கௌரவக் கொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் இயற்ற – சிபிஐ(எம்) சட்டமன்ற உறுப்பினர் சட்ட மசோதா தாக்கல்

30.9.2015

தமிழ்நாடு அரசு சட்டமன்றப் பேரவை விதி எண் 123-ன் கீழ் “கௌரவம் மற்றும் மரபு என்ற பெயரில் நிகழ்த்தப்படும், கொலை மற்றும் குற்றங்கள் தடுப்பு மற்றும் தண்டனை மசோதா – 2015” சட்ட முன்வடிவை நடப்புக் கூட்டத்தில் அறிமுகம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் அ. சவுந்தரராசன் அவர்கள் நேற்று (29.9.2015) பேரவைச் செயலகத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த சட்டமசோதா பேரவைச் செயலகத்தின் ஆய்வில் உள்ளது. அதன் நகல் இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள

(அ. சவுந்தரராசன் எம்.எல்.ஏ.,)

சட்டமன்றக்குழுத் தலைவர் – சிபிஐ (எம்),

பெரம்பூர் தொகுதி

போன்: 98417 – 48076


சாதி, மத, இன வகுப்பு அடிப்படையில் உயர்வும், மேன்மையும் பாதிக்கப்பட்டதாக கருதி கௌரவம் பார்த்து கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், வகை செய்வதற்கான ஒரு சட்டம்;

சமீப காலமாக “கௌரவம்” என்ற பெயரால் அதிக எண்ணிக்கையிலான கொலைகள், குற்றங்கள் ஒரு குடும்பம் அல்லது குறிப்பிட்ட சாதியினர் அல்லது சமூகத்தினரிடையே நடைபெறுகிறது. “கௌரவம்” என்ற பெயரால் நடைபெறும் குற்றமானது மனரீதியான, உடல் ரீதியான மற்றும் பாலியல் ரீதியான வன்முறை மற்றும் பிற நிர்ப்பந்த நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக உள்ளது. இதுபோன்ற ஒவ்வொரு குற்றத்திலும் தன் விருப்பப்படி திருமணம் செய்வதற்கான உரிமையைப் பயன்படுத்தும் பெண்ணின் குடும்பம் அதிகமாக ஈடுபடுகிறது. இக்குடும்பம் சில வேளைகளில் தாமாகவோ அல்லது பெரும்பாலும் தமது உறவினர்/நண்பர்கள் உதவியுடனோ அல்லது சாதீய அல்லது சமூகத்தினரை உள்ளடக்கிய பஞ்சாயத்து நடவடிக்கைகள் மூலமோ இக்கொலை மற்றும் குற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சில நிகழ்வுகளில், இதுபோன்ற கொலைகள் மற்றும் குற்றங்களில் “சாதிய” அல்லது சமூக பஞ்சாயத்தினரே முக்கியக் குற்றவாளிகளாக செயல்படுகின்றனர்.

இதுபோன்ற பஞ்சாயத்து அல்லது சாதிய அமைப்புகள் பல்வேறு வகையான கட்டாய அல்லது தண்டனை நடவடிக்கைகள் மூலம் பயத்தை உருவாக்கி அதன் மூலம் சுயவிருப்ப திருமணங்களை அல்லது உறவுகளை தடுத்து நிறுத்த விரும்புகின்றனர். இருப்பினும், இதுபோன்ற குற்றங்கள் “கௌரவம்” என்ற கருத்தோடு நடைபெற்று அதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், பொதுவாக பழக்கவழக்கம், சம்பிரதாயம், மரபு போன்றவற்றால் நியாயப்படுத்தப்படுகின்றன.

நம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளான வாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், குறிப்பாக தன் உடலின் மீதான சுதந்திரம் மற்றும் யாருடன் இருக்க வேண்டும், வாழ வேண்டும் என்ற உரிமையை இதுபோன்ற செயல்கள் மீறுகின்றன. பெற்றோர்களின் இச்செயல்கள் ஒரு பெண் / ஆண் தான் விரும்பும் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை தடுத்து அதன் விளைவாக அவள்/அவன் கருத்து சுதந்திரத்தை முடக்குகின்றன. ஒரு திருமணம் நடைபெற சட்டப்படி முழு சம்மதம் முக்கியமான தேவை.

