சட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் சிபிஐ (எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு!

சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி (2021) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் பி. சண்முகம் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை மாநிலக்குழு அமைத்துள்ளது. குழு உறுப்பினர்கள் பின்வருமாறு 1. பி. சண்முகம், 2. உ. வாசுகி, 3. என். குணசேகரன், 4. க. கனகராஜ், 5. மதுக்கூர் ராமலிங்கம், 6. சு. வெங்கடேசன் எம்.பி, 7. ஜி. சுகுமாறன், 8. எஸ். கண்ணன், 9. பி. சுகந்தி, 10. தீபா, 11. கே. சாமுவேல்ராஜ்.

இக்குழு தமிழகம் முழுவதும் சென்று தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், மாதர்கள், இளைஞர்கள், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறு-குறு தொழில் முனைவோர், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஏழை, எளிய, நடுத்தர பகுதி மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக நேரில் சென்று கலந்துரையாடி அவர்களது பிரச்சனைகளை கண்டறிவதோடு, தமிழத்தின் வளர்ச்சி, தொழில், விவசாயம், வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, மாநில உரிமைகள், தமிழ் மொழி வளர்ச்சி, தமிழ் பயிற்று மொழி மற்றும் நீதிமன்ற மொழியாக செயல்படுத்துவது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதித்து தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்வார்கள்.

தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய பிரச்சனைகள் குறித்து தங்களது கோரிக்கைகள், பிரச்சனைகளை cpimtn2009@gmail.com என்ற இமெயில் முகவரிக்கும், சிபிஐ (எம்) தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்குமாறு அனைத்துப்பகுதி மக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

காண்ட்ராக்ட் அடிப்படையில் நியமிக்கப்பட்ட மருத்துவர், செவிலியர், லேப் டெக்னீசியன்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்திடுக!

தமிழகம் கோவிட் -19 (கொரோனா) பாதிப்பை எதிர்கொள்ள அரசு மருத்துவமனைகளில் நிரந்தர மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னிசீயன்கள் மற்றும் இதர சுகாதார பராமரிப்பு ஊழியர்கள் ஆகியோரின் தேவை அதிகரித்த போது. தமிழக அரசு மேற்படி பணியாளர்களை காண்ட்ராக்ட் அடிப்படையில் நியமித்தது. இந்த பணியாளர்களின் செயல்பாடு, தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தவும், பரவலைத் தடுக்கவும் பயன்பட்டது. மிகக் கடுமையாக பணியாற்றிய மேற்படி ஊழியர்களை தமிழக அரசும், அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கீகரித்து பாராட்டி உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பலமுறை மேற்படி ஊழியர்களைப் பாராட்டியும், அவர்களுக்கான பாதுகாப்பு குறித்து தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கைகள் மூலம் கவனப்படுத்தியுள்ளது.

ஆனாலும் காண்ட்ராக்ட் மூலம் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள் ஆகியோருக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பது வேதனையானது ஆகும். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றியவர்களுக்கு வெகுமதி அளிப்பதாக வாக்குறுதி அளித்த தமிழக அரசு அவர்களுக்கு மாத ஊதியம் வழங்காதது, பணியில் இருக்கும்போது உணவு வழங்காமல் இருப்பது போன்றவை கண்டிக்கத்தக்கது. எனவே, மாத ஊதியம், பணியில் இருக்கும்போது உணவு வழங்குவது ஆகியவற்றை உறுதி செய்வதோடு, காண்ட்ராக்ட் அடிப்படையில் நியமிக்கப்பட்ட மருத்துவர், செவிலியர், லேப் டெக்னீசியன் அனைவரையும் பணிநிரந்தரம் செய்திட வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

HBL தடுப்பூசி மையத்தை பொதுத்துறையாக செயல்படுத்தி உற்பத்தியை உடனடியாக தொடங்கிட நடவடிக்கை எடுத்திடுக!

மத்திய அரசின் சார்பில் செங்கல்பட்டுக்கு அருகில் சுமார் 600 கோடி செலவில் எச்.பி.எல். தடுப்பூசி மையம் சர்வதேச தரத்துடன் உருவாக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைந்த தடுப்பூசி மையத்தை மூடிவிடவும், தனியாருக்கு தாரை வார்க்கவும் மோடி அரசு முடிவு செய்துள்ளது. இதை மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கொரோனா உள்ளிட்ட அனைத்து வைரஸ்களையும் தடுப்பதற்கான தடுப்பூசிகளை தயாரிப்பதற்கான மையமாக இதை பயன்படுத்திட வேண்டுமெனவும், இந்த மையத்தை தொடர்ந்து பொதுத்துறையாக செயல்படுத்திட வேண்டுமெனவும் மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது. இந்த தடுப்பூசி மையத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்துள்ள நிலையில், சானிடைசர் உள்ளிட்ட கிருமிநாசினி மற்றும் 10க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான ஆர்டர்களை இந்த தடுப்பூசி மையத்திற்கு தமிழக அரசு வழங்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

Check Also

கொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திடுக – தமிழக முதல்வருக்கு சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் கடிதம்!

கொரோனா காலத்திற்கு மின் கட்டணத்தை குறைத்திட வேண்டுமென தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களுக்கும், மின்சாரத்துறை அமைச்சர் திரு. ...