கோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பாஜக துரோகம்! – அரசாணை 318-ஐ செயல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

பல தலைமுறைகளாக கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலங்களில் குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்கள் வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டுமென நெடுங்காலமாக போராடி வருகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்திருக்கிறோம்.

இதன் விளைவாக, தமிழக அரசு கடந்த 30-8-2019 அன்று அரசாணை 318-ன் மூலம் வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்கான ஒருங்கிணைந்த உத்தரவினை வெளியிட்டுள்ளது. இதில் கோவில் நிலங்களில் குடியிருந்து வரும் ஏழை குடும்பங்களின் நலன் கருதி விதிமுறைகளுக்கு உட்பட்டு தகுதியான நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கிடவும் அந்த நிலங்களை உரிய வகையில் கையகப்படுத்தி நிலமதிப்பு நிர்ணயம் செய்வதற்கு ஏற்கனவே 2018ல் வெளியிடப்பட்ட அரசாணையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளது.

இவ்வாணையின்படி, ஏழை, எளிய மக்கள் குடியிருந்து வரும் நிலங்களுக்கு விலை நிர்ணயம் செய்து அரசு அதற்கான தொகையினை சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்திடம் செலுத்தி அந்த நிலத்தை கையகப்படுத்தி, பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதனை ஏற்றுக் கொள்ள மறுத்து பாஜக-வினர் இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சுமார் ஒரு வருட காலமாக மேற்கண்ட ஆணையை செயல்படுத்தாமல் தடையாணை பெற்றுள்ளனர். இதனால் பல தலைமுறைகளாக கோவில்நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா கிடைப்பதற்கான வாய்ப்பு தடுத்து நிறுத்தப்பட்டு, இம்மக்கள் பெரும் வேதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இந்து அறநிலையத்துறை சட்டவிதி 34-ன் படி அரசின் பொது நோக்கங்களுக்கு அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விதிக்கு விரோதமாக பாஜக-வினர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தடை பெற்றுள்ளனர். ஏழை, எளிய. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பட்டா உரிமைக்கு எதிராக பாஜக குறுக்கே நிற்பது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.

பாஜகவின் இந்த முயற்சியை முறியடித்து கோவில் நிலங்களில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்பபடுத்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி உடனடியாக வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்துவதுடன், நீதிமன்றங்கள் இதற்கான தடையாணைகளை ரத்து செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

Check Also

கோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் கே.சீனிவாசன் அவர்களின் தொகுதி வாக்குறுதிகள் !

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021 – திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கோவில்பட்டி தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் தோழர் ...