சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அதிமுக அரசு தோல்வி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தலைமையில் சென்னையில் இன்று (27.6.2016)  நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி.சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

  1. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் அதிமுக அரசு தோல்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, வழிப்பறி, பெண்கள், குழந்தைகள் கடத்தல் மற்றும் பாலியல் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளன. தலைநகர் சென்னை “கொலைகள் நகரமாக” மாறி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் மட்டுமே நான்கு வழக்கறிஞர்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம் பெண் பொறியாளர் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது அனைவரது ரத்தத்தையும் உரையச் செய்துள்ளது. தனியாக வீடுகளில் இருக்கும் பெண்கள் தொடர்ந்து கொலை செய்யப்படுகின்றனர். வீடுகள், வியாபார நிறுவனங்கள கொள்ளையடிப்பது அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரியில் கொலையாளிகளை பிடிக்கச் சென்ற காவலர் படுகொலை செய்யப்பட்டுள்ளதிலிருந்து கூலிப்படையினர் மற்றும் சமூக விரோத காரியங்களில் ஈடுபடுவோர் அச்சமின்றி நடமாடுவதை காட்டுகிறது. பொதுமக்கள் அனுதினமும் அச்சத்துடன் வாழ்ந்து வரும் சூழல் அதிகரித்துள்ளது.

இத்தகைய மோசமான சூழ்நிலையை தமிழகம் சந்தித்து வரும் சூழலில்,  ஆளுநர் உரையின் போது “தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாகவும், சமூக விரோத சக்தியினர் ஒடுக்கப்பட்டுள்ளதாகவும்” முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளது நகைப்புக்குரியதாகும். நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கட்டுப்படுத்துவற்கு அதிமுக அரசு கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை என்பதே மேற்கண்ட சம்பவங்கள் சுட்டிக்காட்டுகிறது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மறுபக்கம் தமிழக அரசும், காவல்துறையும் எதிர்கட்சிகள் மற்றும் மக்கள் அமைப்புகளின் சாதாரண ஜனநாயக உரிமைகளையும், இயக்கங்களையும் கட்டுப்படுத்திட கடுமையான வழிமுறைகளை கையாள்கின்றன. காவல்துறையினரை பயன்படுத்தி எதிர்கட்சிகள் மற்றும் மக்கள் அமைப்புகளின் இயக்கங்களை முடமாக்குவதை தான் அதிமுக அரசு குறியாக கொண்டுள்ளது. மறுபக்கம் சமூக விரோத சக்திகள், கூலிப்படையினரை கட்டுப்படுத்தி பொது அமைதியினை பாதுகாப்பதில் அதிமுக அரசு தோல்வியடைந்து விட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சுட்டிக்காட்டுகிறது.

எனவே அதிகரித்து வரும் கூலிப்படையினர் மற்றும் சமூக விரோத சக்திகளை கட்டுப்படுத்திட உறுதியான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமெனவும்; மாநிலம் முழுவதும் இரவு நேரக் காவல் கண்காணிப்பு பணிகளை அதிகப்படுத்திடவும், முக்கியமான சாலை, சந்திப்புகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்டு மக்கள் அதிகமாக கூடுமிடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்திட வேண்டுமெனவும்;  கூலிப்படையினர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனையை நீதிமன்றங்கள் மூலம் பெற்றுத் தர உரிய நிர்வாக ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை கோருகிறது.

2. மாணவர் சங்கத் தலைவர்கள் கைது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

திண்டிவனத்தில், புதுச்சேரி சாலையில் அரசு உதவி பெறும் செயிண்ட் பிலோமினா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நெய்க்குப்பி கிராமத்தைச் சேர்ந்த தலித் கூலித் தொழிலாளியின் மகள் ஆனந்தி +2 வகுப்பு படித்து வருகிறார். இவர் ஜூன் 23 அன்று காலை பள்ளியில் உள்ள கழிப்பறையில் கழுத்து அறுபட்ட நிலையில் மயங்கி உயிருக்குப் போராடும் நிலையில் கிடந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மன அழுத்தம் காரணமாக தனது கழுத்தை மாணவி ஆனந்தியே அறுத்துக் கொண்டதாக காவல்துறையினர் ஆனந்தியின் தந்தையிடம் எழுதி வாங்கியுள்ளதாக தெரிகிறது. ஆனால் உண்மையில், பள்ளியில் கல்விக் கட்டணத்தை உடனே செலுத்த பள்ளி நிர்வாகம் தொடர்ந்து சில நாட்களாக நிர்ப்பந்தித்தன் காரணமாகவே மாணவி ஆனந்தி மேற்கண்ட நிகழ்வுக்கு தள்ளப்பட்டுள்ளார். இச்சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகமே முழுப்பொறுப்பாகும்.

எனவே மாணவி ஆனந்தியை மன உளைச்சலுக்கும், தன்னை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கும் ஆளாக்கிய பள்ளி நிர்வாகத்தின் மீது குற்றவியில் ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும், குற்றச் செயலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

இந்த கொடிய சம்பவத்தை கேட்டறிந்து உண்மை விபரம் அறிய பள்ளிக்குச்  சென்ற இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அறிவழகன் உள்பட 13 மாணவர்களை காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கி, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. பள்ளி நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரிலேயே மாணவர்கள் மீது காவல்துறை இந்த காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இந்த கொடிய மனித நேயமற்ற செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாணவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்றும், அவர்கள் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென்றும், மாணவர்களைத் தாக்கிய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட மாணவி ஆனந்திக்கு உரிய சிகிச்சையும், நிவாரண உதவியும் வழங்கிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

 

Check Also

சட்டப்பேரவைத் தேர்தல்: சிபிஐ(எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் சிபிஐ (எம்) தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு! சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி (2021) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...