இருப்பினும் “கௌரவம்” என்ற பெயரால் நடைபெறும் கொலை மற்றும் குற்றங்களுக்கு தண்டனை வழங்கக்கூடிய சட்டம் ஏதும் இந்தியாவில் இல்லை. தவிர சாதீய மத அமைப்புகள் அல்லது சமூக பஞ்சாயத்துகளால் சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்படும் கொடூர குற்றச்செயல்கள், அவற்றில் ஈடுபடும் பஞ்சாயத்துகளை / நபர்களை தண்டிக்க சட்டம் ஏதும் இல்லை. சில குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 1860, பிரிவுகளில்வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆனால், “கௌரவம்” என்ற பெயரால் நிகழ்த்தப்படும் சட்டத்திற்கு புறம்பான மொத்த கொடூரங்களையும் கணக்கில்கொண்டு தகுந்த தண்டனைகளை வழங்க இவை போதுமானதாக இல்லை. எனவே, ஒரு தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டிய கட்டாய சூழல் உருவாகியுள்ளது.

இந்திய குடியரசின் அறுபத்தி ஆறாம் ஆண்டில் தமிழக சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுக.

 1. (அ) இச்சட்டம் கௌரவம் மற்றும் மரபு என்ற பெயரில் நிகழ்த்தப்படும் குற்றங்கள் தடுப்பு மற்றும் தண்டனை மசோதா 2015 என வழங்கப்பெறும்.

           (ஆ) இந்த மசோதா மாநில அரசால் அரசிதழில் அறிவிக்கை செய்யப்படும் நாள் முதல் நடைமுறைக்கு வரும்.

 1. தமிழ்நாடு எல்லை முழுவதும்.
 2. அனைத்து இளம் வயது ஆண், பெண் இரு பாலருக்கும் தமது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமையும், தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமையும், தமது உடல் மீதான உரிமையும் உண்டு. அவர்களுக்கு திருமண பந்தத்திலோ அல்லது எவ்விதத்திலோ தம் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. இவ்வித உரிமைகளைத் தடுக்கும் எந்தவித துன்புறுத்தல்களும், வன்முறைகளும், செயல்களும் இந்தச் சட்டத்தின்கீழ் குற்றமாக கருதப்படும்.
 3. (அ) தனிநபர் அல்லது நபர்கள், பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினராக இருக்கலாம், அல்லது அவர்களுடன் கூட்டாக சேர்ந்து செயல்படுபவராக இருக்கலாம், அல்லது அக்குடும்பத்தில் உள்ள ஒரு நபரின் அல்லது நபர்களின் வேண்டுகோளின் பேரிலோ அல்லது ஒரு அமைப்பிலுள்ள உறுப்பினர் அல்லது சாதி அல்லது பிரிவு அல்லது குழு அல்லது சமுதாய பஞ்சாயத்தின் (எந்த விதமான பெயரில் அழைக்கப்பட்டாலும்) பேரிலோ, பிரிவு 3ன் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை செயல்படுத்த விரும்பும் ஒரு பெண்ணையோ அவளது துணைவரையோ (அல்லது அவளோடு உறவாடும் நபர் அல்லது நபர்களையோ) கொலை செய்தால் இபிகோ பிரிவு 302ன் கீழ் கொலைக் குற்றமாக கருதப்பட்டு அதற்குரிய தண்டனை வழங்கப்படும்.

(ஆ) பிரிவு 3 – இன் கீழ் தனது உரிமையை நிலை நாட்டிய தம்பதி மீதோ அல்லது அவர்களில் ஒருவர் மீதோ அல்லது அவரது குடும்பத்தினர் மீதோ அல்லது அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர் மீதோ நிகழ்த்தும் துன்புறுத்தல் அல்லது கொலை அல்லது எந்தவிதமான வன்முறையையும், புகழ்கிற அல்லது பகிரங்கமாக ஆதரிக்கிற எந்த ஒரு நபர் அல்லது நபர்கள் அல்லது ஒரு குழுவினர் எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் அவர்களுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனையும்,

ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

விளக்கம் -1

இந்தப் பிரிவில் மரணத்தை உண்டாக்கும் செயல் உத்தரவிடப்பட்டபோது அங்கு இருந்த, சாதீய மற்றும் சமூக பஞ்சாயத்தில் பங்கேற்ற, அனைத்து உறுப்பினர்களும் கொலை குற்றம் செய்வதவராகவே கருதப்படுவர்.

