கௌரவக் கொலைகளைத் தடுத்து நிறுத்த தனி சட்டம் அவசியம் சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

கௌரவக் கொலைகள் எதுவுமே தமிழகத்தில் நடக்கவில்லை, எனவே தனி சட்டம் தேவையில்லை என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் சட்டமன்றத்தில் கூறியிருப்பது தமிழகத்தின் உண்மை நிலையை மறுத்து, மறைத்து செய்யப்பட்ட அறிவிப்பு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. இதற்கென்று தனி சட்டமோ, சட்டப் பிரிவுகளோ இல்லாத சூழலில், இபிகோ 302ன் கீழ் பதிவு செய்யப்பட்டு இதர கொலைகளின் கணக்கில் இவை சேர்க்கப் படுகின்றன என்பது தான் உண்மை. எவிடென்ஸ் அமைப்பின் ஆய்வின் படி, கடந்த 2 ஆண்டுகளில் 42 கௌரவக் கொலைகள் நடந்திருப்பதாகத் தெரிகிறது. வெளிவராதது இன்னும் பல. மேலும், இத்தகைய பல்வேறு சம்பவங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தலையீடு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு அளித்து, இயக்கங்கள், நீதிமன்றத் தலையீடுகள் மூலம் நீதி பெற பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் வாழ்க்கையில் இணைய முடிவெடுக்கும் போது, குறிப்பாக தலித் வகுப்பைச் சேர்ந்த ஆணும், இதர சாதிகளைச் சார்ந்த பெண்ணும் மணம் புரிய முற்படும் போது, ‘சாதிப் பெருமிதத்தை’ பாதுகாக்க, பெண்ணின் உறவினர்களே பெண்ணையும், அவரது வாழ்க்கை துணையையும் கொலை செய்வது தமிழகத்தில் பரவலாக நடைபெற்று வருகிறது. சாதிய ஒடுக்குமுறையின், தீண்டாமையின் வெளிப்பாடே இது. மறுபுறம், தன் வாழ்க்கை துணையைத் தானே தேர்வு செய்யும் உரிமையை பெண்ணுக்கு மறுக்கிற ஆணாதிக்க மதிப்பீடுகளின் வெளிப்பாடாகவும் இதைப் பார்க்க வேண்டும். கடலூரில் கண்ணகி முருகேசன் கொலையிலிருந்து, அண்மையில் மதுரையில் நடந்த விமலா தேவி கொலை வரை கண்ணுக்கு முன்னே சாட்சியங்கள் நிற்கின்றன. ஸ்தல காவல்துறையின் மீது நம்பிக்கை இல்லாமல் விமலா தேவி வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டிருப்பதும் மேற்கூறிய அமைப்புகளின் முன்முயற்சியால் தான்.

ஒரு வேளை கௌரவக் கொலை நடந்தாலும் தற்போதுள்ள சட்டப் பிரிவுகளே போதும் என்று முதலமைச்சர் விளக்கியிருக்கிறார். சதி தடுப்புச் சட்டம் வந்த போதும், மத அடிப்படைவாதிகளிடமிருந்து இத்தகைய குரல்கள் வந்தன. அதுவும் கொலை தான், இருப்பினும் தனி சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஏனெனில் சாதி, மதத்தின் பேராலும், மரபுகளின் பேராலும் செய்யப் படும் கொலைகளுக்கு பொதுவாக சமூக ஒப்புதல் உள்ளது. பெரும்பாலும் மௌன அங்கீகாரம் அளிப்பதும், புகார் கொடுக்க முன்வராத சூழலும் ஏற்படும். கணவன் வீட்டாரால் பெண்ணுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு, பெண்ணின் பெற்றோர் புகார் கொடுப்பார்கள். ஆனால் பெண்ணின் உறவினர்களே குற்றம் இழைக்கும் போது, அது மறைக்கப்படும் வாய்ப்பே அதிகம். பல தென் மாவட்டங்களில் இளம் பெண்கள் காணாமல் போன புகார்கள் ஏராளம் பதிவு செய்யப் பட்டுள்ளன. இவற்றை ஆராய்ந்தால், இதில் கணிசமான நிகழ்வுகள் கௌரவக் கொலைகளாக இருக்கக் கூடும். தனி சட்டத்தின் அவசியத்தை இவை உணர்த்துகின்றன.

