சட்டப்பேரவை வளாகத்திற்குள் பத்திரிகையாளர்களுக்கு கெடுபிடியை நீக்குக

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (24.8.2016) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற அனுமதி மறுக்கப்படுகிறது. சட்டமன்ற வளாகமே காவல்துறையின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு தேவையற்ற கெடுபிடிகள் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான ஊடகத்துறை தங்களது கடமையை செய்யவிடாமல் தடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறதோ என்ற ஐயப்பாடு எழுகிறது.

சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள செய்தியாளர் அறைக்கு செல்வதற்கு கூட தேவையற்ற கெடுபிடி உருவாக்கப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் பேரவை வளாகத்திற்குள் செல்வதற்கும், வெளியே வருவதற்கும் கூட பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. அதுமட்டுமின்றி வழக்கமாக தலைவர்கள் செய்தியாளர்களை சந்திக்கும் 4-ம் எண் நுழைவு வாயில் அருகே நிற்கவும் கூட செய்தியாளர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்று சட்டப்பேரவையில் முதல்வர் பெருமிதம் பொங்க கூறுகிறார். ஆனால் சட்டப்பேரவை வளாகத்தில் கூட தேவையற்ற கெடுபிடிகள் நுழைக்கப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் தங்களது பணியை செவ்வனே செய்யும் வகையில் உறுதுணையாக இருக்க வேண்டிய அரசு எதிர்மறையாக நடந்து கொள்வது முறையல்ல. எனவே புதிதாக ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கெடுபிடிகளை உடனடியாக நீக்கிக் கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

Check Also

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக யாழ்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் இடிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் ...