற சிரமங்களுக்கு உரிய தீர்வை அளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரி பிரதமருக்கு சிஐடியு கடிதம் 24/03/2020 அன்று கடிதம் எழுதியுள்ளது.  அக்கடிதத்தில் சிஐடியுவின் பொதுச் செயலாளர், தபன் சென், கீழ்க்காணும் விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

“கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக ஏற்பட்டுள்ள சூழலை எதிர்கொள்ள, அதனை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட சில முக்கியமான அம்சங்களில் உங்களது உடனடி தலையீட்டை இந்திய தொழிற்சங்க மையமும், இந்நாட்டின் ஒட்டுமொத்த தொழிற்சங்க இயக்கமும் வலியுறுத்துகிறது. 

பல்வேறு மாநிலங்களில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உள்ளிட்ட இதுவரை அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளுக்கும் மக்கள் பொதுவாக ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர்.  எனினும், மேலும் மோசமடைந்து வருகிற நிலைமையை எதிர்கொள்ள விரிவானதொரு திட்டத்தை இந்திய அரசு உருவாக்கிட வேண்டும்.

உரிய மற்றும் கடுமையான மேற்பார்வையோடு தேசிய வைராலஜி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டவை உள்ளிட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மூலமாகவும் கரோனா வைரஸ் பரிசோதனைக்கான கருவிகள் கிடைப்பதை உத்திரவாதம் செய்வதோடு, பரிசோதனைக்கான வசதிகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.  பரிசோதனைக்கான வசதிகளை குறைந்தபட்சமாக அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் கிடைப்பது, முகக்கவசங்கள் மற்றும் இதர பாதுகாப்பு கருவிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவில் மருத்துவ ஊழியர்களுக்கு அளிப்பது மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் மற்றும் தனிமைப்படுத்தப்படுவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்வது ஆகியவற்றை உத்திரவாதம் செய்வதன் வாயிலாக நாடு தழுவிய அளவில் பொதுசுகாதார வசதி வலுப்படுத்தப்படுவது அவசியமாகும்.  பரிசோதனை, தடுப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான மருத்துவ சேவைகளை இலவசமாக அளித்திட தனியார் மருத்துவமனைகள் அறிவுறுத்தப்பட வேண்டும்.

ஊரடங்கு உத்தரவுகள் காரணமாக தவிர்க்க இயலாது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள், குறிப்பாக நமது நாட்டில் உள்ள தொழிலாளர்களில் 93 சதவீதத்தினராக உள்ள முறைசாரா துறையை சார்ந்த தொழிலாளர்கள், தங்களது வருமானத்தை இழந்திடுவர்.  இவர்களது வேலைகளும், வருமானமும் பாதுகாக்கப்படுவதையும் அரசு உத்திரவாதம் செய்திட வேண்டும்.  மேலும், அவர்களது உடனடி அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அவர்களுக்கு நிதி அளிக்கப்படுவதையும் உத்திரவாதம் செய்திட வேண்டும்.  கணிசமான எண்ணிக்கையிலான தொழிலாளர்களை பணியிலமர்த்தி வருகிற, பொருளாதார மந்தத்தால் ஏற்கனவே பாதிப்பிற்கு உள்ளாகியுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, சலுகை கடன்கள் அளிப்பது மற்றும் அவர்கள் ஏற்கனவே பெற்றுள்ள கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலஅவகாசத்தை நீட்டிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலமாக அரசு தனது ஆதரவை அளித்திட வேண்டும்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள், கதவடைப்புகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் ஊதியமும், வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படுவது தொடர்பாக அரசுகள் வேண்டுகோள்களை விடுத்துள்ளபோதும், களத்தில் காணப்படும் நிலைமை முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.  கதவடைப்பு மற்றும் உற்பத்தி குறைப்பு, சேவை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படுவதால் ஏற்படும் ஒட்டுமொத்த சுமையையும் உழைப்பாளி மக்களின் முதுகில் சுமத்துவதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதன் காரணமாக, பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் உள்ள இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்த, தற்காலிக தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட முறைசாரா தொழிலாளர்களுக்கு வருமான, வாழ்வாதார இழப்பு ஏற்படுகின்றது.    ஊதிய வெட்டு, ஊதிய இழப்புடனான கட்டாய விடுப்பு, ஆட்குறைப்பு போன்றவற்றை பல்வேறு தனியார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.  இதன் காரணமாக இத்தொழிலாளர்களின், அவர்களது குடும்ப உறுப்பினர்களின் வாழ்வு பணயம் வைக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு பட்டினியும், இழப்புக்களும், வறுமையுமே கிடைக்கின்றன.

இத்தகையதொரு நிலைமையில், ஆட்குறைப்பு, தங்களது தொழிலாளர்களின் ஊதியத்தில் தொகை எதையும் பிடித்தம் செய்ய வேண்டாம் என்பன போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என முதலாளிகளுக்கு வேண்டுகோள் விடுப்பது மட்டும் போதுமானதாக இருக்காது. உழைப்பாளி மக்கள் தங்களது வேலைகளை, வாழ்வாதாரத்தை, வருமானத்தை இழப்பதை தடுத்திட, வலுவானதொரு சட்டபூர்வமான, நடைமுறைப்படுத்தக் கூடிய ஏற்பாடு ஒன்றை அரசு உடனடியாக ஏற்படுத்திட வேண்டும்.