தனி சட்டம் என்பது தேசிய சட்டக் கமிஷனின் பரிந்துரையாகவும் உள்ளது. நாடாளுமன்றத்தில் 2010ல் நடந்த விவாதத்திலும் இது முடிவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து விவாதிக்க ஐமுகூ ஆட்சியின் போது பிரணாப் முகர்ஜி அவர்களின் தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. ஒரு சட்ட முன்வடிவும் சுற்றுக்கு விடப்பட்டுள்ளது. மத்திய சட்டத்துக்கான நிர்ப்பந்தம் ஒரு பக்கம் இருந்தாலும், மாநிலங்களும் சட்டம் இயற்ற முடியும் என்ற அடிப்படையிலேயே தமிழக அரசுக்குத் தொடர்ச்சியான கோரிக்கைகள் வைக்கப் படுகின்றன.

தனி சட்டம் வருவதன் மூலம், கௌரவக் கொலை செய்பவர்களுக்கு மட்டுமல்ல, கொலை நடக்கும் போது உடன் இருப்பவர்களுக்கும் தண்டனை உறுதி செய்யப்படும். குற்றம் நடந்ததை பாதிக்கப்பட்டவர்கள் நிரூபிக்கும் அவசியம் இல்லாமல், குற்றம் செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரூபிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்த முடியும். கொலை நடக்கும் சூழலை உருவாக்கும் சாதி வெறியைத் தூண்டுபவர்கள் மீதும் இச்சட்டத்தைப் பயன்படுத்த முடியும். மேலும் கொலை தவிர, இத்துடன் தொடர்பான ஊர் விலக்கம், பெண்ணை வீட்டுக்குள் அடைப்பது, கட்டாய திருமணம் செய்து வைப்பது, தம்பதிகளுக்கு எதிரான மிரட்டல், அச்சுறுத்தல் போன்ற இதர குற்றங்களையும் சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியும். காவல்நிலையங்களில் கட்ட பஞ்சாயத்து செய்து பிரித்து வைப்பதைக் குற்றமாக்க முடியும்.

2013ல் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களில் 16.4 சதவிகிதம் தமிழகத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட தீண்டாமை வடிவங்கள் நிலவி வருகின்றன. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் தீண்டாமைக்கும், சாதிய பாகுபாடுகளுக்கும் எதிராகப் போர் தொடுக்க தயாராக இல்லை. குறைந்த பட்சம் ஒரு வலுவான பிரச்சாரம் கூட நடத்துவதில்லை. தென் மாவட்ட சாதிய தாக்குதல்கள்   குறித்து நீதிபதி மோகன் கமிஷன் அளித்த நிலம், வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட பரிந்துரைகளை நிறைவேற்ற எவ்வித முயற்சியும் இல்லை. முதலமைச்சரின் உரையெங்கும் சாதி, சமய பூசல்கள், மோதல்கள் என்ற வார்த்தைகள் தான் தென்படுகின்றனவே தவிர, தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் என்பது இடம் பெறவே இல்லை.

சாதிய பாகுபாடுகள், தீண்டாமை கொடுமைகள் குறித்த ஓர் ஆழமான விவாதம் தமிழக சட்டமன்றத்தின் ஒரு சிறப்பு அமர்வில் நடைபெற வேண்டும் என்று வற்புறுத்துவதோடு, கௌரவக் கொலைகளைத் தடுக்க தனி சட்டம் இயற்ற உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. தமிழகத்தின் சமூக நீதி பாரம்பரியம் முன்னெடுக்கப்பட வேண்டிய தருணம் இது, சாதி, மத எல்லை கடந்து, ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் இணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

Check Also

பல்கலைக்கழக பாடப்புத்தகத்தில் அரசியல் கட்சிகளை கொச்சைப்படுத்துவதா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரப் படிப்புகளைப் படிக்கும் மாணவர்களின் எம்.ஏ. சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் திமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் ...