கொல்லம் வெடி விபத்தில் பலர் உயிரிழப்பு! சிபிஐ(எம்) ஆழ்ந்த இரங்கல்!!

கேரளாவில் கொல்லம் அருகேயுள்ள கோவில் ஒன்றில் நடந்த திருவிழா நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்து காரணமாக தீயில் கருகியும், இடிபாடுகளிடையே சிக்கியும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்தில் பலியானோர் எண்ணிக்கை கூடுதலாக இருக்கக்கூடும்  எனவும் தெரிகிறது.

ஆண்டுதோறும் நடைபெறும் பரவூர் புட்டிங்கல் தேவி கோவில் திருவிழாவின்போது பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் வெடிப்பதற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் இன்று அதிகாலையில் திடீரென தீப்பற்றி வெடித்ததில் இந்த பயங்கர உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பட்டாசு வெடித்து விழாக்களை கொண்டாடுவதற்கு மாவட்ட அளவில் தடை உள்ள நிலையில் இந்த பயங்கர வெடிவிபத்து சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இந்த கோர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலியையும், இதனால் துயருற்றுள்ள அவர்களது குடும்பத்தினருக்கு அனுதாபத்தையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது. காயமுற்றவர்கள் அனைவருக்கும் போதுமான மருத்துவ வசதிகளை செய்திடவும், உயிரிழப்பால் பாதிககப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு உரிய நிவாரண உதவிகளும், இழப்பீடும் வழங்கிட கேரள அரசு முன்வர வேண்டுமெனவும், மத்திய அரசு கேரள அரசிற்கு உதவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கட்சி  வலியுறுத்துகிறது.

கோவில் விழாக்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடையுள்ள நிலையில்  இந்த வெடி விபத்து சம்பவம் குறித்து விசாரித்து விபத்துக்கு காரணமானவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேரள அரசை வலியுறுத்துகிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...