சங் பரிவார் வன்முறை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் சிறப்பான செயல்பாட்டை சகித்துக் கொள்ள முடியாத சங் பரிவார் பாசிச சக்திகள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவின் இம்முயற்சிகளை எதிர்த்து புத்தாண்டு தினத்தன்று 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற வரலாற்று சிறப்புமிக்க ‘வனிதா மதில்’ இயக்கத்தின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல் கலவரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

தற்போது தமிழகத்திலும் வன்முறை வெறியாட்டங்களை துவக்கி உள்ளனர். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள கேரள சுற்றுலா வளர்ச்சி கழக மாளிகையின் மீது  இந்துத்துவா குண்டர்கள் நேற்று இரவு (2-1-2019) நுழைந்து கண்ணாடிகளையும், வரவேற்பறையில் உள்ள கணினிகளையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். பாதுகாப்பு ஊழியர்களை அடித்து விரட்டியுள்ளனர். இம்மாளிகையில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பத்திரிகையாளர் சந்திப்பின்போது கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் மீதும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீதும், கம்யூனிஸ்டுகள் மீதும் ஆத்திரமூட்டும் வகையிலும் தாக்குதல் தொடுக்க தூண்டிவிடும் வகையிலும் பேட்டியளித்துள்ளார். இதற்கு பின்னரே, இத்தாக்குதல்கள் நடந்துள்ளது திட்டமிட்ட சதி என்பதோடு, பாஜகவின் பின்புலத்தோடு நடந்துள்ளது என சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மேலும், தமிழகம் முழுவதும் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களை நடத்திட முயற்சிப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

சங் பரிவார் வன்முறையாளர்கள் மீது அதிமுக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் தொடர்ந்து பார்வையாளராக செயல்பட்டு வருவதன் காரணமாகவே இத்தகைய சம்பவங்களில் துணிச்சலாக வன்முறை வெறியாளர்கள் மீண்டும் மீண்டும் ஈடுபட்டு வருகின்றனர். சங்பரிவார் அமைப்புகளின் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களை வன்மையாகக் கண்டிப்பதோடு இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் தூண்டி விடுபவர்கள் உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம். சங் பரிவார் வன்முறைகளை கண்டித்து குரலெழுப்ப அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு  மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Check Also

அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்க இடதுசாரிக் கட்சிகள் வலியுறுத்தல்

மே தினமான இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ...