கொரோனா வைரஸ் பாதிப்பு – கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்!

சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்

பெறுநர்

மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,

 தமிழ்நாடு அரசு,

தலைமைச் செயலகம்,

சென்னை – 600 009.

வணக்கம்

பொருள்:- கொரோனா வைரஸ் பாதிப்பு – கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வற்புறுத்துவது தொடர்பாக…

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எங்களது முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறோம். வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் தங்களைத் தானே தனிமைப்படுத்திக் கொள்வது என்பதைத் தவிர வேறு மாற்று வழியே இல்லை என்பதை பொது மக்களுக்கு எங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் விளக்கிக் கூறி வருகிறோம்.

அதேசமயம், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவின் போது மக்கள் தங்கள் இருப்பிடங்களிலேயே வாழ்வதற்கான பொருளாதார உதவிகளை அரசு வழங்கினால் மட்டுமே மக்களை பாதுகாக்க முடியும் என்பதனை தாங்கள் அறிவீர்கள். தமிழக அரசின் சார்பில் சட்டப்பேரவையில் தாங்கள் அறிவித்துள்ள நிவாரண உதவிகள் வரவேற்கத்தக்கவை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த அறிவிப்பு பிரதமர் ஏப்.21ம் தேதி வரை ஊரடங்கு என்று அறிவிப்பதற்கு முந்தைய நிலையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு தாங்கள் அறிவித்தது. தற்போது 3 வாரங்கள் நீட்டித்திருக்கும் நிலையில் அதற்கேற்ற பொருளாதார உதவிகளை தேவைப்படும் மக்களுக்கு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

கீழ்க்கண்டவற்றையும் பரிசீலித்து சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்;

  • சென்னையிலும், மாநிலம் முழுவதும் மருத்துவப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், உள்ளுறை மருத்துவர் (House Surgeon), முதுகலை மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பான முகக்கவசம் மற்றும் உபகரணங்களை தாமதமின்றி வழங்கிட வேண்டும்.
  • மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியில் ஈடுபடுவோருக்கு தங்கள் வீடுகளிலிருந்து பணியிடங்களுக்குச் செல்லவும், திரும்ப வீடுகளுக்குச் செல்வதற்கும் உரிய போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.
  • மாநிலம் முழுவதும் அனைத்து அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், குடிநீர் வழங்கும் பணியாளர்கள், நியாய விலைக்கடை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்கிட  வேண்டும்.
  • மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை, ரேசன் பொருட்களை வீடு வீடாகச்  சென்று வழங்கிட ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • பொது மக்களுக்கும் முகக்கவசம் மற்றும் Sanitisers வழங்கிட வேண்டும்.
  • சென்னை போன்ற பெருநகரங்களில் நெருக்கடியான குடிசைகளில் வாழும் மக்களை அவர்களுக்கு அருகிலுள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் தங்க வைத்து உணவு வழங்கிட வேண்டும்.
  • வெளிமாநிலத் தொழிலாளர்கள் கூட்டமாக ஒரு இடத்தில் தங்கியிருப்பதைத் தவிற்பதற்கு அருகிலுள்ள பள்ளிகள், கல்லூரிகளில் தங்க வைத்து உணவு வழங்கிட வேண்டும்.
  • முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு மாத ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
  • நுண்நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்றுள்ள மகளிர் சுயஉதவிக்குழு கடன்களை 6 மாத காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டுமெனவும், இந்த நெருக்கடி மிகுந்த நேரத்தில் கடன் வசூலை தள்ளி வைக்க உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.
  • ஊடகத்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு மாத ஊதியத்தை அரசே வழங்கிட வேண்டும்.
  • மின்கட்டணம், தண்ணீர்க் கட்டணம், கடன் தவணைகள், இன்சூரன்ஸ் தவணைகள், கிரெடிட் கார்டு கடன்கள் போன்றவைகளை செலுத்துவது சாத்தியமில்லை என்பதால் ஒரு 3 மாத காலத்திற்கு இவைகள் அனைத்தையும் தள்ளி வைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
  • ஆட்டோ, டாக்சி, வேன் போன்ற சுய வேலைவாய்புகளுக்கு பயன்படுத்துகிற வாகனங்களில் இந்த 3 மாத காலத்தில் எப்சிகளுக்கு வரும் வாகனங்களுக்கு கட்டணத்திலிருந்து விலக்களிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.
  • கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தில் ‘வேலை அட்டை’ வாங்கியுள்ள அனைவருக்கும் குறைந்தபட்சம் 5 நாள் ஊதியத்தை நிவாரணமாக வழங்கிட வேண்டும். இத்திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கடந்த பல மாதங்களாக சம்பள பாக்கித் தொகை வழங்கப்படாமல் உள்ளது. இந்த சம்பள பாக்கி முழுவதையும் உடனடியாக வழங்கிட மாநில அரசு நடவடிக்கை எடுப்பதுடன் மத்திய அரசையும் வற்புறுத்திட வேண்டுகிறோம்.
  • கடந்த காலத்தில் தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய அரசு மருத்துவர்கள் பலர் பல்வேறு இடங்களுக்கு பணி மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறப்பு மருத்துவர்கள் (Specialists) மற்றும் அனுபவம் வாய்ந்த மூத்த மருத்துவர்களாக உள்ளார்கள். இவர்களது சேவை அத்தியாவசியமானதாக உள்ளதால் இவர்கள் மீதான பணி மாறுதல் நடவடிக்கைகளை உடனே ரத்து செய்து அவர்கள் ஏற்கனவே பணியில் இருந்த இடங்களில் பணியிலமர்த்தக் கேட்டுக் கொள்கிறோம்.
  • மக்கள் வீட்டிலேயே இருப்பதால் தண்ணீர்  தேவை அதிகரித்துள்ளது. எனவே, மெட்ரோ லாரிகள் மூலம் தண்ணீர் தேவைப்படும் மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இங்ஙனம்,

தங்கள் அன்புள்ள,

ஒப்பம்/-

கே. பாலகிருஷ்ணன்

மாநிலச் செயலாளர்

Check Also

நிலைகுலைந்து நிற்கும் இந்தியப் பொருளாதாரம் மீட்க வழி தெரியாமல் முரட்டுத்தனமாக மக்களைத் தாக்கும் மோடி அரசு!

கொரோனா தாக்கத்திற்கு முன்பும், பின்புமான நிலைமைகளின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் நிலைகுலைந்து நிற்கிறது என்றும், அதிலிருந்து நாட்டை மீட்க வழி ...