கோவை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 9.50 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகள் அங்கன்வாடி கட்டிடம்: பி.ஆர்.நடராஜன் எம்.பி திறந்து வைத்தார்!

குழந்தைகள் பயன்பெரும் வகையில் கோவை நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் கோவை செங்காளி பாளையத்தில் பி.ஆர்.நடராஜன் எம்பி திங்களன்று திறந்துவைத்தார்.

கோவை எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்திற்குட்பட்ட இடிகரை பேரூராட்சியில் செங்காளிபாளையம் உள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் இப்பகுதியில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.

கோவை நாடாளுமன்ற தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகளை பெற்று பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்றார். இதனையடுத்து மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். இதன்ஒருபகுதியாக கோவை செங்காளிபாளையம் பகுதியில் குழந்தைகள் அங்கன்வாடி கட்டிடம் அமைக்க ரூ 9.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

மத்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு நாடாளுமன்ற நிதி ஒதுக்கீடு இல்லை என சர்வாதிகாரமாக அறிவித்தும், கடந்த ஆண்டு நிதியில் ஐம்பது சதவீதம் நிதியை குறைத்திருந்தபோதும், ஏழைஎளிய மக்களின் அத்தியாவசிய தேவையை உணர்ந்து இந்த அங்கன்வாடி கட்டிடத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்தார். மேலும் இப்பணிகளை விரைந்து முடிக்க கண்காணிப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். தற்போது இந்த கட்டிடத்திற்கான முழு பணிகளும் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கும் நிகழ்வு திங்களன்று நடைபெற்றது.

இக்கட்டிடத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பையா என்கிற கிருஷ்ணன், ஒன்றிய கழக செயலாளர் எஸ்.பி.சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி சிவசாமி, இடிகரை பேரூராட்சி செயலர் விஜயகுமார். மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஆர்.கோபால், ஒன்றியக்குழு உறுப்பினர் குப்புராஜ் உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மதிமுக நிர்வாகிகள் விசுசவராஜ், சம்பத் மற்றும் காங்கிரஸ், கொமதேக விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

முன்னதாக அங்கன்வாடி கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து கட்டிடத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனுக்கு நன்றி தெரிவித்து செங்காளிபாளையம் பொதுமக்கள் ஏராளமானோர் சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

Check Also

ஸ்டேட் வங்கி கிளார்க் நியமனங்களில் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு சு.வெங்கடேசன் எம்.பிக்கு பதில் அளிக்க ஸ்டேட் வங்கிக்கு நிதி அமைச்சகம் அறிவுறுத்தல்

மதுரை டிசம்பர் 2: ஸ்டேட் வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான துவக்க நிலைத் தேர்வு முடிவுகளில் வெளியிடப்பட்ட கட் ஆஃப் மதிப்பெண்கள் ...