கோவை: வன்முறை வெறியாட்டத்தை தடுத்து நிறுத்துக – தமிழக அரசுக்கு CPIM வலியுறுத்தல்!

22.9.2016 இரவு கோவை துடியலூர், சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் இந்து முன்னணி அமைப்பைச் சார்ந்த திரு. சசிகுமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தக் கொலையை வன்மையாகக் கண்டிக்கிறது. கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது.

ஆனால், இந்தக் கொலையைப் பயன்படுத்தி இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள், கோவை நகரம் முழுவதும் பொதுச் சொத்துக்கும், தனியார் சொத்துக்கும் கடும் சேதத்தை விளைவித்துள்ளதோடு, நகரத்தின் இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறார்கள். குற்றவாளி யார் என கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே, கண்ணில் பட்ட சிறுபான்மையினரின் கடைகளை உடைப்பதும், சொத்துக்களை சேதப்படுத்துவதும், சூறையாடுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

காவல்துறை இந்தக் கொலைக்கு பின்னர், இத்தகைய நிலையை எதிர்பார்த்திருக்க வேண்டும். எந்தவொரு கொலை நடந்தாலும் அதனை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவதற்காக, பொதுச் சொத்துக்களை அழித்தொழிப்பது என்பதை வன்முறையாளர்கள் தங்கள் கொள்கையாக வைத்திருக்கிறார்கள். ஆனால், காவல்துறை எவ்வித முன் யோசனையும் இன்றி இருந்துள்ளது.

சிறுபான்மை அமைப்பினர் நடத்தும் பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தளங்கள், கடைகள், வீடுகள் பல இடங்களில் தாக்கப்பட்டுள்ளன. கடையிலிருந்த பொருட்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் கொளுத்தப்பட்டுள்ளன. அரசு மற்றும் காவல்துறை வாகனங்களும் இதில் தப்பவில்லை. ஆனால், காவல்துறை வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தவோ, கலைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. பல காணொளிக் காட்சிகளைப் பார்க்கும்போது, காவல்துறையினர் பல இடங்களில் வன்முறை வெறியாட்டத்தை வேடிக்கைபார்த்தபடி, அவர்களுடனே பயணிப்பதையும் பார்க்க முடிகிறது. இறந்தவரின் உடலை, பதட்டம் மிக்க பகுதிகளின் வழியாக, ஊர்வலமாக எடுத்துச் சென்று கலகம் விளைவிக்கும் முயற்சியிலும் வன்முறையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கொலையையும், வன்முறை வெறியாட்டத்தையும் வன்மையாகக் கண்டிக்கிறது. கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்வதுடன், வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்து, வெறியாட்டத்தை உடனடியாக நிறுத்த போதுமான காவல் ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது. நகரத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் வணிகப் பெருமக்களும், அரசியல் கட்சிகளும், மக்கள் அமைப்புகளும்  ஒற்றுமையாக நின்று வன்முறைக்கு எதிராக தங்கள் குரலை எழுப்பவேண்டுமெனவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்க களமிறங்கி பணியாற்ற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

வன்முறையாளர்களின் ஆத்திரமூட்டலுக்கு இரையாக வேண்டாம் என பொதுமக்களை வேண்டிக் கொள்கிறது.  தமிழக அரசு உடனடியாக அமைச்சர்களையும். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் களத்தில் இறங்கச் செய்து அமைதியை ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுத்த வேண்டுமெனவும், துரிதமாக செயல்பட்டு அமைதியை மீட்டெடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...