 1. தனிநபர் அல்லது நபர்கள், பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினராக இருக்கலாம், அல்லது அவர்களுடன் கூட்டாக சேர்ந்து செயல்படுபவராக இருக்கலாம், அல்லது அக்குடும்பத்தில் உள்ள ஒரு நபரின் அல்லது நபர்களின் வேண்டுகோளின் பேரிலோ அல்லது ஒரு அமைப்பிலுள்ள உறுப்பினர் அல்லது சாதி அல்லது பிரிவு அல்லது குழு அல்லது வகுப்பு அல்லது சமுதாய பஞ்சாயத்தின் (எந்த விதமான பெயரில் அழைக்கப்பட்டாலும்) பேரிலோ, பிரிவு 3ன் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை செயல்படுத்த விரும்பும் ஒரு பெண்ணையோ அவளது துணைவரையோ (அல்லது அவளோடு உறவாடும் நபர் அல்லது நபர்களையோ) துன்புறுத்தினாலோ அல்லது அந்த உரிமைகளை செயல்படுத்துவதை தடுத்தாலோ குறைந்தபட்சம் 1 ஆண்டு தண்டனையும் அதிகபட்சம் 10 ஆண்டுகள் தண்டனையும் அபராதமும் வழங்கப்படும்.

விளக்கம் -2

இப்பிரிவில் துன்புறுத்தல் மற்றும் தடுத்தல் என்பதற்கு உடல் ரீதியிலான மற்றும் மன ரீதியிலான கீழ்க்காணும் நடவடிக்கைகள் உள்ளடக்கப்படும்.

 1. திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை சகோதரன், சகோதரி என்று அறிவித்தல்
 2. அவர்கள் வசிக்கும் கிராமம் அல்லது பகுதியிலிருந்து திருமணம் செய்து கொண்ட தம்பதி அல்லது அவர் குடும்பத்தினர் அல்லது உறவினர்களை வெளியேற்றுதல்
 3. தம்பதி அல்லது அவர்களோடு தொடர்பில் உள்ளவர்களை அபராதம் செலுத்துமாறு கட்டாயப்படுத்துதல்
 4. தம்பதி அல்லது அவர்களது குடும்பத்தினர் அல்லது அவர்களோடு தொடர்பில் உள்ளவர்கள் மீது சமூக தடை விதித்தல் அல்லது சமூக புறக்கணிப்பு செய்தல்.
 5. தம்பதி அல்லது அவர்களது குடும்பத்தினர் அல்லது அவர்களோடு தொடர்பில் உள்ளவர்கள் மீது பொருளாதார தடை விதித்தல் அல்லது பொருளாதார புறக்கணிப்பு செய்தல்
 6. தம்பதி அல்லது அவர்களது குடும்பத்தினர் அல்லது அந்த ஆணின் குடும்பத்தினரின் நிலம் அல்லது சொத்து மீதான அவர்தம் உரிமையை மறுத்தல் அல்லது வெளியேற்றுதல்
 7. தம்பதியையோ அல்லது அவர்களில் ஒருவரையோ பரஸ்பரம் சந்திக்க விடாமலும் அல்லது இணைந்து வாழ விடாமலும், நேரடியாக மிரட்டுவது அல்லது இதர தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி மிரட்டுவது, உடல் ரீதியான, மனரீதியான உளைச்சலை ஏற்படுத்துவது.
 8. தம்பதியையோ அல்லது அவர்களில் ஒருவரையோ அல்லது அவர்களது குடும்பத்தினரையோ அல்லது அவர்களோடு தொடர்பில் உள்ள எவரையும் தண்டிப்பதாக மிரட்டுதல்
 9. அந்தப் பெண் அல்லது அவரது துணைவர் அல்லது அவர்களோடு தொடர்பில் உள்ள எவருக்கும் துன்பம் அல்லது காயங்கள் ஏற்படுத்துதல்
 10. அந்தப் பெண்ணிற்கோ அல்லது அவரது கணவருக்கோ வேறு ஒருவரை கட்டாய திருமணம் செய்து வைத்தல்
 11. பிரிவுகள் 4 (அ), (ஆ), மற்றும் 5-ன் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட நபர் அல்லது நபர்கள், தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் ஏற்புடையது அல்ல என்பதை நிரூபிக்கும் பொறுப்பு அவர்களையே சாரும்.
 12. (அ) மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட குற்றவியல் நடுவர் பிரிவுகள் 4 (அ), (ஆ) மற்றும் 5-இன் கீழ் குற்றங்கள் நடைபெறும் என்று கருதினாலோ அல்லது தகவல் பெற்றாலோ, ஒரு தடை உத்தரவின் மூலம் அத்தகைய குற்ற செயல்களை செய்ய வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் நபர் அல்லது நபர்கள் சந்திப்பதற்கு தடை விதிக்கலாம்.

