கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்கிட வேண்டும்; சிபிஐ (எம்) எம்.எல்.ஏ., தமிழக முதல்வருக்கு கடிதம்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு கொறடாவும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே. பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நேற்று (12.11.2016) மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு “இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் தமிழகம் முழுவதும் நீண்ட காலமாக குடியிருப்பவர்களுக்கும் – குறிப்பாக, கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் வசிக்கும் ஏழைகளுக்கு உடனே மின்னிணைப்பு வழங்கிட உத்தரவிட வலியுறுத்தி” அனுப்பியுள்ள கடித நகல்.


பெறுதல்

            மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,

            தமிழ்நாடு அரசு,

            தலைமைச் செயலகம்,

            சென்னை – 600 009.

மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள்:-

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் தமிழகம் முழுவதும் நீண்ட காலமாக குடியிருப்பவர்களுக்கும் – குறிப்பாக, கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் வசிக்கும் ஏழைகளுக்கு உடனே மின்னிணைப்பு வழங்கிட உத்தரவிட கோருவது தொடர்பாக:

தமிழ்நாட்டில் பல லட்சம் ஏழை, எளிய மக்கள் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களில் குடிசைகள் கட்டி வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மின்னிணைப்பு கொடுக்கப்படாமல் பல்லாண்டுகளாக இழுத்தடிக்கப்படுகிறார்கள்.

நவீன காலத்தில் மின்னிணைப்பு இல்லாமல் மண்ணெண்ணெய் விளக்கில் வாழ்ந்து வருவது மிகவும் கொடுமையானதாகும். இக்குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் படிப்பதற்கு வசதியில்லாமல் மிகவும் வேதனைப்படுகிறார்கள். அரசு வழங்கும் விலையில்லா மின்விசிறி, கிரைண்டர், மிக்சி போன்றவைகள் இம்மக்கள் பயன்படுத்தவும் இயலவில்லை. அனைத்துக்கும் மேலாக மண்ணெண்ணெய் விளக்குகள் பயன்பாட்டால் அடிக்கடி தீ விபத்துகளால் பேரழிவுகளுக்கு உள்ளாகும் நிலைமை ஏற்படுகிறது.

மின் இணைப்பு பெறுவதற்கு அறநிலையத்துறை ஆணையரின் அனுமதி பெற வேண்டுமென்ற நடைமுறையால் ஏழை, எளிய மக்கள் அனுமதி பெற இயலாமல் மின் இணைப்பு பெற வாய்ப்பின்றி அலைக்கழிக்கப்படுவதுடன், பலவிதமான முறைகேடுகளுக்கும் வழிவகுத்துள்ளது என்பதை தங்களது கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக, கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பேரூராட்சி 14வது வார்டு, சந்தை தோப்பில் உள்ள அருள்மிகு முத்துக்குமாரசாமி கோவில் இடத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் 30க்கும் மேற்பட்ட குடிசைவாழ் மக்களுக்கு இப்போதுவரை மின் இணைப்பு வழங்கிடவில்லை.

எனவே,

  1. தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்களில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு மின்னிணைப்பினை உடனடியாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
  2. மேற்குறிப்பிட்டுள்ள கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை பேரூராட்சி 14வது வார்டு, சந்தை தோப்பில் உள்ள மக்களுக்கு மின்னிணைப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இப்படிக்கு,

தங்களன்புள்ள,

/ஒப்பம்

(கே. பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ.,)

சிதம்பரம் தொகுதி

நகல்

  1. மாண்புமிகு. அமைச்சர் அவர்கள்,

            இந்து அறநிலையத்துறை,

            தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம்,

            சென்னை – 600 009.

  1. உயர்திரு. செயலாளர் அவர்கள்,

            இந்து அறநிலையத்துறை,

            தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம்,

            சென்னை – 600 009.

  1. உயர்திரு. ஆணையர் அவர்கள்,

            இந்து அறநிலையத்துறை,

            உத்தமர் காந்தி அடிகள் சாலை,

            நுங்கம்பாக்கம், சென்னை.

Check Also

அதானியின் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை கைவிட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சென்னை அருகே திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பள்ளியில் அமைந்திருக்கும் அதானியின் துறைமுகம், முன்பு எல் அண்ட் டி நிறுவனத்தால் 330 ...