சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33% தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் சட்டத்தை நடப்பு மழைக்கால கூட்ட தொடரிலேயே நிறைவேற்று!

சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33% தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் சட்டத்தை நடப்பு மழைக்கால கூட்ட தொடரிலேயே நிறைவேற்று!

2017 ஜூலை 15-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் 10 மையங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

அன்பான நண்பர்களே பெரியோர்களே,

இந்தியா உலகின் மிகப்பெரும் ஜனநாயகம் என பேசப்படுகிறது. ஆனால் அரசியலைத் தீர்மானிக்கும் மன்றங்களில் சமூகத்தின் சரிபாதியான பெண்கள் இடம் பெற உத்தரவாதம் இல்லாத நிலையில், ஜனநாயகத்தின் உண்மையான உள்ளடக்கம் நடைமுறையில்  இல்லை. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களின் பங்கேற்பு 10 சதவீதத்தை ஏன் தாண்டுவதில்லை? சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பின்னும் இக்குறைபாடு நீடிப்பதை மாற்றி அமைக்க வேண்டாமா? இட ஒதுக்கீட்டுக்குள் இட ஒதுக்கீடு, ஒரே தொகுதியில் ஆண், பெண் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் வேட்பாளர் பட்டியலில் பெண்கள் 33% இடம் பெறுவது என்று பல ஆலொசனைகள் விவாதிக்கப்பட்டு, இறுதியில் தொகுதிகளில் 33% பெண்களுக்கு ஒதுக்கீடு செய்வது தான் பலன் தரும் என்ற முடிவுக்கும் வந்து, மாநிலங்களவையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 2010ல் அரசியல் சட்ட 108வது திருத்த மசோதாவுக்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டு விட்டது. இந்த அழுத்தத்தைக் கொடுத்ததில், வெளியிலிருந்து அரசுக்கு ஆதரவு அளித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு முக்கிய பங்குண்டு. ஆனால் இம்மசோதா மக்களவைக்கு வராமலே கிடப்பில் போடப்பட்டு விட்டது. தற்போது மத்தியில் ஆளும் பாஜகவுக்கு மக்களவையில் அறுதி பெரும்பான்மை உள்ளது. அதை வைத்து, மக்களின் வாழ்வை நாசமாக்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன. ஜனநாயகத்தை செழுமைப்படுத்தும் இச்சட்டத்தை நிறைவேற்றுவதில் எது அவர்களுக்குத் தடையாக உள்ளது? ஆணாதிக்க மனப்போக்கு தவிர வேறு எதுவும் தடைக்கல்லாக இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை ஊசலாட்டம் எதுவும் இன்றி உறுதியாக இக்கோரிக்கையை ஆரம்பம் முதலே வலியுறுத்தி வருகிறது.

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை அதிர்ச்சியளிக்கும் அளவு நடைபெற்று வருகிறது.  வருடத்துக்கு சராசரியாக 30000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்டும் நிர்பயா பேரில் ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படாமலே இருக்கும் அவலம் நீடிக்கிறது. சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பெரும் பலவீனம் நிலவுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் துயரத்தில் மூழ்க, குற்றம் சாட்டப் பட்டவர்கள் சுதந்திரமாய் வாழும் முரண்பாடு அதிகம் முன்னுக்கு வருகிறது.

மத்திய மாநில அரசின் பொருளாதார கொள்கைகள் மக்களின் வாழ்வுரிமையைத் தாக்கும் போது, பெண்கள் அதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். 100 நாள் வேலையாக இருக்கட்டும், ஸ்கீம் தொழிலாளிகள், அமைப்புசாரா தொழிலாளிகள், இன்று சரக்கு மற்றும் சேவை வரியால் அவதியுறும் பட்டாசு தீப்பெட்டி தொழில்கள் இவையெல்லாம் பெண் தொழிலாளிகள் நிறைந்திருக்கும் பிரிவுகள். பொது துறை தனியார்மயமாகி, வேலை வாய்ப்புகள் சுருங்கும் போது பெண்களின் வேலை வாய்ப்பும் கேள்விக்குறியாகிறது. பெண்ணாக மட்டுமல்ல, நகர்ப்புற கிராமப்புறதொழிலாளியாக, நாட்டின் குடிமகளாக என 3 மட்டங்களில் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள். மேலும் தலித் பழங்குடியின பெண்கள் சாதி உள்ளிட்ட அடிப்படைகளில் தீவிரமான ஒடுக்குமுறைக்கு உள்ளாக்க படுகிறார்கள். மதவெறி நடவடிக்கைகளால் சிறுபான்மை பெண்கள் குறி வைத்துத் தாக்கப்படுகிறார்கள்.

சமூகத்தின் சரிபாதி கண்ணியமாகவும் கவுரமாகவும் பாதுகாப்பாகவும் இல்லை எனில் அந்த சமூகத்தின் கண்ணியமே பாதிக்கப்படும் என்பதை இன்று பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலை மாற, 33% இட ஒதுக்கீடு சட்டமாக்கப்பட நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை ஜூலை 15ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது. இந்த ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் 10 மையங்களில் மாவட்ட தலைநகரங்களில்  நடைபெறவுள்ளது. ஆதரவு தந்திடுக!

பெண்ணடிமை பெருங்கோட்டை மதில்கள் பொடி படட்டும்
கைகள் உயரட்டும், தலைகள் நிமிரட்டும்
வானத்தின் ஒருபாதி அங்கே அமரட்டும்

Check Also

‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’ : சிபிஐ(எம்) சார்பில் புத்தகம் வெளியீடு…!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் ‘‘ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்’’ புத்தகம் வியாழனன்று வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் ...