            (ஆ) உட்பிரிவு (அ)ன் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எவரொருவர் மீறினாலும் அவருக்கு 6 மாதத்திற்கு குறையாத சிறைத்தண்டனையும், அதிகபட்சம் 2 வருடங்கள் வரை அபராதத்துடன் நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனையும் வழங்கப்படும்.

 1. (அ) திருமணம் செய்து கொள்ள விரும்பும் எந்த இரு நபர்களோ அல்லது ஒருவரோடு ஒருவர் உறவில் உள்ள இரு நபர்களோ தமது வயது மற்றும் சேர்ந்து வாழ விரும்பும் சம்மதத்தை வாய் மொழியாகவோ, எழுத்து மூலமோ ஒரு காவல் அதிகாரி அல்லது அரசு அதிகாரியிடம் தெரிவித்திட வேண்டும். அதை அவர்கள் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு அறிவித்திடல் வேண்டும். அந்த தம்பதி மீது காவல்துறை அல்லது மற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது.

            (ஆ) அவ்வாறு உட்பிரிவு (அ) இன் கீழ் உறுதிமொழி அளித்த தம்பதி மீது காவல்துறை அதிகாரிகளால் ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால் அது குற்றமாகக் கருதப்பட்டு – ரூ. ஒரு இலட்சம் அபராதத்துடன் கூடிய – 2 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும்.

 1. இச்சட்டத்தின் கீழ் வரையறை செய்யப்பட்டுள்ள குற்றங்கள் அனைத்தும் பிடியாணை இன்றி கைது செய்யப்படக்கூடியதும், பிணையில் விட முடியாததும், இசைந்து தீர்க்கவியலாததுமான குற்றமாக கருதப்படும்.
 2. (அ) அரசின் அனைத்துத்துறை அதிகாரிகளும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

           (ஆ) அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட குற்றவியல் நடுவரால் குறிப்பிடப்படும் மற்ற அதிகாரிகளும், அப்பகுதியில் வசிப்பவர்களும் பிரிவுகள் 4 (அ), (ஆ) மற்றும் 5-ல் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் நடைபெறப் போவதாக அறிந்தாலோ அல்லது அதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றிருந்தாலோ அது குறித்து அருகிலுள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

           (இ) உட்பிரிவுகள் 10 (அ) அல்லது (ஆ)-ஐ யார் மீறினாலும் அவர்களுக்கு 2 வருடங்கள் நீடிக்கக்கூடிய சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

 1. இச்சட்டத்தின் பிரிவுகள் மற்ற சட்டப்பிரிவுகளோடு இணைந்து இருக்குமே தவிர நடைமுறையில் உள்ள மற்ற சட்டங்களுக்கு முரணானவை அல்ல.
 2. இச்சட்டத்தில் உள்ள நடைமுறைகள் அனைத்தும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் 1973 இன் கீழ் உட்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
 3. (அ) இந்த சட்டத்தின் கீழ் வழங்கப்படும் தீர்ப்பு அல்லது உத்தரவுக்கான மேல்முறையீடு உயர்நீதிமன்றங்களில் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

            (ஆ) இப்பிரிவின் கீழ் செய்யப்படும் ஒவ்வொரு மேல் முறையீடும் இச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உத்தரவு அல்லது தீர்ப்பு பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும்.

            (இ) மேலே குறிப்பிட்ட விஷயங்களைத் தவிர, எந்த ஒரு மேல்முறையீடோ அல்லது சீராய்வு மனுவோ வேறு எந்த நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட முடியாது.