எனவே, வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மிகுந்த பாதிப்புகளுக்கு ஆளாகக் கூடியவர்களுக்கு வருமான ஆதரவை அளிக்கவும் மாநில அரசுகளின் வாயிலாக செயல்படுத்தக் கூடிய பெரிய அளவிலான திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என சிஐடியு கோருகின்றது.

மத்திய மற்றும் மாநில அரசுகளால் நேரடியாக செயல்படுத்தக்கூடிய சட்டபூர்வமாக நடைமுறைபடுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகளை மேலும் காலம் தாழ்த்தாது அரசு அறிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்இந்நடவடிக்கைகளில் கீழ்க்காணும் அம்சங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

 1. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் ஆட்குறைப்பு மற்றும் கதவடைப்பு நடவடிக்கள் காரணமாக ஏற்படும் பணியிழப்பு மற்றும் ஊதிய இழப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பையும், சமூகப் பாதுகாப்பு பயன்களையும் தங்களது நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி ஒப்பந்த மற்றும் கேஷுவல் தொழிலாளர்களுக்கும் உத்திரவாதம் செய்திட பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகங்களோடு, தனியார் நிறுவனங்களையும் நிர்ப்பந்திப்பதன் வாயிலாக தொழிலாளர்களின் வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பது
 2. 25 வயதிற்குட்பட்ட முறைசாரா துறை தொழிலாளர்களுக்கு ரூ.5000த்தையும், 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.10,000த்தையும் மாதந்தோறும் அவர்களது வங்கிக் கணக்கில் அல்லது ஜன்தன் கணக்கில் செலுத்துவதை உத்திரவாதம் செய்வது
 3. இபிஎஸ் ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களது ஓய்வூதியத் தொகையை குறைந்தபட்ச அளவில் உயர்த்துவது
 4. கரோனா வைரஸால் நேரடியாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் பணியிலிருந்து விலகி இருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு முதலாளிகளால் அளிக்கப்பட வேண்டும்.
 5. கதவடைப்பு அல்லது ஆட்குறைப்பு செய்யப்பட்ட நாட்களுக்கு ஊதிய வெட்டு, விடுப்பு நாட்களில் சரி செய்வது போன்ற நடவடிக்கைகள் இருக்கக் கூடாது.
 6. அரசின் கைவசம் உள்ள உணவு தானிய இருப்பைக் கொண்டு முறைசாரா துறை தொழிலாளர்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் அளிக்கப்பட வேண்டும்.
 7. உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு இட்டுச் செல்லும் வகையில், தற்போதைய நிலைமையை பயன்படுத்திக் கொண்டு இப்பொருட்களை பதுக்கி வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
 8. தற்போது தற்காலிகமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதை கணக்கில் கொண்டு, மதிய உணவு பெற தகுதியுள்ள மாணவர்களுக்கு மதிய உணவு அவர்களது குடியிருப்பு பகுதிகளில் அளிக்கப்பட தனியாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்இத்தகைய நடவடிக்கைகள் மாணவர்களுக்கு பயனளிப்பதோடு, சத்துணவு பணியாளர்களின் பணியையும் பாதுகாத்திடும்.
 9. பல்வேறு விதங்களில் சுகாதார மற்றும் இதர சேவைகளை அளித்திடும் பணியில் ஈடுபட்டு வரும் சுகாதாரத் துறை சார்ந்த ஆஷா பணியாளர்கள், இரண்டாவது ஏஎன்எம்எஸ் மற்றும் இதர திட்டப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் போன்றவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் உத்திரவாதம் செய்யப்பட வேண்டும்.
 10. சுகாதாரத் துறை சார்ந்த ஆஷாப் பணியாளர்கள் மற்றும் இதர திட்டப் பணியாளர்களின் ஊதியம் மாதாந்திர அடிப்டையில் உயர்த்தி அளிக்கப்பட வேண்டும்.
 11. கச்சாப் பொருட்கள், பரிசோதனை கருவிகள், சானிடைசர்கள் உள்ளிட்ட மருந்துப் பொருட்கள் மற்றும் இதர கருவிகள் ஆகியனவற்றை உற்பத்தி செய்திட பொதுத்துறை மருந்து உற்பத்தி நிறுவனங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள உழைப்பாளி மக்களின் குறைந்தபட்ச கோரிக்கைகளை அவற்றிற்குத் தேவையான அவசரத்துடனும், முன்னுரிமை அடிப்படையிலும் நீங்கள் தலையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.  

தங்கள் உண்மையுள்ள,

மாவட்ட செயலாளர்.

மாண்புமிகு தொழிலாளர் அமைச்சர் அவர்கள்,

திருமிகு ஆணையாளர் அவர்கள் தமிழ்நாடு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை

Check Also

நாட்டு மக்களை சட்ட விரேதமாகக் கண்காணித்திட யார் அதிகாரம் அளித்தது? பாஜக அரசே பதில் சொல்!

கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை; இஸ்ரேல் உளவு நிறுவனமான NSO ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் போன்கள் ...