            (ஈ) உட்பிரிவு (அ)-ன் கீழ் தாக்கல் செய்யப்படும் ஒரு மேல்முறையீட்டை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும்.

 1. (1) அரசு அறிவிக்கையின் வாயிலாக இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையும் அல்லது எதனையும் நிறைவேற்றுவதற்காக விதிகளைச் செய்யலாம்.
 2. (அ) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும். மற்றும் அவை நாள்குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட அந்த நாளன்று நடைமுறைக்கு வரும்.

            (ஆ). இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைகள் அனைத்தும் நாள் குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டிருந்தாலன்றி அவை வெளியிடப்பட்ட அந்த நாளன்று நடைமுறைக்கு வரும்.

 1. இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி அல்லது பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கை அல்லது ஆணை ஒவ்வொன்றும் அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர் கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அது அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடர் அல்லது அதனையொட்டி வரக்கூடிய கூட்டத்தொடர் முடிவடைவதற்கு முன்னர் அத்தகைய விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை எதிலும் மாறுதல் எதனையும் சட்டமன்றப் பேரவையானது செய்யுமாயின் அல்லது அத்தகைய விதியோ அல்லது அறிவிக்கையோ அல்லது ஆணையோ செய்யப்படுதலாகாது அல்லது பிறப்பிக்கப்படுதல் கூடாது என சட்டமன்றப் பேரவை முடிவு செய்யுமாயின் அதன்பின்பு அந்த விதியானது அந்த அறிவிக்கையானது அல்லது ஆணையானது அதன் பின்னர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்திலேயே செல்திறம் பெறும் அல்லது நேர்விற்கேற்ப செல்திறம் பெறாது போதல் வேண்டும்; எனினும் அவ்வாறான மாறுதல் அல்லது அழித்தறவு எதுவும் அந்த விதியின்படி அல்லது அறிவிக்கையின்படி அல்லது ஆணையின்படி முன்னரே செய்யப்பட்ட ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் ஊறின்றி இருத்தல் வேண்டும்.
 2. இந்தச் சட்டத்தின் வகைமுறையை செயல்படுத்துவதில் இடர்பாடு ஏதேனும் எழுமானால் அரசு ஆணை மூலமாக இந்தச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாத வகையில் இடர்பாட்டை நீக்குவதற்குத் தேவையானவையென்றோ உகந்தவையென்றோ தனக்குத் தோன்றுகிற அத்தகைய வகைமுறையைச் செய்யலாம்.

நோக்ககாரண விளக்கவுரை

தமிழகத்தில் மனம் ஒத்து சாதிமறுப்பு திருமணம் செய்ய விழைகிற தம்பதிகளை சாதி, மத, இன, வகுப்பு அடிப்படையில் உயர்வும், மேன்மையும் பாராட்டி கௌரவம் பார்த்து அத்தம்பதியினரை அச்சுறுத்துவது, துன்புறுத்துவது, வன்முறைக்கு உள்ளாக்குவது, கொலை செய்வது அதிகரித்து வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் சாதி ஒடுக்கலுக்கு இதிலும் உள்ளாகிறார்கள். அரசியல் சட்டப்படியான சமத்துவம் மறுக்கப்படுகிற இந்த வன்கொடுமை குற்றத்திற்கு எதிராக தனிச்சட்டம் தேவைப்படுகிறது.

இந்த சட்ட முன்வடிவு மேற்சொன்ன தேவைக்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது.

. சவுந்தரராசன் எம்.எல்..,

சட்டமன்றக்குழுத் தலைவர்சிபிஐ (எம்)

பிடிஎப் கோப்பு

Check Also

மொழிப் பிரச்சனை சம்பந்தமாக 1968 தமிழக சட்டமன்றத்தில் தோழர் ஏ.பி. சிபிஐ(எம்) சார்பில் முன்மொழிந்த திருத்தங்கள்

மொழிப் பிரச்சனை சம்பந்தமாக 1968 தமிழக சட்டமன்றத்தில் தோழர் ஏ.பாலசுப்ரமணியம் சிபிஐ(எம்) சார்பில் முன்மொழிந்த திருத்தங்கள் 23.1.1968-ந் தேதியன்று தமிழ்நாடு ...